Tuesday, October 16, 2012

தந்தை பெரியார் தமிழினத்தின் துரோகியா? வாலாசா வல்லவன்


தந்தை பெரியார் தமிழினத்தின் துரோகியா?


வாலாசா வல்லவன்

                   தந்தை பெரியார் அவர்கள் தமிழின விடுதலைக்குக் குரல் கொடுத்த தலைவராவர். தமிழ்நாட்டு விடுதலைக்கு அவர் அளவுக்குக் குரல் கொடுத்தவர்களோ அதற்காகப் போராடியவர்களோ வேறு யாரும் இல்லை என்பதே உண்மை. அப்படிப் போராடிய பெரியாரை ‘எழுகதிர்’ இதழின் ஆசிரியர் அருகோ, “பெரியார் திட்டமிட்டே தமிழினத்தைச் சீரழித்த கன்னடியர் என்றும் பெரியார் வேண்டுமென்றே திராவிட நாட்டு கோரிக்கையை வைத்துத் தமிழினத்தைப் பலவீனப்படுத்தினார் என்றும், காஞ்சி பெரியவாள், பெரியார் என்ற இரு கன்னடர்களும் தான் தமிழகத்தை மேய்ந்து நாசம் செய்தவர்கள் என்றும் அக்டோபர் எழுகதிரில் எழுதியுள்ளார். காவிரிப் பிரச்சினையில் திரையுலகினரின் காவிரிப் போராட்டத்தை வலுவிழக்க வைக்க ரஜினி செய்த கீழ் அறுப்பு வேலைகளைக் கூறவந்த அருகோ வேண்டுமென்றே பெரியாரை வம்புக்கு இழுக்கிறார். இதோ அருகோவின் கூற்று:
“இக்கொடுமை இன்றல்ல, சென்ற நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. சென்ற 20ஆம் நூற்றாண்டிலும் இரு கன்னடர்கள்தாம் தமிழகத்தை மேய்ந்தார்கள். இதைச் சொல்கிறபோது பல தமிழர்களே நம்மீது பாய்வார்கள் என்று தெரியும் என்றாலும் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒருவர் காஞ்சி சங்கர மடத்திற்குத் தலைமை வகித்த மகாப் பெரியவாள் என்று அவர்களால் கொண்டாடப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் எனப்படும் கன்னடப் பார்ப்பனர். மற்றவர் பெரியார் ஈ.வெ.ரா எனும் பார்ப்பனரல்லாதாரின் படைத் தளபதி. ஆம்; இந்த சந்திரசேகரக் கன்னடர் தமிழ்நாட்டின் ‘மகாப் பெரியவாளாய்’ இவர் தலையெடுக்கும் வரை தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஓரளவு தமிழ்ப் பற்றுடனேயே இருந்து வந்தனர். இந்த ஆள் தான் முதன்முதலாக “தமிழை நீசபாஷை, ‘பூஜை வேளையில் அதிலே பேச மாட்டேன்’ என்று கூறியதுடன், ஆண்டாளின் திருப்பாவைப் பாடலில் வரும் “தீக்குறளைச் சென்றோதீர்” என்ற சொற்றொடரும் ‘தீமை பயக்கும் புறம் பேசாதீர்’ என்ற பொருளுக்கு மாறாக. ‘தீய திருக்குறளைப் படிக்க கூடாது’ என்று பொருள் சொன்னவராவர். அதுவரை தமிழ்ச் சைவ சிந்தாத்தத்திலும் ஆழ்வார்களின் அருளிச் செயல் வழிவந்த வைணவத்திலும் பிடிப்புக் கொண்டிருந்த தமிழ்ப் பிராமணர்களை வடமொழி மயப்பட்ட வைதிக சமயம் என்று தமிழுக்கு முற்றிலும் பகைவர்களாகவே மாற்றியதில் இக்கன்னடருக்கே பெரும் பங்குண்டு.
அதைப் போலவே பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும் தான் பெருந்தலைவராக வளருகிற வரை தமிழிசை இயக்கம், தமிழ்மறை (திருக்குறள் பரப்பு) இயக்கம், தமிழ்நாடு விடுதலை இயக்கம் என்று தீவிரம் காட்டி முதலாவது இந்தி எதிர்ப்புக்குத் தலைமை தாங்கித் தமிழர் தந்தையாகவே பரிணமித்தவர். ஆந்திரரும் கன்னடரும் மலையாளிகளும் அன்றைக்கு நடைமுறையில் இருந்த திராவிட நாட்டை (சென்னைத் தலை மாகாணத்தை) மொழி வழியில் பிரிக்க வேண்டும் என்று போராடியபோது, திராவிட நாட்டுக் கோரிக்கையை முன் வைத்துத் தமிழர்களைத் திசை திருப்பினார் என்பதையும் மறந்து விட முடியாது. மற்றவர்கள் மொழிவழி மாநிலப் பிரிவினைக்காகக் களமிறங்கிய நேரத்தில் அதற்கு எதிர் திசையில் தமிழர்களைத் திராவிட நாட்டு பிரிவினைக்காகக் களமிறங்கச் செய்தவர் பெரியாரேயாவர்.
சரி! திராவிட நாட்டுக்காகக் குரல் கொடுப்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழ்ப் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட குரல் கொடுத்தாரா என்றால் அதுவுமில்லை. மாறாகத் தேவிகுளம் பீர்மேட்டுத் தமிழர்கள் தாய்த் தமிழகத்துடன் இணையப் போராடிய போது அவை மலையாளிகளுக்கே சொந்தமானவை எனக் கூறினார். அதுமட்டுமல்ல அண்டை மாநிலத் தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்த மா.பொ.சி. போன்றவர்களைப் “பார்ப்பனக் கைக் கூலிகள்” என்று கொச்சைப்படுத்தி எல்லை மீட்புப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தினார்...... கருநாடகத்தைச் சேர்ந்த தமிழ் பகுதிகளைத் தாய் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்று போராட்டமே எழவில்லை என்பதையும் எண்ணிப் பார்த்தால் ஒரு கன்னடர் அன்று தமிழினத் தலைவராகக் காட்சியளித்ததுதான் காரணம் என்பது விளங்கும்.
இன்னும் சொன்னால் வளமான தமிழ்ப் பகுதிகள் தாய்த் தமிழகத்துடன் சேர்ந்து, தமிழகம் தன் சொந்தக் கால்களில் நின்றுவிடக் கூடாது; என்றைக்கும் தமிழ்நாடு அண்டை மாநிலங்களின் தயவில்தான் வாழ்ந்து வரவேண்டும் என்று திட்டம் போட்டே இந்த இரு கன்னடரும், ஆன்மீகத்திலும் லௌகீகத்திலும் தமிழர்களைத் திசை திருப்பினார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது” (எழுகதிர், அக்டோபர், பக். 10-12)
periyar_450பெரியாரையும் காஞ்சி சங்கராச்சாரியையும் ஒப்பிட்டு எழுத வேண்டுமென்பதற்காகவே பல வரலாறுகளை மூடி மறைக்கிறார் அருகோ. தமிழகத்தில் பல்லவராட்சியில் தொடங்கிய பார்ப்பனர் ஆதிக்கம் சோழர் ஆட்சியில் உச்சகட்டத்தை அடைந்தது. இராசராச சோழன் ஆட்சியில் பல ஆயிரம் பார்ப்பனக் குடும்பங்களை வரவழைத்து ஆலயங்களில் சமசுகிருதம் ஓதுவதற்காக அவர்களுக்குச் சமசுகிருத வேதப் பாடசாலைகளையும், ஏற்படுத்திக் கொடுத்து, கோவில்களில் முன்னர் இருந்த தமிழ் வழிபாட்டை முற்றும் அழித்தான். சுமார் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் தமிழில் வழிபாடு இல்லை என்பதே உண்மை வரலாறு.
அருகோ கூறுவது போல் கடந்த நூற்றாண்டு வரை பார்ப்பனர்கள் தமிழில் வழிபாடு செய்ததாகவும் காஞ்சி பெரியவாள் வந்த பிறகுதான் தமிழகப் பார்ப்பனர் வடமொழியை ஏற்றனர் என்பதுவும் அண்ட புளுகும் ஆகாசப் புளுகுமாகும். தமிழக வரலாற்றையே திரிப்பதுமாகும். பெரியாரையும், பெரியவாளையும் ஒப்பிடவே இவ்வரலாற்றைத் திரிக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் 1919லேயே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தமிழகத்தில் மிகப் பெரும் தலைவராக உருவாகி விட்டார். பார்ப்பனன் மற்றும் வடநாட்டான் ஆதிக்கத்தில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்க அவர் அரும்பாடு பட்டார். அருகோ கூறுவது போல் திருக்குறள் மாநாடுகளை நடத்தி அவர் தமிழர் தலைவராக வரவில்லை. 1938லேயே தமிழர் தலைவராக வந்த அவர் 1948க்குப் பிறகே திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். அவருக்குத் தலைவர் பதவியின் மேல் ஆசையில்லை என்பதை அப்போதே அவர் கூறிவிட்டார்.
“தோழர்களே! நான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை.” (ஈ.வெ.ரா. சிந்தனைகள் முதற் பதிப்பு, 1974, பக். 2027. ‘குடியரசு’ 13-10-1940)
சென்னை கன்னிமரா ஓட்டலில் 6-10-1940 அன்று பெரியார் கூறிய மேலே கண்ட கருத்துகளில் இருந்தே அவர் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டவரல்ல என்பதை அறியலாம்.
1938இல் 'தமிழ்நாடு தமிழர்க்கே' என முழங்கிய அவர் அன்று இருந்த நீதிகட்சியினரின் கட்டாயப்படுத்தலாலும் அன்று இருந்த அரசியல் சூழ்நிலையாலும் 1939 முதல் 'திராவிட நாடு திராவிடர்க்கே' எனக் குரல் கொடுத்தார். 1953இல் ஆந்திர மாநிலம் பிரிவினை அடைந்தவுடன் அவர் மீண்டும் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தையே முன் வைத்தார். பெரியார் கடைசிவரை திராவிட நாடு கோரிக்கை வைத்ததைப் போல அருகோ எழுதியுள்ளது வரலாற்றுத் திரிபாகும். ஆந்திரர்கள் மொழிவாரி மாநிலப் பிரிவினைக் கோரிக்கையை 1921இல் தொடங்கினாலும் 1950க்குப் பிறகே வலிமையாகப் போராடினார்கள். பெரியார் 1939 முதல் திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்தார். அப்போது மலையாளிகளோ, கன்னடர்களோ தமிழர்களோ தங்களுக்குத் தனி மாநிலம் வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை. எல்லோரும் மொழிவழி மாநிலம் கோரியபோது பெரியார் திராவிட நாடு கோரிக்கையை வைத்துத் தமிழர்களை திசை திருப்பினார் என்பது உண்மைக்குப் புறம்பானதாகும்.
மொழிவழி மாநில எல்லைப் பிரிவினையின் போது பெரியார் பிற மாநிலத்தவர்களுக்குச் சார்பாக இருந்தார் என்று அருகோ எழுதியுள்ளது உண்மைக்கு மாறானதாகும். தமிழ் பேசும் மக்கள் உள்ள பகுதியை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பெரியார் கண்டித்தார்.
“பிரிவினைக்குப் பெயர் மொழிவாரி நாட்டுப் பிரிவினை: இதில் பிரிந்து போக வேண்டுமென்று வாதாடுகிறவர்கள் மொழியை ஆதாரமாகக் கொண்டு தானே பிரிவினை கேட்க வேண்டும். அதை விட்டு விட்டு வேறு மொழி 100க்கு 60, 70, 80 வீதம் பேசுகிற மக்கள் உள்ள நிலையை தங்கள் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று கேட்பது எப்படி யோக்கியமாகும்....? ஆந்திர மொழி பேசுகிற மக்களை மெஜாரிட்டியாகக் கொண்ட பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்த்துக் கொள்வதில் ஆட்சேபமில்லை. தமிழ் மொழி பேசும் மக்களைப் பெருவாரியாகக் கொண்ட நாட்டை ஆந்திராவோடு சேர்க்க வேண்டும் என்பது எப்படி 'மொழிவாரி மாகாணப் பிரிவினை என்று சொல்ல முடியும்?' மொழி வாரிப் பிரதேசப் பிரச்சினையின் தன்மை இவ்வாறு இருக்க, இனி மற்றப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்போம். அவை ஆந்திர இராஜ்யத்தின் தலைநகர் சென்னையில் இருக்க வேண்டும் என்பதும்; பொது கவர்னர் பொது அய்கோர்ட் இருக்க வேண்டும் என்பதும்; சிறிது காலத்திற்காவது ஆந்திர அரசாங்கக் காரியாலயம் சென்னையிலே இருக்க வசதியளிக்க வேண்டுமென்பதும் இவை ஒன்றுமே முடியாவிட்டால் சென்னையைத் தனி இராஜ்யம் ஆகச் செய்து அது ஆந்திராவுக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமில்லாத, டெல்லியைப் போன்ற ஒரு யூனியன் ஆக்க வேண்டுமென்றும் கேட்பவைகளாகும்.
இவைகளைப் பார்க்கும்போது, ஆந்திரர்களுக்கு இந்த விஷயங்களில் பொறுப்புள்ளதும் குறிப்பிட்டதுமான ஒரு யோசனையோ, இலட்சியமோ இல்லை என்பதாகவே தெரிய வருகிறது. ஆந்திராவின் தலைநகரம் சென்னையில் எதற்காக இருக்க வேண்டும்? இப்போது ஆந்திர நாடு அமைப்பு என்கிற பிரச்சினை ஒரு விடுதலைப் பிரச்சினையே யொழிய, பாகப் பிரச்சினை அல்ல, எப்படியெனில் சென்னை இராஜ்யம் 4 மொழிவாரிப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நாலில் ஒன்றுதான் ஆந்திரா. இப்போது ஆந்திராதான் மற்ற மூன்றையும் விட்டு விலகிக் கொள்கிறது. ஆகவே இந்த விலகிக் கொள்ளுதல் சென்னை இராஜ்யத்திலிருந்து விடுதலை பெறுதல் என்று அர்த்தமாகும். விடுதலை செய்து கொண்டு போகிறவர்கள் விடுதலை செய்து கொண்டு போக வேண்டுமே தவிர மறுபடியும் ஒன்றாக இருக்க வசதி கேட்பது பொருத்தமற்ற காரியமாகும். அது போலவே பொது கவர்னர், பொது அய்கோர்ட் இருப்பது என்பதும் அரசியல் சட்டப்படி அனுமதிக்க முடியாது. சில நாளைக்காவது சர்க்கார் நிர்வாக காரியாலயம் சென்னையில் இருக்க வேண்டும் என்று விரும்புவதும் அர்த்தமற்றதாகும். இவைகளையெல்லாம் ஒன்றாகவே, ஒன்றிலேயோ இருக்க வேண்டும் என்று கருதுகிறவர்கள் எதற்காகப் பிரிய வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் தொல்லை ஏற்படும்படி செய்ய வேண்டும் அல்லது தந்திரமான வழியில் ஆக்கிரமிப்பு செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு உண்மையான எண்ணம் ஒன்றும் இருக்க முடியாது என்பதுதான் என் கருத்து.
இவைகளையெல்லாம் விட நாம் கவனிக்க வேண்டிய சங்கதி ஒன்று இருக்கிறது. ஏதோ காரணம் சொல்லி நாம் இவர்களை உள்ளே இருக்கச் சம்மதிப்போமேயானால் பிறகு இவர்களை எப்படி வெளியேற்றுவது? அதற்கு என்ன சட்டம் இருக்கிறது? ஆந்திரா நாடு பிரிந்தது என்றால் ஆந்திரர்கள் சென்னையை விட்டு விட்டு வெளியேறி விட்டார்கள் என்றே அர்த்தம். வெளியேறினவர்களுக்கு இந்த ராஜ்யத்தைப் பற்றி பேச என்ன உரிமை உள்ளது? மடத்தை விட்டு வெளியேறின ஆண்டிக்கு நந்தவனத்தைப் பற்றிய கவலை ஏன்? என்று சொல்வது போல சென்னையைப் பற்றி யோசனை கூற இவர்கள் யார்? தமிழ்நாட்டாராவது சென்னை நகரத்தாராவது தான் இதைப் பற்றிப் பேச உரிமை உள்ளவர்கள்." (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதற்பதிப்பு, 1974, பக்கம் 724-726) (விடுதலை 7, 8-1-1953)
ஆந்திரா பிரிவினையின் போது பெரியார் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்க்கு ஆதரவான கருத்துதானே தவிர தமிழருக்கு எதிரான கருத்தல்லவே. ஆந்திரா பிரிந்தவுடன் எஞ்சியுள்ள பகுதியைத் தமிழகம் - கர்நாடகம், மலையாளம் மூன்றையும் இணைத்து ‘தட்சண பிரதேசம்’ என்கிற புதிய மாநிலத்தை உருவாக்க அன்றைய மத்திய அரசும் இராசாசியும் முயன்றபோது அதை உருவாக்க விடாமல் தடுத்து நிறுத்தித் தமிழ் மக்களின் நலத்தைக் காத்தவர் பெரியார். தட்சணப் பிரதேசம் அமைந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ், கன்னடம், மலையாளம் மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தால், பார்ப்பனர்களால் கழித்து விடப்பட்டு நம்மவருக்குக் கிடைத்து வரும் உத்தியோகங்களெல்லாம் மலையாளிகளின் கைக்குள் போய்விடும் என்று கூறித் தடுத்தார். அப்போது பெங்களூரில் இருந்த தமிழக முதல்வர் காமராசருக்குப் பெரியார் பின்வரும் தந்தியை அனுப்பினார்.
“தட்சணப் பிரதேசம் ஏற்படுவதென்பது தமிழர்களுக்கு வாழ்வா? சாவா? என்பது போன்ற உயிர் பிரச்சினையாகும். உங்களுக்கும் மற்றெல்லோருக்கும் இது தற்கொலையானது ஆகும். தட்சணப் பிரதேசம் ஏற்படுமானால் முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்குத் தமிழ் மக்களை நெருக்குவதாகி விடும். அருள் கூர்ந்து நம் எல்லோரையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டுகிறேன்" (ஈ. வெ. ரா. சி. பக்கம் 729)
காமராசர் மூலமாக தட்சணப் பிரதேசம் அமைவதைக் தடுத்தார் பெரியார். ஆந்திரா பிரிந்த பிறகு கர்நாடகமும் மலையாளமும் பிரிய வேண்டும் என்றே பெரியார் விரும்பினார்.
“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகவும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் இவை சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால் ஒன்று, கன்னடியனுக்கும் மலையாளிக்கும் இனப் பற்றோ இனச் சுயமரியாதையோ பகுத்தறிவு வளர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்புக்கிடையாது; சூத்திரன் என்பது பற்றி இழிவோ வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. அவர்கள் மத மூட நம்பிக்கையில் ஊறி விட்டார்கள்.
இரண்டு, அவர்கள் இருவருமே மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாய் இருப்பது பற்றியும் கவலைப் படாதவர்கள். ஆகவே இவ்விரு துறைகளிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங்கொண்டவர்கள்; எதிரிகள் என்றே சொல்லலாம். மூன்றாவது, இவர்கள் இரு நாட்டவர்களும் பெயரளவில் இரு நாட்டவர்களானாலும் அளவில், எஞ்சிய சென்னை இராச்சியம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்களாவார்கள். அப்படி 14இல் 7இல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3இல் ஒரு பாகத்தை அடைந்து, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டைத் “தமிழ்நாடு” என்று கூடச் சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதலே சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால் இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாகப் பிரிய நேர்ந்து விட்டது. ஆதலால் இந்தப் பிரிவினையை நான் வரவேற்கிறேன்!" (ஈ.வெ.ரா.சிந்தனைகள், பக்.730, விடுதலை அறிக்கை 11-10-55)
தமிழ்நாட்டுற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட முடியவில்லையே என்று பெரியார் 1955லேயே ஆதங்கப்பட்டார். இது குறித்த பெரியாரின் கருத்துக்கள்
“அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்பு கூட மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கூட இருக்கக் கூடதென்று பார்ப்பானும், வட நாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்துப் பிரிவினையில், ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும், அவன் எப்படிப்பட்ட தமிழனானாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இதைத் திருத்த, தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ், மேல் சபை அங்கீகத்தினர்களையும் மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். மற்றும் தமிழ்நாட்டிலுள்ள புலவர்கள், பிரபுக்கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் முயற்சிக்கும்படி அதுபோலவே வேண்டிக் கொள்கிறேன். ‘தமிழ்’, ‘தமிழ்நாடு’ என்கிற பெயர் கூட இந்நாட்டுக்கு, சமூதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டு விடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தக் காரியம் மாபெரும் அக்கிரமான காரியம் என்பதோடு மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். நம்நாடு எது? நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.” (ஈ.வெ.ரா.சிந்தனைகள், பக்கம்.731, விடுதலை அறிக்கை, 11.10.55)
தமிழ்நாடு பிரிவதற்கு முன்பே மாநில சீரமைப்பு ஆணையத்தின் அறிக்கையைப் பார்த்த உடனேயே பெரியார் இந்த அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் அவர்கள் மொழிவாரி மாநிலம் பிரிந்த 1956 முதல் தமிழ் நாடு தமிழருக்கே என்றுதான் கூறி வந்தார். “விடுதலையில்” தினமும் முதல் பக்கத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற இலட்சிய முழக்கத்தை இடம் பெறச் செய்தார்.
“என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா - பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும். அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன். வணக்கம்! வணக்கம்! வணக்கம்!" (ஈ.வெ.ரா. சி. பக். 1874) (விடுதலை தலையங்கம் 15.12.1957)
சிறைபுகும் முன் பெரியார் விடுத்த அறிக்கை. தமிழ்நாடு நீங்களாக இந்திய படத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தியவர் பெரியார்.. 1963இல் சுதந்திரத் தமிழ்நாடு ஏன்? என்ற புத்தகத்தைக் குடியரசுப் பதிப்பக வெளியீடாக வெளியிட்டவர் பெரியார். 1973இல் பிறந்த நாள் அறிக்கையில் கூட தள்ளாத 95 வயதிலும் தமிழ்நாடு தமிழருக்கே எனச் சிங்கம் போல் கர்ஜித்தார்.
“நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும் பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டிய ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். ‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொது மக்களே! இளைஞர்களே! பள்ளி, கல்லுhரி மாணவர்களே! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்." (ஈ.வெ.ரா.சிந்தனைகள், பக்.1981, 17-9-1973)
1938ல் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று குரல் கொடுத்த பெரியார் 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று போராடிய போது ஒரு போதும் தமிழர் அல்லாதவர்களை ஆதரித்துப் பேசியது கிடையாது. அவர் திராவிட நாடு என்று சொன்னாலும் தமிழகத்தை அதாவது அன்றைய சென்னை மாகாணத்தைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தி வந்தார். மொழி வாரி மாநிலம் பிரிந்தவுடன் சுதந்திரத் தமிழ்நாடு என்ற கோரிக்கையை வைத்துப் போராடிய அவரை எழுகதிர் அருகோ தமிழ் இனத்துரோகி என்பதும், திட்டம் போட்டே பெரியாரும் சங்கராச்சாரியும் தமிழர்களைச் சீரழித்தார்கள் என்று பேசுவதும் எழுதுவதும் விஷமப் பிரச்சாரமேயாகும்.
“பார்ப்பன எதிர்ப்பு அதுவும் தமிழ்நாட்டுப் பார்ப்பனரையே கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு எதிர்ப்பது என்ற திராவிடப் பார்வையால் இன்று தமிழ்நாட்டின் அதிகார வர்க்கமும் ஆதிக்க வர்க்கமும் தமிழரல்லாதவர்களையே பெரும்பான்மையாய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்” என்று எழுதும் அருகோ என்றைக்காவது திராவிடர் கழகம், தமிழ்நாட்டுப் பார்ப்பான் பிற மொழிப்பார்ப்பான் என்று பிரித்துப் பார்த்து திட்டியதைப் பார்த்ததுண்டா? அப்படி எத்தனைத் தமிழ்நாட்டுப் பார்ப்பான் தமிழின் மேல் தமிழ் இனத்தின்மேல் பற்று வைத்துள்ளான் என்று காட்ட முடியுமா? அல்லது அருகோவின் குருநாதர் மா.பொ.சிக்குக் குருவான ராஜாஜி தான் தமிழ்நாட்டின் மேல் பற்றாக இருந்தாரா? தமிழ் இனத்தை அழித்ததில் பார்ப்பனர்கள் அனைவருமே ஒன்றுதானே? பார்ப்பனரை எதிர்த்தால் இவருக்கு ஏன் கோபம் வர வேண்டும்? ‘தமிழ் நீச பாஷை’, ‘தமிழன் தீண்டத்தகாதவன்’ என்று கூறும் சங்கராச்சாரியும், தமிழனுடைய விடியலுக்காகப் பாடுபட்ட பெரியாரும் ஒன்றா?
“1950களில் திராவிடக் கட்சிகளை விமர்சித்ததில் - எதிர்த்ததில் அவருக்கு (மா.பொ.சி.) நிகர் யாரும் கிடையாது. 1960கள் வரை காங்கிரஸ் கட்சியே மா.பொ.சி.யின் பிரச்சாரத்தில்தான் திராவிடக் கட்சிகளைத் தாக்கு பிடித்ததென்றால் மிகையாகாது!” என்கிறார் அருகோ.
பெரியார் மா.பொ.சி.யை “காங்கிரசின் கையாள், பார்ப்பனர்களின் கைக்கூலி” என்று பேசியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்பதை மேலே கண்ட அருகோவின் மா.பொ.சி.யைப் பற்றிய மதிப்பீடே போதுமானதாகும். நான் ஒன்றும் கூறத் தேவையில்லை. அது சரி, அருகோ தலை மேல் துhக்கி வைத்தாடும் மா.பொ.சி. ஒரு மேலவைத் தலைவர் பதவிக்காக மலையாளி எம்.ஜி.ஆரின் காலடியில் விழுந்து கிடக்கவில்லையா? என்ன ஆச்சு மா.பொ.சி.யின் கொள்கை? பதவி எதையும் நாடாமல், தன்னைத் தேடி வந்த முதல்வர் பதவியையும் வேண்டாமென உதறிய பெரியார் எங்கே? பதவிக்காகக் கொள்கையை விட்டு ஓடிவிட்ட மா.பொ.சி. எங்கே? இனிமேலும் பொய்யான தகவல்களையும் விஷமப் பிரச்சாரங்களையும் அருகோ செய்யாமல் இருப்பதே அவருக்கு நல்லது. இன்றைய தமிழ்த் தேசிய உணர்ச்சி என்பது திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியே தவிர, மா.பொ.சி. யால் வந்ததது அல்ல என்பதை அருகோ உணர வேண்டும்.
(குறிப்பு : பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிந்தனையாளன் நவம்பர் 2002 ஏட்டில் அருகோவின் அடாவடிதனத்தைக் கண்டித்து வாலாசா வல்லவன் எழுதிய கட்டுரை

அரு.கோபலனின் அடாவடித்தனம் - இந்தி வெறியர் ம.பொ.சி.யும் பதவி வெறியர் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?



அரு.கோபலனின் அடாவடித்தனம் - இந்தி வெறியர் ம.பொ.சி.யும் பதவி வெறியர் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?

வாலாசா வல்லவன் 
தென்மொழி ஏப்பிரல் இதழில் திருத்தணியைச் சேர்ந்த வழக்குரைஞர் குப்பன் “பெரியாரின் மொழிக் கொள்கை” என்ற தலைப்பில் பெரியாரின் எழுத்துகளில் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் வெட்டியும் ஒட்டியும் எழுதியிருந்தார். தமிழை நீசை பாசை என்று சொன்ன கன்னடர் சங்சராச்சாரியைக் கண்டிக்கும் திராவிடர்கள், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன கன்னடியர் பெரியாரை மட்டும் கண்டிக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். இதை எழுதிய வழக்குரைஞர் குப்பன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிடர் கழகத்தில் இருந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் வீரமணியால் தி.க.விலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. முப்பது ஆண்டுகளாகப் பெரியாரின் மொழிக் கொள்கை என்ன என்று தெரிந்து கொள்ளாமலே குப்பன் அறிவு கெட்டத்தனமாக தி.க.வில் இருந்தாரா?
periyar_34இந்தக் குப்பன் மறுத்து எழுதியதை “தென்மொழி” மே இதழில் கவிஞர் தமிழேந்தி, சூலூர் கௌதமன், கடவூர் மணிமாறன் ஆகிய மூவரும் பெரியாரின் தமிழினச் செயல்பாடுகளை விளக்கி எழுதியிருந்தனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எழுகதிர் ஆசிரியர் அருகோபாலன், சூன் தென்மொழி இதழில் இம்மூவரின் கூற்றுக்களையும் கண்டித்து எழுதியிருந்ததோடு மட்டுமல்லாமல் பெரியாரை மிக மிக மட்டரகமான சொற்களால் வசைபாடியுள்ளார். பெரியாரை யாருமே திறனாய்வு செய்யக் கூடாதா என்கிறார். அண்டப்புளுகையும் ஆகாசப்புளுகையும் அளந்து விடும் இவருடைய ‘சாக்கடை’ எழுத்துக்களுக்குப் பெயர் திறனாய்வாம்.

 பெரியார் கன்னடராம். மறைந்துபோன காஞ்சி சங்கரனும் கன்னடராம். இருவரும் பேசி வைத்துக் கொண்டு அரசியல் துறையிலும் ஆன்மீகத்துறையிலும் தமிழ் இனத்தையே அழித்துவிட்டார்களாம். இராஜாஜி ஒரு சிறந்த தமிழராம். பெரியார் திட்டமிட்டு அவரை மட்டும் எதிர்த்தாராம். தெலுங்குப் பார்ப்பனரான பிரகாசத்தை எதிர்க்கவில்லையாம். இப்படியெல்லாம் எழுதிவிட்டு பெரியாரின் வழிகாட்டுதல் இன்னும் கூடத் தமிழகத்தில் தொடர வேண்டுமா என்று கேட்கிறார் அருகோபாலன்.
 பெரியார் தன் வாழ்நாளில் என்றுமே கன்னடராகச் செயல்பட்டதில்லை என்பது அவருடைய பேச்சுகளையும், எழுத்துகளையும் படித்தாலே தெரியும். திராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நடந்ததல்ல என்பதைப் பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் புரட்சி பெரியார் முழகத்தில் எழுதியிருந்தும் மீண்டும் பழைய பல்லவியே பாடுகிறார். காலையில் தமிழர் கழகம் என்று வைத்ததை மாலையில் பெரியார் திராவிடர் கழகமாக மாற்றிவிட்டார் என்ற பொய்யை வாய்கூசாமல் திரும்பத் திரும்பத் சொல்லி வருகிறார்.
தமிழன் தலைநிமிரவும், தமிழ்நாடு பார்ப்பன ஆதிக்கத்திலிருந்தும், வடநாட்டான் பிடியிலிருந்தும் விடுபட்டுச் சுதந்திரத் தமிழ்நாடு வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பெரியாரை இழித்தும், பழித்தும் பேசும் அருகோபாலன் தூக்கிப் பிடிக்கும் தலைவர்கள் யார்? ஒருவர் ம.பொ.சி., மற்றொருவர் ஆதித்தனார்.
தந்தை பெரியார் அவர்களின் படைபலத்தால் 1938இல் சுமார் ஓராண்டுக் காலம் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் தமிழர்களான நாம் இந்தியர்கள் அல்ல; தமிழர்கள் தனித்த இனம் என்பதை அடையாளப்படுத்தியது. அந்தப் போராட்டத்தில் தான் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கமும் ஏற்பட்டது. ஆண்களும் பெண்களும், ஏன் கைக்குழந்தைகள் அப்போராட்டத்தில் சிறையில் வதைப்பட்டனர்.
அப்போதைய முதலமைச்சர் இராஜாஜி இந்தியர்களை ஒடுக்க ஆங்கிலேயர்கள் 1908இல் கொண்டு 124ஏ குற்றவியல் சட்டத்தின்படி கடும் தண்டனை கொடுத்தார். பெரியாரைச் சிறையில் அடைத்தால் தான் இந்தப் போராட்டம் நிற்கும் என்பதால் அவரைத் தமிழர்கள் யாரும் அடிக்கடி பார்க்கக்கூடாது என்பதற்காகப் பெல்லாரி சிறையில் அடைத்தார். அப்போராட்டத்தின் போது இந்தி எதிர்ப்பு போராட்ட வீரர்களுக்கு எதிரான போராட்டத்தை ஓர் ஆண்டு முழுவதும் இந்திக்கு ஆதரவு இராஜாஜி ஆட்சிக்கு ஆதரவு தேடி நடத்தியவர்தான் ம. பொ. சி. இதை ம. பொ. சி.யின் வாக்குமூலமே கூறும்.
 “இந்தி எதிர்ப்பானது தமிழ்மொழியைக் காப்பதற்காக அல்லாமல், தேசவிடுதலைக்குப் பாடுபட்டு வந்த ஒரே அமைப்பாகிய காங்கிரசுக் கட்சியை வீழ்த்துவதற்காகவும், அப்போதுதான் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த ஜஸ்டிஸ் கட்சிக்குப் புத்துயிரளிப்பதற்காகவுமே நடைபெறுகிறது என்று நாங்கள் கருதியதால், அந்த எதிர்ப்பை முறியடிக்க முயன்றோம். சென்னை மாவட்டக் காங்கிரசுக் கமிட்டியின் சார்பில் பொதுக் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தினேன். மற்றும் வட்டந்தோறும் அமைந்திருந்த காங்கிரசுக் கமிட்டிகள், தேசிய மன்றங்கள் சார்பிலும் கூட்டங்களும், ஊர்வலங்கள் நடத்தத் தூண்டுதலாக இருந்தேன். வடசென்னையைப் பொறுத்த வரையில் நான் தான் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாதலால், இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்புக் காட்டி நடந்த பிரச்சாரத்திலே நான் பெரும் பங்கு கொண்டேன். இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்பு காட்டும் அரசியல் பிரச்சாரத்திலே நான் எல்லை கடந்த ஆர்வங் காட்டினேன். சென்னை நகரில் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலும் சுற்றுலா சென்று வந்தேன்” (ம. பொ. சி. எனது போராட்டம் பக். 158)
 ம.பொ.சி. அப்போது காங்கிரசில் இருந்தார். அதனால் அவ்வாறு செய்தார் என்று கூட விட்டுவிடலாம். ஆனால் அவர் 1946இல் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டே ‘தமிழரசுக் கழகம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டார். இந்தத் தமிழரசுக் கழகத்திற்குக் கொள்கை இந்திய ஒற்றுமை, மாநில சுயாட்சி என்று அறிவித்துக் கொண்டார். உண்மையில் இவருடைய இயக்கம் திராவிடர் இயக்கத்திற்கு எதிராகவே தொடங்கப்பட்டது தான்.
1950-51இல் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி காலம் முதல் இருந்து வந்த வகுப்புவாரி உரிமை புதிய இந்திய அரசியல் சட்டத்தால் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அறிவித்தன. தமிழகமே மிகப் பெரிய போர்க்களமாகக் காட்சி அளித்தது. வடநாட்டில் இருந்து வந்த அமைச்சர்களுக்கெல்லாம் போகுமிடமெல்லாம் கருப்புக் கொடி காட்டப்பட்டது. அதன் விளைவாகவே நேரு அரசியல் சட்டத்தில் 1951இல் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்தார். இந்தக் காலக் கட்டத்தில் ம.பொ.சி. திட்டமிட்டுத் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளையும் கூட்டங்களையும் ஊர் ஊருக்கும் மாவட்டங்கள்தோறும் நடத்தி வந்தார். அன்றைக்கிருந்த காங்கிரசு அரசான குமாரசாமிராஜா தலைமையிலான அரசு கூட வகுப்புரிமைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது.
ஆனால் பார்ப்பனப் பாதம் தாங்கியான ம.பொ.சி வகுப்புரிமைக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை; மாறாக எதிராகச் செயல்பட்டார். ஆதலால் பார்ப்பனர்கள் நன்றாக அவருடைய தமிழரசுக் கழகத்துக்கு உதவி செய்தார்கள். இதோ ம. பொ. சி. கூறுகிறார்..
“தொடர்ந்து ஓராண்டுக்காலம் திராவிட இயக்க எதிர்ப்புப் பிரச்சாரம் புயற்காற்று வேகத்தில் தமிழ்நாடெங்கும் பரவியது. தி.க.வுக்கு எதிராகத்தான் இயக்கம் தொடங்கப்பட்டது. என்றாலும் தி.மு.க.வுக்கு விலக்காக இல்லை. தி.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இருந்த கொள்கை உடன்பாடு காரணமாக அந்த இரண்டையும் சேர்த்தே எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட்டது. காங்கிரசில் இருந்த நிலப் பிரபுக்களும், தொழில் அதிபர்களும் திராவிட இயக்க எதிர்ப்பு இயக்கத்தை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டலாயினர்." (ம. பொ. சி. எனது போராட்டம் பக்.565)
“1951ஆம் ஆண்டிலே திராவிட இயக்க எதிர்ப்பு நடத்தியபோது உடல் நிறை நானே வியக்கத்தக்க வகையில் கூடுதலானது. ஆம் 90 பவுண்டிலிருந்து 130 பவுண்டாக அதிகரித்தது. காரணம் திராவிட இயக்க எதிர்ப்புக் காரணமாக என் இதயத்தில் ஏற்பட்டிருந்த எழுச்சிதான்.” (ம. பொ. சி. எனது போராட்டம் பக். 792)
 பார்ப்பனர்களும், காங்கிரசிலிருந்த பணக்காரர்களும் ம.பொ.சி.யை அந்த அளவுக்குக் கவனித்திருக்கிறார்கள். 1952இல் தந்தை பெரியார் அவர்கள் ஆகஸ்டு 1இல் இரயில் நிலையங்களில் இருக்கும் இந்தி எழுத்திற்குத் தார்பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்தினார். ம.பொ.சி. தனது தமிழரசுக் கழகத்தினரை அனுப்பி மண்ணெண்னையைக் கொண்டுபோய், பூசிய தாரை அழித்து இந்தி எழுத்துக்கள் தெரியும்படி செய்தார். இச்செய்தியை 13-10-52 விடுதலையில் குத்தூசி குருசாமி பதிவு செய்துள்ளார்.
1953இல் சூன் மாதத்தில் இராஜாஜி குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தபோது அதை ஆதரித்து ஊர் ஊராக இவருடைய தமிழரசுக் கழகத்தின் சார்பில் பிரச்சாரம் செய்து வந்தார். மாவட்டந்தோறும் குலக்கல்விக்கு ஆதரவு மாநாடுகளும் நடத்தி வந்தார். சட்டமன்ற மேலவையிலும் 28-7-1953 அன்று குலக்கல்வித் திட்டத்தை வரவேற்று நீண்ட உரையாற்றியுள்ளார்.
தமிழ் நாட்டில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டுமே இராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்துத் தீவிரமாகப் போராடி வந்தபோது, காங்கிரசுக் கட்சியினரும் காமராசர் தலைமையில் இராஜாஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் எதிர்த்தது. தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழடிக்கும் இந்த அரைநாள் படிப்பு, மீதம் அரைநாள் பெற்றோரின் தொழிலைச் செய்ய வேண்டுமென்ற இராஜாஜியின் பார்ப்பனத் திட்டத்தை தமிழகத்தில் ஆதரித்த ஒரே கட்சி பார்ப்பனப் பாதந் தாங்கி ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் மட்டுமே.
தமிழகத்தில் குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோதுதான் ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டத்தை நடத்தினார். உண்மையில் போராட்டத் தளபதி திருத்தணி கே.விநாயகம் தான். அவருடைய பகுதி பாதிக்கப்பட்டதால் அவர் அப்பகுதி இளைஞர்களைத் திரட்டி போராடினார். ம.பொ.சி. அன்றைய முதல்வர் இராஜாஜிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழு, போராட்ட குழுத்தலைவராக ம.பொ.சி.யை விநாயகம் நியமித்தார். எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். கே.விநாயகம் அப்போது பிரஜா சோசலிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக எதிர்க் கட்சியில் இருந்தார்.
ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தினர் ஒன்று தமிழரசுக் கழகத்தைக் கலைக்க வேண்டும் அல்லது 15 நாட்களுக்குள் காங்கிரசை விட்டு வெளியேற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி 18-7-1954இல் தீர்மானம் நிறைவேற்றியது. வேறு வழியின்றி ம.பொ.சி. குழுவினர் பொறுமிக் கொண்டே வெளியேற மனமின்றி வெளியேறினர். காங்கிரசில் இருந்து வெளியேறிய பிறகும் கூட அவர்கள் காங்கிரசுக்காரர்களாகவே நடந்து கொண்டனர். இதை ம.பொ.சி.யே கூறினார்.
“தமிழரசுக் கழகத்தாராகிய நாங்கள் தான் உண்மைக் காங்கிரசுக்காரர்கள். எந்தக் கொள்கைகளுக்காக காங்கிரசில் இருந்தபோது சேவை செய்தோமோ அக்கொள்கைகளையே காங்கிரசை விட்டு வெளியே வந்த பிறகும் கடைபிடித்து நிற்கிறோம்.”
“ஈ.வெ.ரா. தேசியக் கொடியை எரிக்கத் தேதி குறித்தபோது அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது காங்கிரசுக் கட்சியல்ல, தமிழரசுக் கழகம் தான். பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடி வருவது தமிழரசு கழகமே. தேசியத்தின் வாரிசாக, காந்தியத்தின் காவலானாகக் கடமைகளைச் செய்து வருவது தமிழரசுக் கழகமேயாகும்”(செங்கோல் 1-1-1957)
இந்தியத் தேசிய ஒருமைபாடு, இந்தி ஆட்சி மொழி ஆகியவற்றை ம.பொ.சி. தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். 1956 சனவரி 11ஆம் தேதி இந்தி ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் பி.ஜி.கெர். அவர்களிடம் மத்திய ஆட்சி மொழி பற்றிச் சாட்சியமளித்த ம.பொ.சி. இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி என்பதைத் தமிழரசுக் கழகம் ஏற்றுக் கொள்கிறது. மத்திய அரசாங்கத்தின் நிர்வாக மொழியாகவும் மாநிலங்களின் தொடர்பு மொழியாகவும், சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைகளுக்கும் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும். முடிந்த வரையில் பார்லிமெண்ட் நடவடிக்கைகளும் இந்தியிலே இருக்கலாம். மற்ற மொழியினர் அவரவர் தாய் மொழியில் பேசவும் உரிமை வேண்டும், தமிழகப் பள்ளிகளில் இந்தியை விருப்பப் பாடமாக வைக்கலாம் என்று சாட்சியமளித்தார் (செங்கோல் 15-1-1956)
இந்தி மொழி ஆணையர் இந்தியைத் திணிக்கத்தான் வருகிறார் என்பதால் அவர்கள் சென்னை சட்டமன்றத்திற்கு வந்த அன்று தி.க.வினர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 1957இல் வெளிவந்த இந்தி மொழி ஆணையத்தின் அறிவிப்பு மிக மோசமாக இருந்தது. எல்லா மாநில உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலத்திற்குப் பதில் இந்தியே பயன்படுத்த வேண்டும், எல்லா மாநிலச் சட்ட மன்றங்களிலும் இந்தியே பயன்படுத்த வேண்டும். ஏன் இந்தியர்கள் எல்லோரும் இந்தி மொழியைத் தங்கள் வாழ்வியல் மொழியாக ஏற்க வேண்டும் என்று அறிவித்தது. இதற்கு எதிராகத்தான் பெரியார் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். நாடே கொந்தளித்தது.
அப்போது ம.பொ.சி. எழுதினார்:
“மத்திய அரசின் நிர்வாகத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்திலிருந்து இன்னொரு ராஜ்ஜியத்திற்கும் தொடர்பு மொழியாக இந்தி இருக்கலாம், இதில் நமக்குச் சந்தேகமில்லை. ராஜ்ய நிர்வாகத்திற்குள் இந்தியைத் திணித்தால் புரட்சி பொங்கும் என்பது திண்ணம் (செங்கோல் 13-10-57)
ம.பொ.சி. மேலும் கூறுகிறார்,
“தமிழகத்தார் திருப்திகாரமான அளவில் இந்தி மொழியைப் பயிலும் வரையில் மத்திய அரசின் நிர்வாகம் ஆங்கிலமாக இருக்க வேண்டும். இன்னும் இருபது ஆண்டுகளுக்காவது இந்த முறை நீடிக்க வேண்டும்.”(செங்கோல் 13-10-57)
6-8-1960 அன்று திருவல்லிகேணியில் பேசிய ம.பொ.சி. உதிர்த்த முத்துக்கள்:
இந்திமொழியை, அம்மொழியோடு சிறிதளவும் இலக்கணத் தொடர்பில்லாத தமிழ்மக்கள் பயில வேண்டுமானால், தமிழ் லிபியில் (தமிழ் வரிவடிவத்தில்) இந்தி மொழியைப் பயிலுவதற்கு ஏற்ற வகையில் பாடப் பத்தகங்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஏன் தேவநாகரி - தமிழ் ஆகிய இருலிபிகளிலும் இந்திமொழி பயிலலாம் என்ற விதியை அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து சேர்க்க வேண்டும். மக்களிடையே வளர்ந்து வரும் தமிழ் மொழிப்பற்றைப் பயன்படுத்திப் பிரிவினைச் சக்திகள் வலுவடைவதைத் தடுக்க இந்த யோசனைகளைச் சொல்கிறேன். (செங்கோல் 14-8-1960)
இந்தி மொழி:
இந்தி மொழியைப் பற்றி 14-10-62 செங்கோல் இதழில் தலையங்கம் எழுதிய ம.பொ.சி. இந்தி மொழி கட்டாயப் பாடமாக்க வலியுறுத்துகிறார்.
 “1946 முதல் இன்று வரை தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரசு ஆட்சியே தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றது. இந்த 16 ஆண்டுகாலத்தில் தமிழ் நாட்டு மக்கள் திருப்திகரமான அளவில் இந்தியைப் பயின்று இருக்க முடியும். காங்கிரசுக் கட்சியின் தடுமாற்றம் இந்த நிலையைத் தவிர்த்து விட்டது. இதே நேரத்தில் ஆந்திரா - கன்னட - கேரள மாநிலங்களில் ஏராளமானவர்கள் இந்தியைப் பயின்றிருக்கின்றனர்”

 கடந்த 16 ஆண்டுகாலமாக இந்த மூன்று மாநிலங்களின் பள்ளிகளிலே தொடர்ந்து இந்தி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. தமிழகம் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இந்த நிலையில் மேலும் காலவரம்பற்ற அவகாசம் கேட்டிருப்பதன் உள்நோக்கம் என்னவோ! இந்தியைப் பொது மொழியாக ஏற்றுக் கொண்டு அதனைப் பள்ளிகளிலேயும் புகுத்தி விட்ட பிறகு, “தேர்வுக்கு கட்டாயமில்லை” என்று கூறியிருப்பது, தேசிய ஒருமைப்பாட்டுக்குச் செய்யும் தொண்டா, துரோகமா?
இவ்வாறு ம.பொ.சி. தமிழக அரசைக் கண்டிக்கிறார். இந்தி மொழி தேர்வுக்குரியப் பாட மொழியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இவர்தான் இன்றைய தமிழ்த் தேசியம் பேசுவோருக்கு தலைவராம்.
தமிழனை உயர்த்த ம.பொ.சி கூறும் அரிய யோசனையை அவருடைய சிஷ்யர் அருகோபாலன் ஏற்று அம்மாவிடம் கூறினால் அம்மா உடனே ஏற்றுக் கொள்வாரே, தமிழன் நாசமாக போக வேண்டுமென்பது தான் அவர்களின் ஆசை.
"ம.பொ.சி.யின் இந்தி வெறி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தமிழக அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மேலும் மூன்று படிவங்களில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாகச் செய்திருக்கிறது. இப்படிக் கட்டாயமாகச் செய்து விட்டு குறைந்த பட்ச எண் கூட வாங்கத் தேவையில்லை என்று சொன்னால் இந்தியை எவன் படிப்பான். மாணவர்கள் விடைத்தாள்களிலே விடை எழுதாமலேயே தேர்வாளர்கள் முகத்தில் வீசியெறிந்து விட்டு வருகின்றனர். அப்படிச் செய்தவர்கள் எவ்வளவு பேரோ யார் அறிவர்.
இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி என்று ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு தமிழரசுக் கழகமும் இக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. அரசியலில் நாணமும் ஒழுக்கமும் இருந்தால் அந்த மொழியைப் படிக்க வேண்டும் என்று மக்களைத் தூண்ட வேண்டும். இந்தக் கடமையைச் செய்ய காங்கிரசு மறுக்கிறது. தமிழரசுக் கழகம் அதைச் செய்யத் தூண்டுகிறது.
தனித் தமிழ்நாடு கோருவோர் இந்தியை அடியோடு வெறுக்கலாம். அவர்களின் நிலை வேறு. இந்தியாவின் அய்க்கியத்தை ஏற்பவர்களாகிய நாம் இந்தியை அடியோடு புறக்கணிக்க முடியாது. தமிழக மக்கள் இந்தி பயிலத்தான் வேண்டும். குறைந்த பட்ச தேர்வுக்குரிய மதிப்பெண் பெறவேண்டும் என்ற நிலையில் பாடத்தில் இந்தி இடம் பெற வேண்டும்”. (செங்கோல் 3-3-63)
 தி.மு.க. 1963இல் இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ள 14 மொழிகளும் மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றக் கோரிக்கையை வைத்து அரசியல் சட்டத்தின் 17ஆம் பிரிவை எரிக்கும் போராட்டத்தை நடத்தியது. அண்ணா உட்பட சட்டத்தை எரித்தோருக்கு ஆறுமாதம் சிறைதண்டனை கிடைத்தது.
ம.பொ.சி.க்கு உண்மையான தமிழ்ப் பற்று இருந்திருக்குமேயானால் இந்தப் போராட்டத்தை வரவேற்று இருக்க வேண்டும்; வாழ்த்தி இருக்க வேண்டும். டெல்லியில் தமிழுக்கு உரிமைக் கேட்டு நடந்தப் போராட்டம் இது. ஆனால் ம.பொ.சி. இதைக் கண்டித்து எழுதினார்.
“தி.மு.க.வின் மொழிப் போர் இந்தி எதிர்ப்பன்று; இன்பத் தமிழ் எதிர்ப்பே!14 மொழிகளை மத்தியில் ஆட்சி மொழி ஆக்க முடியுமா, மத்தியில் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையல்ல இது வெறும் கூச்சல்” (செங்கோல் 28-2-63)
"அரசியல் சட்டத்தை திருத்தாதது தவறென்றால் தீயிட்டு எரிப்பது சரியோ? அண்ணாவின் படத்தை எரித்தால் சும்மா இருப்பாரா?" (செங்கோல் 2-2-64)
 “இந்தி ஒழிக என்று கூறுவது அறியாமை-அனாச்சாரம்” ம. பொ. சி (செங்கோல் 8-8-63)
மத்தியில் அரசியல் சட்டத்தில் உள்ள 14 மொழிகளும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதில் உங்கள் பதில் என்ன என்று ஒரு கூட்டத்தில் சம்பத் பேசினார். ம.பொ.சி. யோக்கியமான அரசியல்வாதியாக இருந்தால் பதில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் ம.பொ.சி.யோ “சந்து முனையில் நின்று கொண்டு சவால் விடுகிறார் திரு.சம்பத். 14 மொழிக் கோரிக்கைப் பற்றி நான் பதில் சொல்ல வேண்டுமாம். ஆரோக்கியமான அரசியல்வாதியாக இருந்தால் தன் அப்பாவிடம் இதைக் கேட்காதது ஏன்” என்று மழுப்பி விட்டுப் பதிலே சொல்லவில்லை. (செங்கோல் 27-10-63)
“ஜனவரி 26க்குப் பிறகு மொழிப் பிரச்சினையில் மாறுதல் நாடாளுமன்றம் இந்தியில் நடக்கும். டெல்லி உயர்நீதி மன்றத்தின் நிர்வாக மொழியாக இந்தி வரும். சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆங்கிலமே நீடிக்கும். நாளடைவில் அதை அகற்றி இந்தி வந்து அங்கு அமரும். (செங்கோல் 23-8-64)
"ஆங்கில ஆதிக்கத்தை அழித்தே தீருவேன்! அய்ந்து ஆண்டுகள் மட்டும் வாழ எனக்கு இறைவன் அருள்புரியட்டும். இந்தி மொழி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் மத்தியில் நீடிக்க வேண்டும்" (செங்கோல் 21-4-63)
மேற்சொன்ன இரண்டு கருத்துகளும் ஒரே இதழில் அவர் எழுதியவைதான்.
"மத்திய ஆட்சியில் ஆங்கிலத்தை உடனடியாக அகற்றிவிட முடியாது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தவிர்க்கமுடியாத துயரமாக கருதி அதனை நாம் ஆதரிக்கவும் செய்கிறோம்" (செங்கோல் 23-8-64)
இதே கருத்தை அண்ணா சொன்னால் கண்டிப்பது. இலண்டன் பி.பி.சி தமிழோசைக்கு அண்ணா அளித்த செவ்வியில் 14 மொழிகளும் ஆட்சிமொழிகளாகும் வரையில் மத்தியில் ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்றார். இதைக் கண்டித்த ம.பொ.சி., இதுவா தமிழ்ப் பற்று அண்ணா ஆங்கிலத்திற்கு வக்காலத்து வாங்குகிறார் என்று செங்கோலில் வசைபாடுகிறார். (செங்கோல் 7-3-65)
"ஜனவரி 26க்குப் பிறகு ஊருக்கு ஊர், பெருநகரங்களில் வட்டத்திற்கு வட்டம் இந்தி வகுப்புகள் நடைபெற்றால் வியப்படைவதற்கில்லை.... இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் நடுத்தரப் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படலாம். 1975இல் தமிழகம் இந்தி வழங்கும் பிரதேசமாகி விடும். இது தவிர்க்க முடியாதது. (செங்கோல் தலையங்கம் 27- 12-64)
"1965 சனவரி 26இல் மத்தியில் இந்தி ஆட்சி மொழியாவதால் சில மாறுதல்கள் உடனடியாக நிகழும் பல்கலைக் கழகங்களில் இந்தி பயிற்று மொழியாக மாறும். ஜனவரி 26இல் இந்தி ஆட்சி மொழியானதுமே “இந்தி எதிர்ப்பு” என்பது பொருளற்றதாகி விடும். இந்நிலையில் தமிழகத்தின் எதிரே இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இந்தி பயிற்சி மொழியாவதை எதிர்த்துக் கலகம் செய்வது; மற்றொன்று எதிர்ப்பை அடியோடு கைவிட்டு இந்தியைக் கற்பது. ஆகவே எதிர்ப்பைக் கைவிட்டு இந்தியைக் கற்பதொன்று தான் படித்த வர்க்கத்திற்குள்ள பாதை. அதைத்தான் படித்த வர்க்கம் தேர்ந்தெடுக்கும்."
ம.பொ.சி.யின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டார்கள் தமிழக மாணவர்களும், மக்களும். 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ம.பொ.சி. ஆதரிக்கவில்லை என்பதோடு நிற்காமல் அதை எதிர்க்கவும் செய்தார். 31-1-65இல் ஆர்ப்பாட்டமும் அடக்கு முறையும் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதிய ம.பொ.சி. அதை மொழிப் போராகப் பார்க்கவில்லை. “அதன் உண்மையான காரணம் தி.மு.க. காங்கிரசு பகைமைதான்" என்கிறார்.
 7-2-65இல் இந்தியை எதிர்ப்போர் ஆங்கிலத்திற்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். “காலித்தனம்-அடக்குமுறை நீதி விசாரனை தேவை” என்று எழுதினார். இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று தீக்குளித்த தமிழர்களைப் பார்த்து அப்பாவிகள் ஆங்கிலத்திற்காக உயிர் துறந்தார்கள் என்று எழுதினார். 14-2-65 “எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்கள் கிளர்ச்சி நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது” என்றும், 21-2-65இல் செங்கோல் இதழில் 19 நாள் கலகம் என்று தலையங்கம் எழுதினார். பக்தவச்சலம் அரசு துணை இராணுவத்தைக் கொண்டு வந்து நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தற்கு வருத்தப்படாத ம.பொ.சி. 4 போலீசார்கள் உயிருடன் கொளுத்தப்பட்டதற்கு மிகவும் வருந்தினார். “ரயில்வே இலாக்காவுக்கு மட்டும் நஷ்டம் 1கோடி, நாசவேலைகள் நடந்திருக்கும் அஞ்சல் நிலையங்கள், போலீசு நிலையங்கள் அழிவால் ஏற்பட்ட நஷ்டம் பல இலட்சமாகும். கலகத்தை அடக்கத் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1 கோடி மற்றொரு நஷ்டம் மாணவ மாணவியர் கல்வி 5 வாரம் தடைப்பட்டதாகும்” இதையெல்லாம் எழுதிய ம. பொ. சி. மேலும் எழுதுகிறார்
"மத்தியில் ஆட்சி மொழி ஆங்கிலமா, இந்தியா என்பது முழுக்க முழுக்க உத்தியோக வர்க்கத்தினர் சம்பந்தப்பட்டதாகும். இதற்கு நாடு முழுக்கக் கலகம் நடைபெற வேண்டிய அவசியமில்லை. பாமரர்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. சில நூறு உத்தியோகஸ்தர்களைப் பாதிக்கும் பிரச்சினை இது" என்கிறார். மத்தியில் ஆட்சிமொழிப் பிரச்சனை என்பது தமிழர்களை எல்லோருக்குமான பிரச்சினை என்பதைத் திசை மாற்றி அது சிறு பிரச்சினை என்று எவ்வளவு மழுப்பலாக எழுதுகிறார் ம. பொ. சி.
இந்தி எதிர்ப்பு நடந்து முடிந்தவுடன் கரண்ட் இதழின் துணை ஆசிரியர் பகாடியா அவர்கள் தமிழகம் வந்து எல்லாத் தலைவர்களையும் பேட்டி கண்டார். ம.பொ.சி.யையும் பேட்டிகண்டார். அப்பேட்டி 28-2-65 செங்கோல் இதழில் இடம் பெற்றுள்ளது.
கேள்வி: இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறக் காரணமென்ன?
ம.பொ.சி பதில்: 15 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியும், ஆட்சியும் ஒழுங்காக இந்தியைப் பரப்பாததால்.
கேள்வி: நீங்கள் மூம்மொழித் திட்டத்தை ஆதரிக்கிறீர்களா?
ம.பொ.சி. பதில்: ஆதரிக்கிறேன்.
கேள்வி: உங்கள் தமிழரசுக் கழகம் ஆட்சிக்கு வந்தால் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் பாடத்திட்டத்தில் வைக்குமா?
ம.பொ.சி. பதில்: இந்திய நாட்டின் நலன் கருதியும் தமிழக மக்களின் நலன் கருதியும் இந்தியை கட்டாயப் பாடமாக வைப்பேன்.
இதனால்தான் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் ஆட்சிக்கு வராமலே அழிந்து விட்டது போலும். மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் இவ்வளவு திமிராக எழுதுவதற்கு ம.பொ.சி.க்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்! இவர்தான் தமிழ்த் தேசியத் தலைவராம். நாவலர் நெடுஞ்செழியன் தமிழக சட்டமன்றத்தில் 14 மொழிகளையும் இந்திய அரசு ஆட்சி மொழிகளாக ஏற்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். இதைக் கண்டித்த ம.பொ.சி. 'விளையாடுகிறார்கள்' என்று செங்கோலில் தலையங்கத்தில் எழுதினார்.
"இந்தி தேர்வின் விடைத்தாள்களில் இந்தி ஒழிக என்று எழுதி கொடுத்து விட்டு வந்தாலும் தேர்ச்சி அடைகிறார்கள். இது முதலமைச்சருக்கு தெரிந்திருந்தும் அவர் திருப்தி அடைந்து விடுகிறார். இது நாட்டுக்குச் செய்கிற துரோகம் பயனுள்ள வகையில் இந்தி பாடத்தை கட்டாயப்படுத்துவதே ஒரே வழி. தமிழக சட்டமன்றத்தில் விளையாடுகிறார்கள்" என்று எழுதினார். (செங்கோல் 11-4- 65)
ம.பொ. சி. தொடக்கக் கால முதலே பிரிவினையை எதிர்த்தும் இந்திய தேசியத்தையும் தான் ஆதரித்தார். தமிழக விடுதலையை அவர் ஒரு நாளும் ஆதரித்ததில்லை.
“தமிழன் இந்தியனாய் இருக்கத் தயார்; ஆனால் அவன் முதலில் தமிழன்; இரண்டாவதாகத் தான் இந்தியன்” (தமிழ் முரசு 1-4-47)
மீசையின் ஆசை:
"காந்தியாரின் பெருமைப் பாடாத நாள் கிடையாது. திராவிடர் கழகத்தை ஒழித்துவிடுவேன் என்கிறார். இந்த லட்சணத்தில் இவர் தமிழ் நாட்டு காவலனாம் .தான் எழுதியதை இல்லையென்றும் தவறாக எழுதிவிட்டேனென்றும் அல்லவா கூறுகிறார். மொழிவாரி மாகாணம் கூடாது என்று கூறும் நேருவிடம் தி.க.விடம் காட்டும் கோபத்தில் லட்சத்தில் ஒரு பங்காவது காட்டுகிறாரா?
நேற்று வந்த சிவஞானம் திராவிடர் கழகத்தை ஒழிக்கப் போகிறாராம். விளம்பரத்திற்கு ஆசைப்படுகிறார் பாவம்!" (5-2-59 குடியரசு “ ஜானகி மனாளன்”)
ம.பொ.சி.யைப் பற்றி உண்மை தன்மையை 1949இலேயே திராவிடர் கழகம் புரிந்து கொண்டது. ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தை இது தமிழ் துரோகக் கட்சி என்று உணர்ந்தவர் திரு.வி.க. தொடக்கவிழாவிற்குச் சென்ற அவர் ஒரே ஆண்டில் அதை உதறிவிட்டு தி.க. மாநாட்டுக்கு வந்தார். ம.பொ.சி. தவறான வழியில் செல்கிறார் என்று கி.ஆ.பெ.விசுவநாதம் அப்போதே எழுதினார்.
"திரு ம.பொ.சி. அவர்களுடைய நடைமுறைச் செயல்களையும் எழுத்தையும், பேச்சையும் பார்க்கும் போது பழையபடியும் வேதாளம் கட்டை அவிழ்த்துக் கொண்டு முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது போல் உள்ளது.
 ஈ.வெ.ராவையும் அவருடைய விடுதலையையும் மட்டுமல்ல, தமிழ் நாட்டிற்கு நலம் தரும் கொள்கைகளைக் கூடத் தாக்க முன் வந்திருக்கிறார். காங்கிரசுக் கட்சிக் கூட்டங்களில் இருந்து கொண்டு பிற கட்சியினரின் கொள்கைகளை வசை மொழிகளால் தாக்க முன் வந்து விட்டார்.
வட நாட்டார் தமிழ்நாட்டைச் சுரண்டவில்லை என்று பேசத் தொடங்கிவிட்டார். ம. பொ. சி.யால் அவருக்கோ, தமிழ் நாட்டிற்கோ, எவ்விதப் பயனும் ஏற்படாது என்பதை நட்பு முறையில் அறிவித்துக் கொள்கிறோம்”. (தமிழர் நாடு 16-12-50)
பெரியார் மொழிவாரி மாநிலம் பிரிந்தவுடனேயே 1956 நவம்பர் 4இல் திருச்சியில் தி.க. பொதுக்குழுவைக் கூட்டி இனி ‘சுதந்திரத் தமிழ் நாடு’ தான் நம் கொள்கை என்று பிரகடப்படுத்தினார். அன்று முதல் அய்யா மறையும் வரையில் அதில் எந்த மாறுதலும் இல்லை.
பெரியார் அவர்கள் தனித்தமிழ் நாடு போராட்டத்திற்கு ம.பொ.சி. தலைமை தாங்கட்டும். நான் ஒரு தொண்டனாக அவர் பின்னால் கொடி பிடித்துச் செல்ல தயாராக இருக்கிறேன் என்று சேலத்தில் பேசினார். தினத்தந்தி 4-12-57
இதற்குப் பதிலளித்த ம.பொ.சி. இன்றைய சூழலில் இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டாடுவது தமிழர்க்கு நன்மை பயக்காது. ஆகவே தி.க.வின் தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழரசுக் கழகம் எதிர்க்கின்றது என்று பதில் எழுதியுள்ளார். (செங்கோல் 8-12-57)
திருச்சியில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் 1959இல் “ஆகாசவாணி” எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார். பெரியாரை அழைக்காமலேயே பெரியார் அங்குச் சென்று அவருடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். ம.பொ.சி. இதை ஆதரிக்காதது மட்டுமின்றி கண்டித்தார்.
“இது பிரிவினைவாதிகள் செய்யும் கிளர்ச்சி; இதில் நாம் பங்கேற்பதற்கில்லை”
“இந்தியாவின் ஒற்றுமையை நாடுவோர்இந்த ஆட்சேபனையைப் பொருட்படுத்த மாட்டார்கள். பொதுவாக ‘ஆகாசவாணி’ என்ற பெயர் வழங்கப்படுவதை நாம் ஆட்சேபிக்கவில்லை”
“தமிழ் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அகில இந்திய வானொலி என்றோ, ஆகாசவாணி திருச்சி வானொலி நிலையம் என்றோ அறிவிக்கலாம்”
"ஆகாசவாணியை எதிர்ப்போரில் ஒரு சாரார் அந்தப் பெயரை ஆழக் குடித்தோண்டிப் புதைக்க வேண்டும் என்று அறிக்கை விடுகின்றனர். அதை நாம் ஏற்பதற்கில்லை." (செங்கோல் 18-1-59)
அதே போல பெரியாரும் ஆதித்தனாரும் சேர்ந்து 1960இல் தமிழ்நாடு நீங்கிய இந்திய வரைபடத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார்கள். அருகோபலன் கூட இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றதாக கூறி வருகிறார். இந்தப் போராட்டத்தையும் ம.பொ.சி. ஆதரிக்கவில்லை; கண்டித்து எழுதியுள்ளார்.
எரிப்பதும், அழிப்பதும் தமிழர் பண்பல்ல என்ற தலைப்பில் 5-6-60 செங்கோலில்
“தேசபக்தி என்பது தேசப் படமாகிய காகிதத்தில் இல்லை. ஆகவே காகிதப் படத்தைக் கொளுத்தி விட்டால், தமிழனுடைய இந்திய தேசபக்தி எரிந்து விடாது. இந்தியாவைத் தங்கள் இதயத்தில் எழுதி வைத்துக் காக்கும் தேசபக்தர்கள் எண்ணற்றோர் இன்னும் வாழ்கின்றனர். அவர்களுடைய இதயங்களிலுள்ள தேசப்படத்தையும் கொளுத்துவார்களோ?”
அருகோபலன் கலந்து கொண்ட போராட்டத்தைக் கண்டித்த ம.பொ.சி.யை மூச்சுக்கு முன்னூதரம் அருகோபலன் தூக்கிப் பிடிக்கிறார் என்பதுதான் வேடிக்கை. ம.பொ.சி. தன் வாழ்நாள் முழுவதும் இந்தியத் தேசியத்தையே தூக்கிப் பிடித்தார். செங்கோல் இதழில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15, ஜனவரி 26, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் திலகர் நாள் (6-8-62 செங்கோல்) தீபாவளி வாழ்த்து கூறும்போது கூட “நாம் தமிழர்களாக மட்டுமல்லாமல் இந்துக்களாகவும் இந்தியர்களாகவும் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது” (செங்கோல் 24-10-65)
"சித்திரை முதல் நாளைத்தான் ஆண்டு பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டுமாம். பஞ்சாகத்துக்கு மாற்றான தைத்திங்கள் முதல் நாள் ஆண்டு புத்தாண்டு தேவையில்லை. அரசின் வரவு செலவுத் திட்டத்தை இந்தச் சித்திரையிலே அரசு தொடங்கலாம். 60 ஆண்டு சுழற்சி முறையும் நன்றாகத்தான் உள்ளது." (செங்கோல் 18-4-65)
இவருடைய யோசனையை ஜெயலலிதாவுக்குச் சொல்லியிருந்தால் உடனே ஏற்றுக் கொண்டிருப்பாரே பாவம் ம.பொ.சி. அதற்குள் இறந்துவிட்டாரே!/
 “நாம் பிரிவினைக் கொள்கையின் எதிரிகள்” (செங்கோல் 8-4-62)
ma_po_sivagnanam17-1-63 அன்று கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ம.பொ.சி.
“நான் ஒரு இந்துவாக இருப்பது குறித்து வருத்தமோ, வெட்கமோ படவில்லை. மாறாக மாபெரும் கலாச்சாரப் பாரம்பரியத்தைச் சார்ந்தவன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஒரு இந்துவாக மட்டுமில்லாமல், தேச பக்தியுடைய இந்தியனாகவும் இந்தக் கூட்டத்தில் பேசுகிறேன். நாம் இந்தியர், இந்தியா நம் தாய் நாடு என்பதை மறந்து விடக் கூடாது" என்றார் (செங்கோல் 27-1-63)
பெரியார் பிரிவினைத் தடைச் சட்டத்தை மீறியேனும் ‘தனித் தமிழ் நாடு’ கோரி போராடுவேன் என்கிறார். அண்ணாதுரை பயந்து பின்வாங்கி விட்டார். நான் பயப்படமாட்டேன்; பின் வாங்க மாட்டேன் என்கிறார் பெரியார். இது எவ்வளவு பெரிய அழுத்தமான செய்தி. இந்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டத்தை எதிர்த்துப் பெரியார் பொங்கி எழுகிறார். இதைப் பற்றிக் கிண்டலடித்த ம.பொ.சி. "இது வாழைக்கும் அதன் கீற்றுக்கும் நடக்கும் போராட்டம். இதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை" என்கிறார். (செங்கோல் 17-2-63)
"இதுதான் தக்கத்தருணம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுவதே சரியான வழி" என்று ம.பொ.சி. தொடர்ந்து புலம்பி வருகிறார். (செங்கோல் 24-2-63)
"பாரத ஒருமைப்பாடு காணவே தமிழில் இராமக்காதை தந்தார் கம்பர், அயோத்தியில் பிறந்த ராமனும், மிதிலையில் பிறந்த சீதையும் நமக்கு அன்னியராவாரோ? இல்லை உறவினரே!" (செங்கோல் 14-4-63)
ம.பொ.சி.யின் பிள்ளைக்கு இராமன் பெண் கொடுத்தானோ என்னவோ யாருக்கு தெரியும்!?
“பிரிவினைத் தடைச் சட்டம் இயற்றிவிட்டால் மட்டும் போதுமா பிரிவினைக் கொள்கையைத் தீவிரமாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும்”
“தமிழ் நாடு பாரதத்திலிருந்து பிரிக்கப்படுமாயின் அதன் கதியும் பாகிஸ்தானைப் போன்றது தான், தமிழ் நாட்டை இழந்த பின்னும் எஞ்சிய பாரதம் தன் காலிலே நிற்கும். ஆனால் சின்னஞ்சிறிய தமிழகத்தின் கதி என்னவாகும். அதை நினைத்தாலே என் நெஞ்சம் நடுங்குகிறது." (செங்கோல் 18-8-63)
தமிழ்நாட்டைக் காக்காய் தூக்கிக் கொண்டு போய்விடுமா? அதனால்தான் பெரியார் அவர்கள் 1960 வெளியிட்ட சுதந்தர தமிழ் நாடு ஏன்? என்ற நூலின் இறுதிப் பகுதியில் பின் இணைப்பாகத் தமிழகத்தை விட பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் சிறிய நாடுகள் எத்தனை என்ற பட்டியலையே வெளியிட்டார்.
அண்ணா அவர்கள் திராவிட நாடு பிரிவினை கொள்கையைக் கைவிட்டவுடன் அதனை வரவேற்ற ம.பொ.சி.
“பிரிவினை என்ற விஷ விருட்சம் விழுந்து விட்டதென்றால் அது திடீர் சம்பவமன்று பதினோழு ஆண்டுகளாகத் தம்மால் அது தொடர்ந்து தாக்கப்பட்டதால் தான் இப்போது வீழ்ந்தே விட்டது. பிரிவினையைத் தமிழரசுக் கழகம் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கும். தி. க. நாம் தமிழர் இயக்கங்களையும் எதிர்கின்றோம். இதிலிருந்து என்ன தெரிகிறது தமிழரசு கழகம் ஆரம்ப காலம் முதலே பிரிவினைக்கு எதிராக இந்திய தேசியத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது." (செங்கோல் 3-11-63)
அருகோபாலன் பெரியார் கன்னடியர்; சங்கராச்சாரியார் கன்னடியர். அதனால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டுத் தமிழகத்தை அழித்தார்கள் என்று ஒரு அண்டபுளுகைப் புளுகியிருக்கிறார். ஆனால் உண்மையில் சங்கராச்சாரியைச் சந்தித்தது சாட்சாத் அருகோபலனின் குருநாதர் ம.பொ.சி. தான். நம்ப முடியவில்லையா? அவருடைய செங்கோல் இதழிலேயே உள்ளதே.
ஆச்சாரிய சுவாமிகள் கவனத்திற்கு:
ஆதிசங்கரரின் வாரீசாக நம்மிடையே வாழ்ந்து வரும் காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரிய சுவாமிகள், ஆதிசங்கரரைப் பின்பற்றிச் சமயங்களிடையே ஒருமைகாண முயன்று வருகிறார். அவருடைய முயற்சிகள் வரவேற்று பாராட்டத்தக்கவையாகும். ஆனால் அந்த பெரியவரும் நோயை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையில் ஈடுபட்டுருப்பதாக தெரியவில்லை....... நால் வருணங்களில் மேல் வருணத்தவரான அந்தணர்கள் பாரத காலாச்சாரத்தின் காவலர்களாகத் திகழ்ந்தனர் ஒரு காலத்தில். இன்று அவர்கள் அந்த நிலையில் இருப்பதாகச் சொல்வதற்கில்லை. இங்குமங்குமாக ஒரு சிலர் இருக்கலாம். பெரும்பாலான அந்தண மக்கள் பரங்கி மொழி மோகத்தில் ஆழ்ந்து பாரதக் கலாச்சாரத்தை பாழ்படுத்துவதற்கு இடமளித்து விட்டனர்...
இந்த சீர்கேட்டிலிருந்து அந்தணர்கள் மீட்கப்படுவார்களானால், மற்ற மூன்று வருணத்தாரும் பழமையில் பற்றுக் கொள்ள வழி பிறக்கும். தலைமை தடுமாறினால் பின்பற்றுவோர் நிலை என்னவாகும். இந்த நிலையை ஆச்சாரிய சுவாமிகள் மாற்ற முயலவேண்டும். (23-9-62 செங்கோல்)
ஆச்சாரியாருக்கே அறிவுரை கூறுகிறார் ம.பொ.சி.
21-11-65 செங்கோலில் அதைப் பற்றிய செய்தி உள்ளதே. காஞ்சிபுரம் சென்று இரட்டை மண்டபம் எதிரில் உள்ள விடுதியில் ம.பொ.சி. தங்கியிருந்தார். அப்போது அவரைக் காண வந்த தொண்டர்களிடம் இந்தி படிக்கிறீர்களா என்று கேட்டார். இல்லையென்றவுடன் ஏன் படிக்கவில்லை எல்லோரும் இந்தி படியுங்கள் என்றார். பிறகு அங்கு வந்த இந்தி பிரச்சார சபா தலைவரிடம் இங்கு எவ்வளவு பேர் இந்தி படிக்கிறார்கள் என்றார். ம.பொ.சி. 150 பேர் என்று பதில் அளித்தார். இது போதாது. இனி நகரத்திற்கு ஒரு இந்தி பிரச்சார சபா என்ற நிலை மாறிவிடும். வட்டத்திற்கு வட்டம் இந்தி வகுப்புகள் நடக்கும். தமிழர்கள் முன்னேறுவார்கள் என்றார் ம.பொ.சி. அடுத்து மாலை 7 மணிக்கு சங்கரமடத்து ஆட்கள் அவரை அழைத்துச் செல்ல வந்தார்கள்.
காஞ்சிபுரம் நகரம் பழைய நகரம் வடமொழிக் கல்லூரியும் இங்கு தான் இருந்தது. சமீபத்தில் காஞ்சி காமகோடி ஆச்சாரி சுவாமிகள் மதுராந்தகத்தில் சமஸ்கிருத வகுப்புகள் நடத்துவதாகப் பத்திரிக்கைகளில் பார்த்தேன். காஞ்சியில் நடத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ம.பொ.சி.
இருட்டிய பிறகு பாட்டரி வெளிச்சத்தில் அருள் வடிவான கருணை முகம் தெரிந்தது; வணக்கம் என்கிறார் ம.பொ.சி. ‘தங்கள் பணிகளைக் கவனித்து வருகிறேன். நாட்டுக்கு நல்லது செய்கிறீர்கள். சௌக்கியமாக இருங்கள்’ என்று அருள் வாக்குப் பிறந்தது. (செங்கோல் 21-11-65) சங்கராச்சாரியை நேரில் சந்தித்தவர் ம.பொ.சி.தான். பூரி சங்கராச்சாரியார் பசுவதையைத் தடைச் செய்ய வேண்டும் அதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார். அதை ஆதரித்து ம.பொ.சி. செங்கோலில் எழுதியுள்ளார்.
“பூரி சங்கராச்சாரி சாமிகளின் கோரிக்கை நியாயமானதே. ஆட்சியாளர் அதைச் செய்வதற்குச் சங்கடமேதும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அரசு இதைச் செய்யும் நாம் நம்புகிறோம்”.(செங்கோல் 25-12-66)
ம.பொ.சி காந்தி தான் என் தலைவர் என்பார். அந்தக் காந்தியைக் கொலைச் செய்த கூட்டத்தின் தலைவரான வீரசாவர்கரையும் பாராட்டுவார். சாவர்கர் இறந்தபோது அவரின் செயல்களைப் பாராட்டி ம.பொ.சி. தலையங்கம் எழுதினார்.
“சரித்திர நாயகர் சாவர்க்கர் அமரராகிவிட்டார். மனசாட்சி வழி செயல்பட்ட அந்த மாவீரருக்கு நமது அஞ்சலி. அவர் சாதாரண தேசியவாதி அல்ல. ஹிந்து மனம் படைத்த தேசியவாதி ஆவார். அகிம்சாவாதியல்ல, பலாத்காரத்திலும் நம்பிக்கை உடையவர்” மனசாட்சிப் படி வாழ்ந்த ஒரு பெருந்தலைவர் என்பதற்காக அவரைத் தலையார வணங்குகிறோம். வாழ்க வீர சாவர்க்கரின் புகழ்."
எஸ்.பி. ம.பொ.சி.யின் சமஸ்கிருதப்பற்று
மேகசந்தேசம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ம.பொ.சி.
"வடமொழிக்கும், தமிழுக்கும் போட்டியோ, போராட்டமோ இருக்க நியாயமில்லை. வடமொழி, தென்மொழி வேற்றுமையோ விரோதமே இல்லை. சமஸ்கிருதம் அந்தணருக்கு மட்டும் உரிய மொழி என்பது அறியாமை. சமஸ்கிருதத்தை ஒரு சாதியினரின் மொழியாக மட்டுமே பண்டைய தமிழர் கருதவில்லை. பாரதத்தின் பல்வேறு மொழிகளைப் பிணைக்கும் கலாச்சாரம் பொது மொழியாகவே கருதினர். கோவலன் வடமொழி கற்றான்." (செங்கோல் 2-5-65)
இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்கிறார் ம. பொ. சி.
“இந்தியனாகிய நான் குமரி முதல் காஷ்மீரம் வரை பரவிக்கிடக்கின்ற பாரத நிலப்பரப்பிலே ஒவ்வொரு அங்குலத்தின் மீதும் சொந்தங் கொண்டாடுகிறேன். அதுபோல பாரத நாட்டிலுள்ள ஒவ்வொரு மொழியையும் எனது சொந்த மொழியாகக் கருதுகிறேன். ஆனால் தமிழ் மொழியை எனது தாய் மொழியாகக் கருதுகிறேன். அது என் வாழ்க்கை மொழியாக அமைந்து விட்டதால் ‘இந்தியன்’ என்ற முறையிலே ‘இந்து’ என்ற வகையிலே சமஸ்கிருதம் எனது கலாச்சார மொழியாகவே இருந்து வருகிறது”. (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக். 5)
"இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சமஸ்கிருதமே என்று சொல்லப்படுகிறது. தமிழிடத்துப் பற்றுடையவர்கள் இதனை மறுக்கத் தேவையில்லை." (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக். 19)
"இன்றைய சூழ்நிலையில் தமிழ் நாட்டு இந்துக்கள் மத விஷயத்தில் மறுமலர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது. இந்திய தேசீய ஒருமைப்பாட்டுக்காவும் அது தேவைப்படுகிறது. அது தவறல்ல என்பதைநாம் உணர வேண்டும். இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் கருதியும் நான் சமஸ்கிருதத்தை வெறுக்க மறுக்கிறேன்" (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.25 )
"சமஸ்கிருத மொழியைப் பிழையறப் பயின்று புரோகிதத் தொழில் புரிவோர் இருப்பார்களாயின் அந்தப் புரோகிதர்களைக் கொண்டு தமிழர் தங்கள் வீட்டுத் திருமணங்களைச் செய்வதை ஏற்கலாம்." (ம.பொ.சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.38)
“கல்வியின் ஒரு கட்டத்தில் தமிழகத்துப் பள்ளிகளில் சமஸ்கிருதமும் விருப்பப் பாடமாக இருக்கலாம்” (ம.பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.40)
"சமஸ்கிருதம் இந்துக்களின் பொது மொழியாக இருப்பதன் காரணமாக, இம் மொழியில் பீஜமந்திரம் என்று சொல்லப்படுகிறதே அதை மட்டும் திருக்கோயில்களில் அர்ச்சகர் பயன்படுத்தலாம். அதில் தவறில்லை. சமஸ்கிருத அர்ச்சனையை விரும்புவோருக்கும் தடைசொல்லத் தேவையில்லை. இது இந்து மதத்தவரின் ஒருமைபாட்டுக்கும் உதவிபுரியும்." (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.41)
"சென்னை சமஸ்கிருதக் கல்லூரி தற்போது தனியார் உதவியால் இயங்கி வருவதாகத் தெரிகிறது. அதற்குப் போதிய அளவு உதவி புரிந்து அதனைத் தமிழக அரசு வலுப்படுத்த வேண்டும். இக்கோரிக்கையை ம.பொ.சி.யின் சிஷ்யர் அருகோபாலன் ஜெயாவிடம் கூறி தன் குருநாதரின் கோரிக்கையை நிறைவேற்றலாமே". (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.58)
சமஸ்கிருத தினத்தை ஒட்டி 26-8-1983இல் ம.பொ.சி. பேசிய பேச்சின் சில பகுதிகளை மேலே தொகுத்து கொடுத்துள்ளேன். இவரைத்தான் மாபெரும் தமிழ் தேசியத் தலைவராகத் தமிழ்த் தேசியவாதிகள் தூக்கிப் பிடிப்பது வியப்பாக உள்ளது.
ஏற்கனவே மூவாயிரம் ஆண்டுகளாகச் சமஸ்கிருத மொழியின் ஆதிக்கத்தால்தான் தமிழ் வளர்ச்சி அடையாமல் போய்விட்டது என்பது பாவாணரின் ஆய்வு. செத்த மொழியான சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க ம.பொ.சி. முன்வந்திருப்பது அவருடைய குருநாதர்களான சத்தியமூர்த்தி, இராஜாஜி ஆகியவர்களை அடியொற்றியே ஆகும். சமஸ்கிருதக் கல்லூரியில் சத்தியமூர்த்தி ஒரு முறை பேசுகிறபோது, "கொஞ்சம் முயற்சி செய்தால் சமஸ்கிருதத்தை நமக்குப் பயன் தரும் வகையில் இந்தியாவினுடைய பொது மொழியாக்கி விட முடியும்" என்றார். (கு.நம்பிஆருரான் தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும் பக் 331)
ம.பொ.சி.யின் மற்றொரு குருநாதரான இராஜாஜியும் இதே கோரிக்கையை முன்வைத்தார். இந்தி ஆட்சி மொழி ஆணையத்திடம் சாட்சியமளித்த இராஜாஜி, "உங்களால் இந்தியையே ஆட்சி மொழியாக்கி விட முடியுமென்றால், ஏன் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்கக் கூடாது. இந்தியாவின் மானமே சமஸ்கிருதத்தில் தான் உள்ளது" என்று கூறியுள்ளார். (நம் நாடு, 17-1-56)
1966 மார்ச் 20இல் கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கழகப் பொதுக்குழவில் சட்டமன்றத் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர். அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்
“தெய்வப்பற்று ,பாரத தேசப் பற்று, தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை, தேசிய ஒருமைப்பாட்டில் ஆர்வம், ஒழுக்கம், கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு அரசியல் கட்சியே தமிழரசு கழகம்”. (செங்கோல் 27-3-66)
“இந்தத் தமிழ் நாட்டில் பிரிவினைக் கொள்கைகளை அழுத்தந்திருத்தமாக கண்டித்து இயக்கம் நடத்திய ஒரே கட்சி தமிழரசுக் கழகம் தான்”. (செங்கோல் தலையங்கம் 5-6-66)
"காங்கிரசிலிருந்து வெளியேறிய பிறகும் பனிரெண்டு ஆண்டுகள் நான் காங்கிரசு ஆதரவாளனாகவே இருந்தேன். காங்கிரசு எதிரிகளை என் எதிரிகளாகவும் கருதி வந்தேன். தேசியத்தில்-தெய்விகத்தின் விரோதியாகத் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டுள்ள தி.க. தலைவர் ஈ.வெ.ரா. தேசியக் கொடி எரிப்பு, அரசியல் சட்ட எரிப்பு போராட்டம், தேசப்பட எரிப்புப் போராட்டம், தேசிய விடுதலை நாளை, குடியரசுத் திருநாளைத் துக்க நாளாகக் கொண்டாடியபோதெல்லாம், அதனை முழுமூச்சாக எதிர்த்தது. தமிழ்நாடு காங்கிரசு அன்று அதற்கு வெளியே என் தலைமையில் இயங்கிய தமிழரசு கழகமே." (செங்கோல் 28-8-66)
காலமெல்லாம் தி.க.வையும், தி.மு.க.வையும் திட்டுவதையே தொழிலாகக் கொண்டிருந்த ம.பொ.சி. இராஜாஜியின் வற்புறுத்தலால் வெட்கம், மானம், சூடு, சொரணை, கூச்சம் கொஞ்சமும் எதுவுமே இல்லாமல் 1966இல் தி.மு.க.வின் கூட்டணியில் இணைந்து இரண்டு இடங்களை தன் கட்சிக்குப் பெற்றார். 1967 சட்ட மன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் பார்ப்பனர்கள் அதிகமாக வாழும் தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ம.பொ.சி. முதல் கூட்டத்திலேயே தான் நாவலர் சத்தியமூர்த்தியின் வாரிசாகத் தேர்தலில் போட்டியிடுவதாக பேசினார்.
“தியாகராயர் நகர் தொகுதி வரலாற்றுச் சிறப்புடையது. இந்தத் தொகுதியில் தான் நாவலர் சத்திய மூர்த்தி வாழ்ந்தார். அவருடைய தலைமையின் கீழ் எட்டாண்டுக் காலம் சென்னை மாவட்டக் காங்கிரசின் செயலாளராக இருந்து பணி புரிந்திருக்கிறேன். அவருடன் சிறையில் இருந்துள்ளேன். இந்தத் தியாகங்களால் சத்திய மூர்த்தியின் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட எனக்கு உரிமையுண்டு.
தலைவர் ராஜாஜி நீண்ட நெடுங்காலம் தியாகராய நகரில் வாழ்ந்தார். அவர்பால் பெருமதிப்புடையவன். அவருடைய பேரன்புக்குரியவன் என்ற முறையிலே, அவர் வாழ்ந்த தியாகராயர் தொகுதியின் பிரதிநிதியாக இருக்க எனக்குத் திறமையும், உரிமையும் உண்டு. இன்னும் சொன்னால் காங்கிரஸ் மகாசபைத் தலைவர் திரு. கு.காமராஜர் தியாகராயர் தொகுதியில்தான் வாழ்கிறார். அவர் எதிர்முகாமில் இருந்தாலும், அவரும் நானும் சிறையில் ஒன்றாக இருந்துள்ளோம். அவர் வாழும் தொகுதியின் பிரதிநிதியாகச் சட்டசபைக்குச் செல்லும் உரிமை எனக்கு உண்டு" என்று பேசினார். (செங்கோல் 22-1-67)
நான் தமிழரசு கழகம் வைத்துள்ளேன் சட்ட மன்றம் சென்றால் தமிழுக்காக பாடுபடுவேன் என்றெல்லாம் அவர் பேசவில்லை. மாறாக இந்திய தேசிய தலைவர்களின் வாரிசாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதையே பெருமையாக கருதினார்.
ம.பொ.சி. குறிப்பிடும் இந்த சத்தியமூர்த்தி யார்? 1938 இந்தி எதிர்ப்பு போர் நடைபெற்ற போது அருப்புக்கோட்டையில் நடைபெற்ற அரசியல் மாநாடு தலைமை பிரசங்கத்தில் இந்தி எதிர்ப்பு போரில் ஈடுபடுவோரின் தலைகளை வெட்ட வேண்டும் என்று பேசியவர். இதை மெயில் பத்திரிக்கை மட்டுமே கண்டித்தது. கடற்கரையில் பெரியார் பேசியபோது 50,000 பேர் கலந்து கொண்டனர். அரசுக்கு எதிரான தீர்மானத்தின் மீது 50,000 பேரும் ஓட்டுக் கொடுத்திருக்கிறார்கள். 50,000 பேரின் தலைகலையும் வெட்டவேண்டும். இதுதானா உமது சுயராஜ்ஜியம் என்று எழுதியது இந்த தமிழ்த் துரோகியின் வாரிசுதான் ம.பொ. சி. இந்தியை எதிர்ப்பவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று பேசியவர் தானே. (குடியரசு 3-7-1938)
ம.பொ.சி.யின் தலைவர் இராஜாஜி 1938 இல் முதலமைச்சராக இருந்தபோது இந்தியைக் கட்டாயப்படுத்தி தமிழர்களை ஒழிக்க முனைந்தார். 1952 இல் முதலமைச்சராக வந்தபோது குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு தமிழர்களின் எதிர்காலத்தை அழிக்கத் திட்டமிட்டவர் தானே.
26-5-67 இல் சௌகார்பேட்டையில் வடஇந்தியர்கள் நடத்திய வள்ளுவர் - குர்தாஸ் - தாகூர் விழாவில் 'கலச்சார ஒருமைப்பாடு தேவை' என்ற தலைப்பில் பேசிய ம.பொ.சி.
“தமிழகத்தில் தி.மு.க. அமைச்சரவை தோன்றியிருக்கிறது. அதனால் இங்குள்ள வடஇந்தியர்கள் சிறுபான்மையினர் தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ? என்று கவலைப்படத் தேவையில்லை. அரசியலமைப்பின் படி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி நடத்தினாலும் ஆளுகின்ற அமைச்சர்கள் அப்பட்டமான தமிழர்கள், தமிழ் மொழியிடத்திலும் தமிழருடைய பண்பாட்டினிடத்தும் அதிகமான பற்றுடையவர்கள். வடக்கே டில்லி - பம்பாய் - அகமதபாத் - கல்கத்தா - ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வாழும் பல லட்சக்கணக்கான தமிழர்களுக்குப் பாதுகாப்பு தேடுவதிலே அக்கறையுடையவர்கள். ஆதனால், தமிழகத்தில் உள்ள வடஇந்தியர்களின் நலன்களுக்கு பாதுகாப்பளிப்பதன் மூலம் தான் வடக்கே உள்ள தமிழர்களின் நலன்களுக்கும் பாதுகாப்பு தேட முடியும்மென்பதனை தமிழக அமைச்சர்கள் அறிவார்கள்.
கேவலம் கட்சிப்பூசல் காரணமாக இங்குள்ள தமிழர்களிலே சிலர் (தி.க.வினர்) உங்களைப் பயமுறுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யலாம். அதனை நம்பாதீர்கள். இதனை, தமிழக அமைச்சர்களின் நண்பன் என்ற முறையிலேயே உறுதியாக கூறுகின்றேன்." (செங்கோல் 4-6-67)
இங்குள்ள வடநாட்டினரை தாக்கினால் அங்கே தமிழர்கள் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் என்பதை சூசகமாக ம.பொ.சி. தெரிவிக்கிறார். வடநாட்டான் எதிர்ப்பு கூடாது என்கிறார்.
"எனக்கு அரசியல் உணர்வு பிறந்த காலந்தொட்டு, நான் இந்தியா முழுவதையும் எனது தாய்நாடாகக் கருதி வந்திருக்கின்றேன். இன்றும் அதே உணர்வுடனேயே - நீங்களும் - நானும் இந்தியர்கள் என்ற நினைப்புடன் இந்த விழாவில் பேசுகிறேன்."
கூட்டணி தி.மு.க.வுடன் ஆனால் இவருடைய உள்ளத்தில் நிறைந்திருந்த இந்திய தேசிய குப்பைகளே.
நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் தமிழப்பேரரசு ஒன்றை அமைக்கப் போவதாக ஆதித்தனார் தமிழப் பேரரசு என்ற நூலை வெளியிட்டார். அதைக் கண்டித்த ம.பொ.சி.
“இந்தியத் தொடர்பிலிருந்து தமிழகத்தை பிரித்துவிட எண்ணமாம். இலங்கை இந்திய பகுதிகளையும் தமிழகத்தோடு சேர்க்க தொண்டு செய்யப் போகிறாராம். இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் உதவியை வழங்குவது காலித்தனம்”. (செங்கோல் 23-2-1958)
இலங்கையின் நட்புக்காக 22 இலட்சம் தமிழர்களை பலியிடுவதா, பாக்கிஸ்தான் நட்புக்காக காஷ்மீரைப் பறிகொடுக்க இந்தியா தயாரா என்று கேட்ட ம.பொ.சி. (செங்கோல் 6-12-1964) இரண்டே ஆண்டுகளில் தன் நிலையை மாற்றிக் கொள்கிறார்.
"தமிழர் - சிங்களவர் உறவு நீடிக்க வேண்டும். தமிழர் என்ற பெயரால் உங்கள் உள்ளத்தில் வளர்ந்துள்ள இன உணர்ச்சியை இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செல்ல அனுமதிக்காதீர்கள். தமிழ் பேசி தமிழராக வாழ்ந்ந்தாலும் உங்கள் தாயகம் இலங்கைதான். பிளவுக்கு இடமின்றி ஒன்றுபட்டு வாழுங்கள். சாஸ்திரி - சிறிமாவோ ஒப்பந்தத்தை நான் எதிர்க்கவில்லை. அந்த ஒப்பந்தம் வெளியானபோது நான் எதிர்ப்பு காட்டியது உண்மை. இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்திய வம்சாவளி தமிழர்களை இனி கடவுள் தான் காப்பற்றவேண்டும்" என்று கூறிவிட்டார். (செங்கோல் 14-8-66)
"பொதுவாக, காந்தியடிகள் காண விரும்பிய இராமராஜ்யத்தை காண்பதே நாட்டு மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். காந்தியடிகள் ராமராஜ்யத்தை விரும்பியது, தமக்கா அன்று நமக்காக! ஆகவே அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதொன்றே நம்முடைய வேதனைகளுக்கெல்லாம் பரிகாரம்." (செங்கோல் 2-10-66)
ராமராஜ்யம் வந்தால் நம்முடைய எல்லா வேதனையும் தீர்ந்து விடும் என்கிறார் ம.பொ.சி.
உணவுப்பஞ்சம் தீரவும் ம.பொ.சி. பெரிய உண்மையை கண்டுபிடித்துவிட்டார்.
26.10.65. கந்தர்சஷ்டி விழாவில் பேசிய ம.பொ.சி. "தெய்வ பக்தியின் பெயரால் நம்முன்னோர் கடைபிடித்த அமாவாசை, கிருத்திகை, ஏகாதேசி, சஷ்டி விரதங்களை இன்றும் நாம் அனைவரும் சரியாக கடைபிடித்தால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்து விடுமே!” என்கிறார் (செங்கோல் 7-11-65).
 ஈழ விடுதலைப் போராட்டத்தை ம.பொ.சி. என்றுமே ஆதரித்ததில்லை. ஒரு முறை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது “நீங்கள் விரும்பினால் பிரபாகரனைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று ம.பொ.சி.யிடம் கூறினார். ஆனால் அவரது புலிப்போக்கு எனக்குப் பிடிக்காததால் அவரை நானாகச் சென்று பார்ப்பதைத் தவிர்த்தேன் என்கிறார் ம. பொ. சி. (ம. பொ. சி., ஈழத்தமிழரும் நானும் பக். 190)
"நான் காந்தியத்தை ஏற்று, அந்த தத்துவியலின் தலைமையில் நடந்த சாத்வீகப் போரிலும் ஈடுபட்டு, இந்தியா சுதந்திரம் பெறப் பாடுபட்டவனானதால் உலகில் எந்த ஒரு நாடும் தனது சுதந்திரத்திற்காக வன்முறையில் ஈடுபடுவதை நான் ஆதரிப்பதற்கில்லை. அந்த வகையில் தான் என் இனத்தவரான ஈழத்தமிழர் தனிஈழ நாடு கோரி நடத்தும் பயங்கர இயக்கத்தை அது தோன்றிய நாள் முதலே நான் ஆதரிக்கவில்லை. தனி ஈழநாடு கோரும் பயங்கரவாதிகளின் முன் வரிசைத் தலைவர்களில் எவரையும் நான் சந்தித்ததில்லை (ம.பொ.சி., ஈழத்தமிழரும் நானும் பக். 186).
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் பிரபாகரனை பார்க்க விரும்பவில்லை எனக் கூறும் ம.பொ.சி. தான் தமிழ்த் தேசியக் கட்சியினருக்கு மண்ணுரிமை போராளியாம். நாம் தமிழர் இயக்க சீமானுக்கு பிரபாகரனும், தலைவர் பிரபாகரனை கண்டித்து, பார்க்க மறுத்த ம. பொ. சி. யும் தலைவர்! என்ன கொள்கையோ!!
aathithanaarஇந்திய அமைதிப்படை இலங்கைக் சென்று பல ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து விட்டு வந்ததை வரவேற்ற ம.பொ.சி. இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, துக்ளக்சோ, ஜெயகாந்தன் வரிசையில் இருந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று தமிழர் விரோதப் பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்பது இந்தத் தலைமுறையினர் அனைவரும் அறிந்ததே.
1971இல் தேர்தலில் தோற்றுவிட்ட ம.பொ.சி. தன் தமிழரசு கழகம் தேர்தல் கட்சியல்ல என்று அறிவித்துவிட்டார். 1972இல் கருணாநிதியின் தயவால் மேலவை உறுப்பினரானார். 1976 இல் தமிழ்நாட்டில் பிற மொழியினர் என்ற நூலை எழுதிய ம.பொ.சி. 1977இல் தி.மு.க. தோற்றுவிட்டவுடன், மலையாளியான எம்.ஜி.ஆரிடம் ஓடினார். அவரிடம் கெஞ்சி கூத்தாடி மேலவைத் தலைவர் பதவியையும் அனுபவித்தார். 1986இல் மேலவை கலைக்கப்பட்டவுடன் இனி மேய்ச்சலுக்கு திராவிட இயக்கத்தில் ஒன்றும் இல்லை என்று தெரிந்தவுடன், தன் தாய்க் கழகமான காங்கிரசில் தமிழின துரோகி வாழப்பாடி சால்வை போர்த்த தமிழ் ஈழத்தைக் கொன்றொழித்த இராஜீவ் காந்தி முன்னிலையில் 1989இல் சேர்ந்தார். ம.பொ.சி.யின் போலி தமிழரசு கழகம் காங்கிரசில் இரண்டற கலந்துவிட்டது. ம.பொ.சி. என்றுமே தமிழ்த் தேசியராக ஒரு நாளும் இருந்ததில்லை. அவரைத்தான் இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் தமிழ்த்தேசத் தலைவராகத் தூக்கிப் பிடிக்கின்றனர்.
எம்.ஜி.ஆர். மேலவை தலைவர் பதவி கொடுக்கவே அவரைப் பாராட்டி நீண்ட தொடர் கட்டுரையை செங்கோல் இதழில் எழுதி வந்தார். பூங்கொடி பதிப்பகம் அதனை தொகுத்து “எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இருந்த உறவு” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறது.
1954இல் குலக்கல்வி திட்டத்தை திரும்ப பெற மறுத்து முதலமைச்சர் பதவி விலகி சென்று விட்டார் இராசாசி. பெரியாரின் ஆதரவுடன் காமராசர் முதலமைச்சரானார். அப்போது காமராசை ‘பச்சைத் தமிழன்’ எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டுமென பெரியார் கேட்டுக் கொண்டார். இதைக் கண்டித்த ம.பொ.சி. “பச்சோந்தி ஈ. வெ.ரா. காமராசரைப் பச்சைத் தமிழன் என்கிறார்” (செங்கோல் 12-7-54) என்று எழுதினார்.
உண்மையில் தன் வாழ்நாள் முழுவதும் பச்சோந்தியாக வாழ்ந்தவர் ம.பொ.சி.யே. முதலில் சத்தியமூர்த்தி, அடுத்தது இராஜாஜி, பிறகு காமராசர், அகில இந்திய அளவில் காந்தி, நேரு. நேரு மறைந்த போது நான் என் தலைவரை இழந்துவிட்டேன் என்று தலையங்கம் எழுதினார். தமிழரசு கழக கொடிகளை ஒரு வாரம் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார். சென்னையில் மவுன ஊர்வலம் நடத்தினார்.
1964 முதல் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிவந்தார். 1967இல் சட்ட மன்றத்தில் தி.மு.க. ஆட்சியின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து பேசிய ம.பொ.சி., தி.மு.க.விற்கு விசுவசாமாக நடந்து கொண்டார். அண்ணா மறைந்தவுடன் கலைஞரிடம் போய் மேலவை உறுப்பினரானார். தி.மு.க. தோற்றவுடன் எம்.ஜி.ஆரிடம் போய் அவருக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டு மேலவைத் தலைவரானார். அங்கிருந்து ராஜீவ்காந்தியிடம் ஓடினார். எங்கெங்கு தாவுகிறாரே அதற்கு ஏற்றபடி தாளம் போட்டு உண்மையான பச்சோந்தியாக வாழ்ந்து காட்டினார்.
ம.பொ.சி. தமிழ்த் தேசியக் காவலரும் அல்ல, தமிழ்த் தேசியத் தலைவருமல்ல. அவர் முழுக்க முழுக்க இந்திய தேசியவாதியே ஆவார்.
பெரியாரைத் திறனாய்வு செய்வதாகக் கூறும் அருகோபாலன் என்றைக்காவது ம.பொ.சி.யைத் திறனாய்வு செய்திருக்கிறாரா, ஏன் செய்யவில்லை? யாராவது கூட்டம் போட்டால் வந்து திராவிட இயக்கத்தை திட்டிவிட்டு போவது ஒரு வேலையா? அய்ம்பதாண்டுகளாக அரசியலில் இருக்கும் அருகோபாலன் என்றைக்காவது தன் கொள்கை இதுதான் என்று தெளிவாகக் கூறியிருக்கிறாரா? அதற்காக அமைப்புகட்டும் முயற்சி செய்தாரா அல்லது எந்த அமைப்பிலாவது உறுப்பினராக இருந்தாரா? இல்லையே ஏன்?
அருகோபலானின் இன்னொரு குருநாதர் சி.பா.ஆதித்தன் ஆவார். இவர் வெளிநாட்டில் சட்டம் பயின்று சிங்கப்பூரில் வழக்குரைஞர் தொழில் செய்து வந்தார்.
ஆதித்தனார் தன்னைப் பற்றி கூறியது.
“1939இல் மலேயாவில் பாரிஸ்டராகத் தொழில்புரிந்து வந்தபோது தமிழகத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்ற குரல் கிளம்பியதைக் கேட்டேன் அந்த இலட்சியத்திற்குத் தொண்டாற்றும் எண்ணத்தோடு மனைவி மக்களோடு சென்னை வந்து சேர்ந்தேன். சென்னைக்குக் கப்பலில் வந்து இறங்கிய அன்று திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற நீதிக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. உடனே சென்னையிலிருந்து ஒரு வாடகை காரை அமர்த்திக் கொண்டு திருக்கழுக்குன்றம் போனேன். தலைவர் பெரியார் அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் நான் என் கருத்தைத் தெரிவித்தவுடன் மாநாட்டுப் பந்தலுக்குள் அண்ணா அவர்களைச் சுட்டிக் காட்டி 'அண்ணாதுரை இருக்கிறார்; அவருடன் பேசுங்கள்' என்று கூறி அனுப்பி வைத்தார்.
மாநாடு முடிந்த பிறகு அண்ணா அவர்களோடு நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு எனக்கு அன்று கிடைத்தது. தமிழ்மொழிக்கு ஒரு மறுமலர்ச்சி தேவை என்ற கருத்தை மிகவும் வலியுறுத்திப் பேசினார். தமிழக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் அவருடன் சேர்ந்து தொண்டாற்ற உறுதி கொண்டு இருக்கிறேன் என்று கூறி அவரிடம் விடைபெற்று கொண்டார்." (முகிலை இராச பாண்டியன், நாம் தமிழர் இயக்கம் பக். 51)
 “1942இல் திரும்பி வந்தேன் மதுரையில் ‘தமிழன்’ என்ற வார இதழைத் தொடங்கினேன். அப்போது அண்ணா அவர்கள் தமிழன் பத்திரிகைக்கு ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அதை இன்னும் நான் வைத்திருக்கிறேன்.” (முகிலை இராச பாண்டியன், நாம் தமிழர் இயக்கம் பக்.61, 62)
அப்போதுதான் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால் அந்த இயக்கம் நீண்ட நாள் நீடிக்கவில்லை, 1945இல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார் ஆதித்தனார். 1946இல் காங்கிரசின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமேலவை உறுப்பினர் ஆனார். அப்போது இருந்த காங்கிரசு அரசு பனைமரத்துக்கு வரி விதித்தது. இது கள் இறக்கும் தொழிலாளர்களை பாதித்தது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தி சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்துவிட்டார்.
1951இல் பிரஜா கட்சியில் சேர்ந்தார். அது 1952இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியாக மாறியது. 1952இல் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அந்த கட்சியின் முடிவின்படி 30-8-1955 முதல் 18-9-55 வரை கிசான் போராட்டம் நடத்தினார். உழவர்கள் மறியல் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டார்கள். அந்த கட்சியின் பலம் அவ்வளவுதான் தமிழ்நாட்டில். (முகிலை இராச பாண்டியன், நாம் தமிழர் இயக்கம் பக்.67)
அந்த கட்சி அடுத்தத் தேர்தலில் வெற்றிபெறாது என்று தெரிந்தவுடன் அதிலிருந்து விலகி சுயேச்சையாக 1957இல் சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1958 பிப்ரவரி ஒன்பதாம் நாள் மீண்டும் நாம் தமிழர் இயக்க கூட்டத்தை நடத்தினார். 1960 சூன் 5 ஆம் நாள் தந்தை பெரியாருடன் இணைந்து தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டம் நடத்தினார். அப்போதுதான் பெரியாரிடம் பக்குவமாக பேசி பெரியார் திடல் இடத்தில் பாதியை எனக்கு எழுதிக் கொடுத்தால் நீங்கள் வாங்கிய முழுத் தொகையையும் கொடுத்து விடுகிறேன் என்று கூறி பெரியார் திடலின் முன் பக்கமாக உள்ள இடத்தை வாங்கிக் கொண்டு தினத்தந்தி அலுவலகம் வைத்தார்.
1960 இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். 1959இல் தமிழப் பேரரசு என்ற நூலை எழுதினார். அப்போது அது தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்டது. 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆதித்தனார் உண்மையான தமிழ்த் தேசியராக விளங்கியது 1958 முதல் 1965 வரை 7 ஆண்டுகள் மட்டுமே. ஆதித்தனாரே தி.மு.க.வில் இணைந்ததைப் பற்றி கூறுகிறார்.
“1965 இல் பாதுகாப்புக் கைதியாக என்னை நான்காவது முறையாக சிறைப்படுத்தினார்கள். அந்த சமயத்தில் ஒரு நாள் ‘பரேலில்’ வந்திருந்தேன். பரேலில் இருந்து லீவில் வந்திருந்த நான் ‘கலைஞர்’ அவர்களை ‘மேகலா’ அலுவலகத்தில் சந்தித்துப் பிரிவினைத் தடைச் சட்டம் வந்து விட்டதால் தி.மு.க.வில் இரண்டறச் சேர்ந்து விடுவதாகத் தெரிவித்து விட்டு மறுநாள் கோவைச் சிறைக்குப் போய்விட்டேன்”.
அதன்பிறகு கூட்டணி அமைப்பதில் அறிஞர் அண்ணாவுடனும், கலைஞர் அவர்களுடனும் சேர்ந்து பல திட்டங்களைத் தீட்டினேன் என்கிறார். இது முத்தாரத்தில் ஆதித்தானரே எழுதியது. ஆனால் அண்டபுளுகர் அருகோபாலன் தமிழர் என்ற பெயருடைய அமைப்புகளையெல்லாம் திராவிட இயக்கம் அழித்துவிட்டது என்ற பொய்யை எழுதி திரும்ப திரும்ப எழுதிவருகிறார்.
ம.பொ.சி. காங்கிரசில் 1989இல் சேரும் வரை தமிழரசு கழகம் என்ற பெயரை வைத்துக் கொண்டுதான் இருந்தார். ஆதித்தனார் அவராகவே விரும்பி தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார். 1967 தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக வந்தவுடன் அவைத் தலைவராக ஆதித்தனாரை நியமித்தனர். 1969இல் அமைச்சரானார். 1972இல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் அமைச்சரானார். 1980 தேர்தலில் இவருக்கு தேர்தலில் நிற்க சீட்டு தரவில்லை என்பதால், எம்.ஜி.ஆரிடம் ஓடிச்சென்று அ.தி.மு.க.வில் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். பதவி வெறியரான இவர்தான் அருகோபாலனின் இன்னொரு தமிழ்த்தேசியத் தலைவராவார். எந்தப் பதவிக்கும் ஆசைப்படாமல் 1938 முதல் இந்தி ஆதிக்கத்தையும், வடவர் ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்த பெரியார், 1956 முதல் 1973 இல் அவர் மறையும் வரையில் சுதந்திர தமிழ்நாடு விடுதலைக்காக பாடுபட்ட பெரியார் இவருக்கு வேப்பங்காய் கசக்கிறது. இவர் என்ன தமிழ்த் தேசியவாதியோ!!
இந்தி வெறியர் ம.பொ.சி.யும், பதவி வெறியர் ஆதித்தனாரும் தான் இன்றைய தமிழ்த்தேசியவாதிகள் அனைவருக்கும் தலைவர்களாய்த் தெரிகிறார்கள். சுதந்திரத் தமிழ்நாடு அடைந்தே தீருவேன் என்று போராடி வந்த பெரியார் இவர்களுக்கு தமிழினத் துரோகியாய் தெரிகிறார்.

இவர்கள் உண்மையில் தமிழ்த் தேசியவாதிகளா?. இந்திய தேசியவாதிகளை தூக்கிப் பிடிக்கும் அருகோவுக்கு இடமளிக்கும் தென்மொழி தன் பாதையில் இருந்து விலகுகிறதா?
ம.பொ.சி.யின் செங்கோல் வார இதழ்களில் 6000 பக்கம் படித்துள்ளேன். தேவைப்படின் மேலும் எழுதத் தயாராக உள்ளேன்.
குறிப்பு:
நாம் தமிழர் இயக்கம் பற்றிய நூல் எழுதிய வரலாற்றுப் பேராசிரியர் முகிலை இராச பாண்டியன் ஆதித்தானார் பல கட்சிகளுக்குத் தாவியதைப் பற்றி ஒரு வரி கூட எழுதாமல் மறைத்துவிட்டார். நாம் தமிழர் இயக்கம் மட்டுமே நடத்தியதாக எழுதி வரலாற்று பிழையைச் செய்துள்ளா

எல்லை மீட்பு - ராஜகோபாலாச்சாரிக்காக பல்டி அடித்த ம.பொ.சி.!


எல்லை மீட்பு - ராஜகோபாலாச்சாரிக்காக பல்டி அடித்த ம.பொ.சி.!


தேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டம் தொடர்பாக தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானத்துக்கும் பெரியாருக்குமிடையே நடந்த கடிதத் தொடர்புகள் குறித்து பெரியார் நிகழ்த்திய உரை, 5.1.2012 மற்றும் 12.1.2012 இதழ்களில் வெளியிட்டிருந்தோம். தேவிகுளம், பீர்மேடு என்ற பகுதிகளை தமிழகத்தோடு இணைத்துக் கொள்வதையும் தாண்டி, தமிழ் நாட்டின் முழுமையான தன்னாட்சிக் கோரிக்கைகளாக, ராணுவம், வெளி நாடு உறவு நீங்கலாக, ஏனைய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டும். இந்தியை தேசிய மொழியாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்; தமிழ்நாட்டின் எல்லைகளை நிர்ணயிப்பதில் எல்லை ஆணையம் செய்துள்ள ஓர வஞ்சனைகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் போராட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். இதை பெரியாரிடம் ஒப்புக் கொண்ட ம.பொ.சி., பிறகு, தனது போக்கை மாற்றிக் கொண்டதை பெரியார், அதில் விரிவாக விளக்கி இருந்தார். தொடர்ந்து பெரியார் உரையின் நிறைவு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.

“இதையெல்லாம் நான் குறிப்பிடுவது இதற்குப் பின்னால் இனிமேல் ம.பொ.சி.யார் அடிக்கப் போகிற காரணத்தை (பல்டியை) விளக்குவதற்கேஆகும்.

இப்படி எல்லாம் முதலில் கடிதம் மூலமாக நேரிலும் பேசி வந்தவர் சட்டென்று மாற்றமடைந்து விட்டார். பிறகு நான் சென்னைக்குச் சென்றவுடன் 26 ஆம் தேதி அன்றைய தினம் எனக்கு ஒரு அச்சடித்த “சர்வ கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம்” என்ற தலைப்பில் அழைப்பிதழ் வந்தது. அதில் தமிழக எல்லைப் பகுதியை மட்டும் குறிப்பிட்டு அதற்கென்று ஆலோசனைக் குழு நடத்தப் போவதாகவும் அக்குழு ஜனவரி 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ‘உமா’ பத்திரிகை அலுவலகத்தில் சககட்சித் தலைவர்களின் ஆலோசனையின் பேரில் கூடுகிறதென்றும் அதற்கு வர வேண்டும் என்பதாகவும் எழுதி அதில் நண்பர் ம.பொ.சி.யின் கையெழுத்து மட்டும் இருந்தது. முதலில் என்னென்னமோ எழுதினார். முதலில் எழுதிய கடிதம் ஒன்றுடன் இணைத்திருந்த சர்வகட்சி தலைவர்களுக்கு அழைப்பு தகவலில் 5 பேர்களுக்குக் கையெழுத்திட இடம் ஒதுக்கி இருந்தார். அதில் அவர் இரண்டாவதாக கையெழுத்திட்டிருந்தார். அப்படியிருந்தும் இன்றைக்கு திடீர் மாற்றமடைந்துவிட்டாரோ என்று யோசித்தேன். மேலும் முதலில் பேசியபடி எந்தெந்த விஷயங்கள் சம்பந்தமாக கிளர்ச்சி என்பதையும் விட்டு இப்போது ஒன்றுக்கு மட்டும் கிளர்ச்சி என்பதாகவும் மேலும் தனக்கு சவுகரியப்பட்ட ‘உமா’ பத்திரிகை அலுவலகத்தில் கூடுவது என்பதும் அவருடைய முழு மாற்றத்தையும் தெரிவித்தது.

இதற்கிடையில் அப்போது எங்கிலும் கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அங்கங்கே தந்திக் கம்பிகளை அறுப்பதும் தண்டவாளங்களை பெயர்ப்பதும் ரயிலை நிறுத்துவதும் சட்டசபை மறியலும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தனையும் நடந்து கொண்டிருக்கையில் அரசினரிடம் நடவடிக்கை எடுக்க திட்டம் வகுக்கப்படுகிறதாம்.

இப்படி மக்களை திடீரென்று ஒருவித முன் யோசனையும் இன்றி தூண்டிவிட்டு இத்தனை அக்ரமங்களையும் செய்யச் சொல்லி அதனால் ஒருவித பயனும் இல்லாமல் உள்ளே தள்ளப்பட்டது தான் கண்ட பலனாக இருக்க திடீரென்று அன்றைய ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானப்படி இப்போது நடத்தப்படும் கிளர்ச்சியை வாபஸ் வாங்கிக் கொண்டு இதன் சம்பந்தமாக கவனிக்க ஒரு கமிஷனை ஏற்படுத்தி அதற்கு தலைவராக சர் பி.டி. ராஜனைத் தேர்ந்தெடுத்து இனி அந்தக் கமிட்டியின்படி ஆலோசிக்கப்படும் என்று கூறி விட்டார்கள்.

நான் எனக்கு வந்த அழைப்பைக் கண்டவுடன் அழைப்பைக் கொண்டுவந்து கொடுத்த தோழர் உமாபதியிடம், “நண்பர் ம.பொ.சி. சொல்லுகிற வார்த்தைக்கு மாறாகத்தான் நடந்து கொள்ளுதல் வழக்கம்போல் இருக்கிறது” என்று கேட்டேன். அதற்கு அவர், “எனக்கு ஒன்றும் தெரியாதே என்னைக் கேட்கிறீர்களே அவரையே கேளுங்கள்” என்று தொலைபேசியில் ம.பொ.சி.யைக் கூப்பிட்டார். நான் அவரிடம், “நீங்கள் என்ன என்னிடம் சொன்னீர்கள் இப்போது என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு காரணம் கூறினார். எனக்கு அவர் எழுதிய 20 ஆம் தேதி கடிதம் 22 ஆம் தேதி கிடைத்ததால் உடனடியாக ஒன்றும் பதில் தெரிவிக்க முடியாமற் போனதால் அதை ஒரு குறையாகக் குறித்து நீங்கள் தான் நான் எழுதுகிற கடிதம் வந்து சேரவில்லையென்று கூறுகிறீர்கள்! நான் என்ன செய்வேன். மேலும் மற்றவர்கள் எல்லாம் நீங்கள் கூறுகிறவைகளின்படி ஏனையவைகளுக்கு சம்மதிக்க மறுக்கிறார்கள். எனவே நீங்கள் இக்குழுவில் கலந்துகொண்டு உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்” என்றார். நான் அங்கு வருவதாகவும் இல்லை உங்கள் தேவையும் அவசியமில்லை என்று கூறி முடித்தேன்.

இப்படி நண்பர் ம.பொ.சி. மாறுவதற்குக் காரணம் இருக்கிறது. ஆச்சாரியார் தட்சிணப் பிரதேசத்தை ஆதரித்துப் பேசி, தட்சிணப் பிதேசம் அமைக்கப்பட வேண்டியது அவசியம்தான் என்று கூறி இருக்கிறார். அன்றைய மறு தினமே  நண்பர் ம.பொ.சி. மாறிவிட்டார். நம்முடன் கலந்தால் அதையெல்லாம் எதிர்க்க வேண்டுமே என்பதற்காக மிகத் தந்திரமாக இப்படி மாறிவிட்டார்.

ஆனால் தட்சிணப்பிரதேசம் அமைக்கப்பட்டால் இவர்கள் அத்தனை பேரும் ஆதரித்தாலும் சரியே. நான் மட்டும் விடப் போவதில்லை. அதை அறிவிக்கும் முயற்சியில் கடுமையாக திட்டமிட்டிருக்கிறேன்.

(29.1.1956 வேலூரில் பெரியார் பேசியது - ‘விடுதலை’ ஏட்டிலிருந்து( nandri: www.keetru.com)