Thursday, March 17, 2011

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -6

வைகோவின் உரையும் வரவேற்பும்

திரு. வைகோ : ஐயா! அதுதான் முதற்படி. ஏறத்தாழ அனைத்து உறுப்பினர்களுமே இந்த மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள். பஞ்சாப் போன்ற சில மாநிலங்களுக்கு உளமார்ந்த பயமும், கவலையும் உள்ளன.


ஆனால் எதிர்வரும் ஆண்டுகளில், அவர்களும் இதனை ஏற்றுக் கொள்ளும் ஒரு நாள் வரும். ஒருநாள் அரசாங்கமும், இந்த நாடாளுமன்றமும் மாநிலங்களிலே ஓடும் நதிகளை நாட்டுடைமையாக்கும் மசோதாவை நிறைவேற்றுவதை நான் பார்ப்பேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனவே, இந்த விவாதத்தில் பங்கு கொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நதிநீரை மாநிலங்களிடையே சரி சமமாகப் பகிர்ந்தளிப்பதற்கான நோக்கத்துக்கும், அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கும், மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளை நாட்டுடைமையாக்குவதற்கும் வகை செய்வதற்கான இந்த மசோதாவின்மீது உரையாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன்.

(2000 ஆகஸ்ட் 11 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் )

மக்களவையில்

வைகோவின் உரையும் - வரவேற்பும்

மாநிலங்களிடையே ஓடுகின்ற நதிகளை நாட்டுடைமையாக்கக் கோரி கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்திருந்தார். 2000ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதியன்று இந்த மசோதா மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்குப் பின்னர் ஜூலை 28-ஆம் தேதி விவாதம் தொடர்ந்தது. ஆகஸ்ட் 11-ஆம் நாள் நிறைவு பெற்றது. இந்த விவாதத்தில் வைகோ பேசும்பொழுது நதிநீர் நாட்டுடைமையாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

உலக நாடுகள் முழுவதிலும் நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளையும் அவை தீர்க்கப்பட்ட விதங்களையும் தமது உரையில் எடுத்துக் கூறினார். இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே ஓடுகின்ற நதிகளின் நீர்ப் பங்கீடு தொடர்பாக நிலவி வருகின்ற பல்வேறு பிரச்சினைகளையும், கங்கை - காவிரி இணைப்பின் முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க வேண்டுமென்றும், கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் வீணாகும் நதிகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்பிவிட வேண்டுமென்றும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமென்றும் தம்முடைய உரையில் கேட்டுக் கொண்டார். மக்களவையின் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் வைகோ உரையாற்றினார்.

இந்த மசோதாவின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணி சங்கர் அய்யர் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட மசோதாக்களிலேயே சிறந்த மசோதா இது என்று குறிப்பிட்டார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.சி. ஜோஸ் கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் வீணாகும் நதிகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்பிவிட வேண்டுமென்ற திட்டத்தை ஆதரித்துப் பேசினார். அதற்காக வைகோ அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் மசோதாவை ஆதரித்துப் பேசினார்.

பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த கர்பேலா ஸ்வெய்ன், டாக்டர் சுசீல்குமார் இந்தேரா, கிரிதாரிலால் பார்கவா, விஜேந்திரபால் சிங், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகத்தைச் சேர்ந்த பி.எச். பாண்டியன், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஹரிசங்கர் மகாலே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் நிதிக்ஷ் சென் குப்தா ஆகியோர் இந்த மசோதாவினை ஆதரித்துப் பேசினர்.

அகாலிதளம் (மான்) கட்சியைச் சேர்ந்த சிம்ரஞ்சித் சிங்மான் எதிர்த்துப் பேசினார். மசோதாவுக்குப் பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜ&ன் சேத்தி உறுப்பினர் வைகோவின் இந்த மசோதா வரவேற்கத்தக்கதாகும். மிகச் சிறந்த கருத்துகளை உள்ளடக்கியிருக்கின்றது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் பல மாநிலங்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. பல பிரச்சினைகள் உருவாகும். ஆனால், நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டமியற்றும் - அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

அமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து பேசிய வைகோ, இரண்டு உறுப்பினர்களைத் தவிர இந்த மசோதாவில் பேசிய மற்ற அனைவருமே ஆதரித்துப் பேசினார்கள். இயற்கை வளங்களையும், செல்வங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி மொத்த இந்தியாவையும் வளப்படுத்த வேண்டுமென்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும். கங்கை - காவிரி இணைப்பு தற்போது சாத்தியமில்லாவிட்டாலும், மகாநதி, கோதாவரி ஆகியவற்றின் உபரி நீரை தாமிரபரணி - வைப்பாறு வரை கொண்டு போய் இணைக்க வேண்டும்.

100 கோடி இந்திய மக்களுக்கும் மாநிலங்களிடையே ஓடுகின்ற நதிகள் தேசியமயமாக்கப்படவேண்டும். “கங்கை நதிப்புரத்துக் கோதுமைப்பண்டம்; காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” என்ற மகாகவி பாரதியின் கனவுகள் நனவாகிட ஒரே வழி நதிகளைத் தேசியமயமாக்குவதுதான். என் கருத்துகளில் பெரும்பாலானவற்றை அரசு ஏற்றுக் கொண்டாலும், சில மாநிலங்களில் பிரச்சினைகள் உருவாகலாம் என்பதால் இந்த மசோதாவைத் தற்போது அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், எதிர்காலத்தில் இந்த மசோதாவை மத்திய அரசாங்கமே கொண்டு வந்து, அதை அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக் கொண்டு சட்டமாக்குகின்ற நாள் நிச்சயம் வரும். நான் எதிர்காலத்தையும் வருங்காலத் தலைமுறையையும் எண்ணியே இந்த மசோதாவைக் கொண்டு வந்தேன் என்று குறிப்பிட்டார்.

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -5

நதிகளை இணைப்போம்


11.08.2000 அன்று விவாதம் தொடர்கிறது...

அரசமைப்பு அதிகாரம்!

நீர்வளத்துறை அமைச்சர் (திரு. அர்ஜூன்சேத்தி) : தலைவர் அவர்களே! இந்த மதிப்புக்குரிய அவையில் திரு. வைகோ கொண்டு வந்த இந்த மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளை நாட்டுடைமையாக்குதல் மசோதாவை மீது மாண்புமிகு உறுப்பினர்கள் இந்த விவாதத்தின்போது தெரிவித்த கவலையிலும், அக்கறையிலும் நானும் பங்கு கொள்கிறேன்.

அனைத்துக் கட்சியினர் ஆதரவு!

திரு. வைகோ (சிவகாசி) : தலைவர் அவர்களே! முதலில்,இரு உறுப்பினர்களும், மாண்புமிகு அமைச்சரும் நீங்கலாக, இந்த மசோதாவை ஆதரிக்க முன்வந்த பல்வேறு அரசியல் கட்சிகளையும் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய கவலையைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதற்கு அமைச்சர் உணர்வு பூர்வமாக ஒப்புக் கொண்டார். அதே சமயம், எனது நண்பர் மாண்புமிகு திரு. மணிசங்கர் ஐயர் அவர்கள், காவிரி நதி நீர்ப் பூசலின் கடுமையான பிரச்சினையை எடுத்துரைத்து அருமையாக உரையாற்றினார். மாண்புமிகு உறுப்பினர்கள் சுதர்சன நாச்சியப்பன், டாக்டர் நிதிக்ஷ் சென் குப்தா, கே. சுவைன், பேராசிரியர் ராசாசிங் ராவாத், வி. இராதாகிருக்ஷ்ணன், சிம்ரஞ்சித்சிங்மான், டாக்டர் சுசில் குமார் இந்தோரா, ஏ.சி. ஜோஸ், பி.எச். பாண்டியன், கிரிதாரிலால் பார்கவா, அரிபாவ் மகாலே, விஜேந்திரபால்சிங் ஆகியோர், மாநிலங்களிடையே ஓடும் நதிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் எனக் கோரி இந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி நான் முன்மொழிந்த மசோதாவின் மீது அற்புதமான விவாதம் நடைபெறுவதற்கு உதவினார்கள்.

வி. இராதாகிருக்ஷ்ணன், தமது எதிர்ப்பை மிகத்தீவிரமாகக் காட்டினார். ஏனென்றால், மேற்கு நோக்கிப் பாயும் நதிகளிலிருந்து ஏராளமான நீர் அரபிக் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, அந்நீரை தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிடவேண்டும் என்று நாங்கள் வேண்டியபோது, அவர் தமது கவலையைத் தெரிவித்தார்.

குறுகிய நோக்கம்!

அரபிக் கடலில் வீணாகும் நீரைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிடுவதால், கிடைக்கும் மின்விசை அவர்களுக்கும் பயன்படும். நீரின் பெயரால், அவர்களுக்கு உணவுத் தானியத்தையும் - அது அவர்களுக்கு எவ்வளவு தேவைப்பட்hலும் - நாங்கள் கொடுக்க முடியும். அவர் மிகவும் கடுமையாகத் தாக்கினார்; உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார். அவரைப் போன்ற நண்பர்கள் - உலகளாவிய கண்ணோட்டம் பற்றியும், பன்னாட்டுக் கண்ணோட்டம் குறித்தும் பேசுபவர்கள். ஆனால், எனது நண்பர் ஏ.சி. ஜோஸ் அவர்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்தான். ஆயினும், மேற்கு நோக்கிப் பாயும் நீரைப் பயன்படுத்த வேண்டும் என்ற எங்கள் கருத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.

ஐயா! இந்த மசோதாவை நான் கொண்டு வந்ததற்கான நோக்கம் மிகத் தெளிவானது. மாநிலங்களிடையே ஓடும் ஆறுகள் அனைத்தின் மீதும் மத்திய அரசு தனி உரிமையும், கட்டுப்பாடும் கொண்டிருக்க வேண்டும். நீர் ஒதுக்கீட்டுக்காக வகுக்கப்படும் ஒரு திட்டத்தின்படி, மத்திய அரசு ஆறுகளின் நீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான், தொடர்புடைய மாநிலங்களின் நலன்கள் பாதிக்கப்படாமல், பல்வேறு மாநிலங்களிடையே நதிநீரைப் பகிர்ந்தளிக்க இயலும். அத்துடன், கிடைக்கக்கூடிய நீர் ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும் முடியும்.

மசோதாவின் நோக்கம்!

ஐயா! ஏற்கெனவே இந்த விவாதத்தில் நான் நீண்ட உரையாற்றினேன். இந்த மசோதாவை என் நண்பர் திரு. மணிசங்கர் ஐயர் பாராட்டிப் பேசினார். அப்போது, இந்த மசோதாவின் நோக்கம், காவிரி நதிநீர்ப் பூசலை எல்லோருக்கும் எடுத்துரைப்பதுதான் என்று அவர் கூறினார். அதுவும் ஒரு காரணம்தான்; ஆனால் அது மட்டுமே காரணமில்லை. அண்மையில் இமாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட அவல நிலையைப் பார்த்தோம். அங்கு விலைமதிக்க முடியாத உயிர்களை வெள்ளம் விழுங்கியிருக்கிறது.

இந்தியாவில் ஓரிடத்தில் வெள்ளப் பெருக்கினால் பயிர்கள் மட்டுமின்றி கிராமங்களும் அழிக்கப்படும் இயற்கையின் தண்டனையைக் காண்கிறோம். அதே சமயம், நாட்டின் சில பகுதிகளில், கடும் வறட்சியினால், மக்கள் அவதிப்படுவதைப் பார்க்கிறோம்.

“எங்கெங்கு காணினும் வெள்ளமடா!

குடிக்கத்தான் சொட்டுநீர் இல்லையடா!”

என்று ஒரு கவிஞர் கூறியது இங்கு நினைவுக்கு வருகிறது!

இன்று அமைச்சர் ஒப்புக் கொள்ளாமலிருக்கலாம். ஆனால், மாநிலங்களிடையே ஓடும் ஆறுகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்க வேண்டிய நாள் ஒன்று வந்தே தீரும். நம் நாட்டின் அந்த எதிர்காலக் காட்சியை என் கண்கள் காண்கின்றன. இந்தியா உலகில் ஒரு வல்லரசாக உருவாகும். உலகிலுள்ள எந்த நாட்டுடனும் ஒப்பிடமுடியாத அளவுக்கு இந்தியாவில் இணையற்ற வள ஆதாரங்கள் உண்டு. இந்த வள ஆதாரங்களுக்கு இணையான வளங்கள் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லை. அபரிமிதமாக இருக்கின்ற அந்த வளங்கள் நாட்டின் நலனுக்காக - இந்நாட்டின் 100 கோடி மக்களின் நல்வாழ்வுக்காக - பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காக, என் மாண்புமிகு நண்பர் கூறியதுபோல், மாநிலங்களிடையே பாயும் ஆறுகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்குவதற்கான சட்டம் ஒன்றை அரசாங்கம் தானே கொண்டு வரும் நாள் ஒன்று வந்தே தீரும்.

பாரதியார் கனவு!

ஐயா! நாட்டின் ஒருமைப்பாடு பற்றிப் பேசுகிறோம். அப்போது நாம் வெள்ளையரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தோம். இந்நாட்டின் தென்கோடியிலிருந்து நான் வருகிறேன். அங்கிருந்துதான் தலைவர் அவர்களே நீங்களும் வருகிறீர்கள். அங்குதான் கவிப்புயல் சுப்பிரமணிய பாரதியாரும் தோன்றினார். அவருடைய கவிதைகள் எரிமலைக் குழம்பாக வெடித்து வந்தன.

“கங்கை நதிப்புறத்துக்

கோதுமைப் பண்டம்

காவிரியின் வெற்றிலைக்கு

மாறு கொள்வோம்”

என்று பாரதியார் கனவு கண்டார். எனவே, கங்கைச் சமவெளியில் விளையும் கோதுமைக்கு, காவிரி வடிநில மக்கள் வெற்றிலையை பண்டமாற்றாகக் கொடுக்க முடியும்!

அதுதான் அவர் கண்ட கனவு! எனவே, இந்த நோக்கத்துக்காக, 1960களில் அமைச்சராக இருந்தவரும், தலைசிறந்த பொறியியல் வல்லுநராக விளங்கியவருமான டாக்டர் கே.எல். ராவ், கங்கையைக் காவிரியுடன் இணைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுத்தார். இத்திட்டத்துக்கு அபரிமிதமாகச் செலவாகும் என்றும், விந்தியத்துக்கு அப்பால் நீரை இறைப்பதற்கு மிகுந்த மின்விசை செலவாகும் என்பதால், இது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் காரணங்கூறி இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பிறகு அரசாங்கம், நதிநீருக்கான ஒரு தேசியக் கண்ணோட்டத்தை வகுத்தது. இது இருபகுதிகளைக் கொண்டிருந்தது. ஒன்று இமாலய நதிநீர்த் திட்டம்; இன்னொன்று தீபகற்ப நதிநீர்த் திட்டம். தீபகற்ப நதிநீர்த் திட்டத்தின்படி, நர்மதா, மகாநதி ஆறுகளின் நீரைத் தாமிரபரணி வரைக் கொண்டு செல்லலாம்.

எங்கள் உரிமையைக் கேட்கிறோம்

காவிரி நதிநீர்ப் பூசலைப் பொறுத்தவரையில், நாங்கள் எந்த மாநிலத்திடமிருந்தும் எந்தச் சலுகையையும் பிரச்சினையாகக் கேட்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக எங்களுக்கு இருந்துவந்த - நாங்கள் அனுபவித்து வந்த - உரிமையைக் கேட்கிறோம்.

நதிநீர்ப் பூசல்கள் குறித்து உலகெங்கும் நான்கு கோட்பாடுகள் நிலவுகின்றன. சூடானிலும் எகிப்திலும் நைல் நதிநீர்ப் பூசல்; ஐரோப்பாவில் ரைன் நதிநீர் பற்றிய பூசல்; மெக்சிக்கோவில் நதிகள் பற்றிய பூசல்; கானடாவில் நதிநீர்ப் பூசல். இந்தப் பூசல்கள் தொடர்பாக நான்கு கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் அந்தப் பூசல்கள் சுமூகமாகத் தீர்க்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு கோட்பாடுகளில் ஒன்று ஹார்மோன் கோட்பாடு. இதனை நாம் ஏற்க முடியாது. இரண்டாவது, இயற்கை நீரோட்டக் கோட்பாடு. இதனையும் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. மூன்றாவது, முறையான நீர் ஒதுக்கீட்டுக் கோட்பாடு. கடைசியாக சமுதாய நலக் கோட்பாடு. ஹெல்சிங்கி உடன்பாட்டின்படி, இந்த நான்காவது கோட்பாடுதான் உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

எனவே, மாநிலங்களிடையே ஓடும் நதிகள் பற்றிய பிரச்சினைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வு காண்பதற்கு, நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த நலன் கருதி, அந்த ஆறுகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படவேண்டும். இதுதான் இந்த மசோதாவின் நோக்கம்.

காவிரி நதிநீர்ப் பூசலைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டுக்கு 100 டி.எம்.சி. நீர் வந்திருக்க வேண்டும் என்று என் மாண்புமிகு நண்பர் சரியாகவே கூறினார். இடைக் காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. நீர் கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ஆளுநரால் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கும் அளவுக்குக் கர்நாடக மாநிலம் சென்றது. அந்தச் சர்ச்சையில் இறங்க நான் விரும்பவில்லை. ஆனால், இந்தப் பிரச்சினை உச்சநீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த அவசரச் சட்டங்கள் அரசமைப்பின் அடிப்படைக்கே முரணானது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது.

ஆகவே, வகுக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி, வாரவாரியாகவும், மாத வாரியாகவும், 205 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட நதியோர மாநிலம் கடமைப்பட்டதாகும். இதுதான் தத்துவம். புயலின்போது மாரி அன்னை வளமாகப் பொழியும்போது அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் நீர் திறந்துவிட வேண்டியுள்ளது. இதைத்தான் அவர் விளக்கினார்.

எனவே, இந்த மசோதாவைக் கொண்டு வந்ததற்கான நோக்கம் தெள்ளத் தெளிவானது. இதனைப் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரித்தார்கள்.

நமது நண்பர் திரு. சிம்ரஞ்சித் சிங்மான், பஞ்சாபுக்கும் அரியானாவுக்குமிடையிலான நதிநீர்ப் பூசல் குறித்து உண்மையான கவலை கொண்டிருக்கிறார்.

மாண்புமிகு உறுப்பினர்கள் தங்கள் அரிய ஆலோசனைகளைக் கூறியதற்காக அவர்களுக்கு எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நோக்கம் நிறைவேறும் நாள் வரும்

தலைவர் : உங்கள் மசோதாவை ஆதரிக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள்!
(தொடரும்)

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -4

கேரளத்தில் வீணாகும் நீர்


இந்த விவதாத்தில் கங்கை, காவிரி, மகாநதி அனைத்து ஆறுகள் பற்றிக் குறிப்பிட்டேன். எங்கள் சகோதர மாநிலமாகிய கேரளத்திலிருந்து அரபிக் கடலில் விழுந்து வீணாகி வரும் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் பற்றியும் நாங்கள் பெரிதும் கவலை கொண்டிருக்கிறோம். இந்த ஆறுகளின் நீரைத் தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் பயன்படுத்தலாம். இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரள மாநிலமும் வளம்பெறும். நீருக்குப் பதிலாக அவர்கள் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நாங்கள் அரிசியும் கொடுக்க முடியும். நீதிபதி கிருக்ஷ்ண அய்யர் கேரள அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டத்தை வலியுறுத்தினார். பிரிட்டிஷார் காலத்திலேயே இத்திட்டம் பற்றிப் பேசப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அங்கே தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.

எனது நண்பர்களில் சிலர் ஒவ்வொரு பிரச்சினையிலும் பன்னாட்டுக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள். எல்லாச் சிக்கல்களிலும் அவர்கள் உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் அவர்கள் குறுகிய மனப்போக்குடையவர்களாக, மாநில வெறியுடையவடர்களாக மாறி விடுகிறார்கள். நான் திரு. இராதாகிருக்ஷ்ணன் போன்ற நண்பர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவர் உயர்ந்த கண்ணோட்டம் கொண்டவர்.

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரையில், இதன் உயரத்தை உயர்த்த வேண்டுமென்று மத்திய நீர்வள ஆணையம் ஏற்கெனவே கூறியிருக்கிறது. இதனால் பல்லாயிரம் ஏக்கர் பரப்புக்குப் பாசன வசதி கிடைக்கும். ஆனால், அவர்கள் மாற்ற முடியாத ஒரு நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இருவருக்குமே பயனில்லை. தமிழ்நாட்டின் வறட்சிக்குள்ளாகும் தென் மாவட்டங்களுக்குக் கேரளத்திலிருந்து நீர்கொண்டு வருவதற்கு உதவும் ஒரு திட்டம் பம்பா - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டமாகும். கேரளம் இசைவளிக்குமானால் இத்திட்டம் நிறைவேறும்.

இந்தத் திட்டத்திற்குத் தேசிய நீர்வள மேம்பாட்டு முகவாண்மை தயாரித்துள்ள இயன்மை அறிக்கை இறுதியாக்கம் செய்யப்பட்டு, தொடர்புடைய இரு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு நாள் இந்த விவாதம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம். எனவேதான், இந்த உண்மைகள் அனைத்தையும் இந்த அவையின் முன்பு வைக்கிறேன். இதனை, மாண்புமிகு உறுப்பினர்களின் பரிசீலனைக்கும், பரிவான ஆய்வுக்கும் முன் வைக்கிறேன். இத்திட்டம், தமிழ்நாடு மாநிலத்திற்கு மட்டுமின்றி, கேரளத்திற்கும் ஏன் இந்தியா முழுவதற்கும் கூட உதவும். அப்படிப்பட்ட திட்டத்திற்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

தென் தமிழகத்துக்குப் பயன்படும் திட்டம்

கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் 22 டி.எம்.சி. நீரைத் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வைப்பாறு வடிநிலத்திற்குத் திருப்பிவிட இந்தத் திட்டம் வழி செய்கிறது. இவ்வாறு திருப்பி விடுவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும். இத்திட்டத்திற்கு ரூ.1,400 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளில் இதனை நிறைவேற்றலாம்.

நீர்ப்பாசனம் மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருப்பதால், இத்திட்டத்தின் தலைவிதி கேரள அரசின் முடிவைப் பொறுத்திருக்கிறது என்று தேசிய நீர்வள மேம்பாட்டு முகவாண்மை அதிகாரிகள் கூறுகிறார்கள். எனவே, இந்த அதிகாரம் ஒருங்கியல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்றும், ஆறுகளை நாட்டுடைமையாக்க வேண்டுமென்றும் கூறினேன். இந்தத் திட்டத்தின்படி மூன்று அணைகள் கட்டப்படும். ஒன்று பம்பா கல்லாறு அல்லது புன்னமேடு ஆற்றின் குறுக்கேயும், மூன்றாவது அச்சன்கோவில் ஆற்றின் குறுக்கேயும் கட்டப்படும். இந்த அணைகளின் கொள்ளளவு முறையே 7.34 டி.எம்.சி., 17.54 டி.எம்.சி., 1.08 டி.எம்.சி. என்ற அளவில் இருக்கும்.

முதல் இரு அணைகளும் ஒரு எட்டு கிலோ மீட்டர் நீள குடைவுவழி மூலம் இணைக்கப்படும். இதன் மூலம் புன்னமேட்டிலிருந்து அச்சன்கோவிலுக்கு நீரைக் கொண்டு சென்று, அங்கிருந்து அச்சன்கோவில் கல்லாறு அணைக்கு நீர் இறைத்து விடப்படும். அச்சன்கோவில் - கல்லாறு அணையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாகச் செல்லும் 9 கி.மீ. நீளக் குடைவுவழி மூலம் நீர் திருப்பி விடப்படும். செங்கோட்டை வட்டத்திலுள்ள மேக்கரை கிராமத்தில் குடைவுவழியில் வெளியேற்று முனை அமைந்திருக்கும். அந்த முனையிலிருந்து 50 கி.மீ. தூரம் நீர் ஓடி, வைப்பாற்றின் துணையாறுகளில் ஒன்றாகிய அழகரோடையை அடையும்.

அச்சன்கோவில் - கல்லாறு அணையின் கீழ் நீரோட்டத்தில் 50 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். மொத்தத்தில் 8.37 மெகாவாட் திறனுடைய ஆறு சிறிய புனல் மின் நிலையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் நான்கு நிலையங்கள் தமிழ்நாட்டிலும், எஞ்சியவை கேரளத்திலும் அமைக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 100 கோடி அலகு மின்விசை உற்பத்தி செய்யப்படும். ஆண்டுதோறும் 17 இலட்சம் டன் உணவுப் பொருள் உற்பத்தியாகும். இதனால் 400 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

முதலில் பம்பாவையும், அச்சன் கோவிலையும் வைகையுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகச் செலவு காரணமாக இந்த இணைப்பு வைப்பாற்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், பின் தங்கிய பகுதிகளில்கூட மேம்பாட்டுத் திட்டங்கள் 9 சதவீதம் பலனை அளிக்க வேண்டுமென்று திட்டக்குழு வரையறுத்துள்ளது.

பம்பா - அச்சன்கோவில் வடிநிலங்களில் பாயும் மொத்த உபரி நீரில் 20 சதவீதம் வரை மட்டுமே திருப்பிவிடக் கோரப்படுவதாக தேசிய நீர்வள மேம்பாட்டு முகவாண்மை அதிகாரிகள் கூறுகிறார்கள். அதாவது, உபரி நீரில் 20 சதவீத நீரை மட்டுமே திருப்பிவிட வேண்டுகிறோம். மேலும், பருவமல்லாத காலத்தில் ஆறுகளிலிருந்து சுமார் 5 டி.எம்.சி. நீரை முறைப்படுத்தித் திறந்து விடுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆறுகளில் நீரோட்ட அளவு அதிகமாகும். உப்புத் தன்மை ஊடுருவதைத் தடுக்கவும் இது உதவும்.

பம்பா - அச்சன்கோவில் நீரை மின் உற்பத்திக்குப் பயன்படுத்துவதற்கான கேரள அரசின் “இரட்டைக் கல்லாறு திட்டத்தின்” முக்கிய நோக்கத்தை இந்தத் திட்டம் நிறைவேற்றும். கேரளத்தின் பாசனத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் இவ்வாறு நீரைத் திருப்பி விடுவது உதவியாக இருக்கும்.

ஆறுகளை நாட்டுடைமையாக்குக

இத்திட்டங்கள் அனைத்தையும் என்றாவது ஒருநாள் நிறைவேற்றியாக வேண்டும். அந்த நோக்கத்திற்காக இந்த மசோதாவை நான் முன்மொழிந்துள்ளேன். இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஆறுகளை நாட்டுடைமையாக்கி விட்டால், பல்வேறு மாநிலங்களிடையே, தொடர்புடைய மாநிலங்களின் நலன்கள் பாதிக்கப்படாமல், நீரைப் பகிர்ந்தளிப்பதற்கு உதவும் என்பதுடன், கிடைக்கும் நீர்வளங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும் இது உதவும்.

இந்த மசோதாவுக்கு இந்த அவையின் மாண்புமிகு நண்பர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இத்துணை நீண்ட நேரம் பேசுவதற்கு எனக்கு அனுமதி வழங்கியதற்காக அவைத் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -3

நதிநீர்ப் பங்கீடு கோட்பாடுகள்


நதிநீர்த் தகராறுகள் தொடர்பான நெடிய வரலாற்றில் நதிநீர்ப் பங்கீடு குறித்துப் பல்வேறு கொள்கைகளும், கோட்பாடுகளும் வகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பூசல்களுக்குத் தீர்வு காண்பதற்கான நெறிமுறைகளை வகுப்பதில் பல அமைப்புகள் பங்கு பெற்றிருக்கின்றன.

இவற்றில் முதலிடம் பெறுவது ‘முழு ஆட்சிப் பரப்பு இறையாண்மைக் கோட்பாடு ( Absolute Territorial Sovereignty) ஆகும். இதனை ‘ஹார்மோன் கோட்பாடு ( Harmon Theory )’என்றும் கூறுவர். அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் ரியோகிராண்ட் ஆறு தொடர்பாக எழுந்த பூசலில் அரசுத் தலைமை வழக்கறிஞர் ஹார்மோன் 1895இல் தெரிவித்த கருத்தினையொட்டி இது இவ்வாறு அழைக்கப்பட்டது.

இந்தக் கோட்பாட்டின்படி ஒரு கரையோர அரசு, மற்ற சக கரையோர அரசுகளின் மீதான பாதிப்புகளைப் பொருட்படுத்தாமல், தனது நீரைத் தன் விருப்பப்படிப் பயன்படுத்தலாம். மற்ற நாடுகளிடமிருந்து நீர் தொடர்ந்து பாய வேண்டும் என்று கோருவதற்குக் கரையோர நாடு எதற்கும் உரிமை இல்லை. சில அரசுகள் இந்தக் கோட்பாட்டை ஆதாரமாகக் காட்டி, இறையாண்மையானது ஒரேயொரு அரசிடம் மட்டுமே அமைந்திருக்கிறது என்று வாதிடலாம். முழு ஆட்சிப் பரப்பு இறையாண்மைக் கோட்பாட்டின் அடிப்படையில் இது அடாவடியானது என்று நதிநீர்ப் பிரச்சினையில் தலைசிறந்த வல்லுநரும், உலகப் புகழ்பெற்ற பன்னாட்டுச் சட்ட அறிஞருமான எச்.ஏ.ஸ்மித் கூறியுள்ளார்.

போர் அச்சுறுத்தல் நீங்கலாக எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாமல், தன் அண்டை நாடுகளுக்கு ஈடு செய்ய முடியாத தீங்கினை விளைவிப்பதற்கு ஒவ்வொரு அரசையும் இது அனுமதிக்கிறது. எனவே, ஹார்மோன் கோட்பாட்டை நாம் ஏற்க முடியாது.

இதே தத்துவதத்தின் அடிப்படையில்தான் இந்தியாவில் நர்மதா, கிருக்ஷ்ணா, ரவி, பியாஸ் ஆகிய ஆறுகள் தொடர்பாக அடுத்தடுத்து அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள், ஹார்மோன் கோட்பாடு அடிப்படையிலான ஆட்சிப் பரப்பு இறையாண்மைக் கோட்பாட்டைத் திட்டவட்டமாக ஏற்க மறுத்துவிட்டன. இதுதான் மிக முக்கியம். இந்தியாவில் ஹார்மோன் கோட்பாட்டை நாம் ஏற்கவில்லை. அதனை அடியோடு ஒதுக்கித் தள்ளிவிட்டோம். அதை ஏற்றுக் கொண்டால், ஒரு குறிப்பிட்ட மாநிலம், ஒரு நதி தனது ஆட்சிப் பரப்புக்குள் ஓடுவதால், அந்த ஆற்றின் நீர் மீது மற்ற மாநிலங்கள் எவ்விதத் தனிப்பட்ட உரிமையும் கொண்டிருக்க அனுமதிக்க முடியாது எனக் கூற இடம் ஏற்படும். அதனால்தான் ஹார்மோன் கோட்பாட்டை இந்தியா ஏற்கவில்லை.

இரண்டாவது கோட்பாடு ‘இயற்கை நீரோட்டக் கோட்பாடு( Theory of Natural Water flow )’ ஆகும். இது முந்தைய கோட்பாட்டுக்கு எதிரிடையானது. இதனை “ஆட்சிப் பரப்பு ஒருமைப்பாட்டுக் கோட்பாடு ( Territorial Integrity Theory )” என்றும் கூறுவர்.

இக்கோட்பாட்டின்படி, கீழ்நிலைக் கரையோர அரசு ஒவ்வொன்றும், தலைநிலைக் கரையோர அரசின் தலையீடு எதுவுமின்றி, ஆற்றின் இயற்கையான நீரோட்டத்திற்கு உரிமையுடையது ஆகும். ஏனென்றால், இத்தகைய தலையீடு, ஆற்றின் ஓர் அங்கமாக அமைந்துள்ள கீழ்நிலைக் கரையோர அரசின் ஆட்சிப் பரப்பு ஒருமைப்பாட்டினை மீறுவதாகும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கீழ்நிலைக் கரையோர நாடான எகிப்து, நைல் நதி தொடர்பாகச் சூடானுக்கு எதிராக இந்தக் கோட்பாட்டை முன் வைத்தது. இந்த வாதத்தை நைல் நதி நீர் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்ட போதிலும், சூடான் சார்பாக வாதாடிய பிரிட்டன், தலைநிலைக் கரையோர நாடு ஆற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து ரத்து அதிகார உரிமையை 1929இல் எகிப்துக்கு வழங்கியது. இது திட்டவட்டமாக ஒரு அரசியல் தீர்வாகும்.

முதல் உரிமை

மூன்றாவது கோட்பாடு, “முன் ஒதுக்கீட்டுக் கோட்பாடு ( Doctrine of Prior Appropriation )” என்பதாகும். இது, தலைநிலைக் கரையோர நாடுகளுக்கும், கீழ்நிலைக் கரையோர நாடுகளுக்கும் நடுநிலையான ஒரு கோட்பாடாகும். இக்கோட்பாட்டின்படி ஆற்று நீரைப் பயனளிக்கும் பயன்பாட்டிற்கு அளிக்கின்ற முதல் பயன்பாட்டாளர், அத்தகைய பயன்பாட்டின் அளவுக்கு ஒரு முதல் உரிமையை ஈட்டுகிறார். “காலத்தால் முதல், உரிமையிலும் முதல் ( Prior in Time - Prior in Right )” என்பது இந்தக் கோட்பாட்டின் தாரக மந்திரமாக அமைந்தது.

இந்தக் கோட்பாடு, பன்னாட்டுச் சட்டத்தின் பகுதியாக அமையவில்லை. இந்தியாவில் தீர்ப்பாயங்கள் முன்புள்ள தீர்ப்புச் சட்டங்களிலும், பன்னாட்டுச் சட்ட நூல்களிலும் நீர் ஒதுக்கீட்டுக்கு “முதல் ஒதுக்கீடு” ஒரு மீதூர்ந்த நெறிமுறையாகக் கருதப்படவில்லை. எனினும் மற்ற தொடர்புடைய அம்சங்களில் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சமுதாய நலக் கோட்பாடு

நான்காவது கோட்பாடு “சமுதாய நலக் கோட்பாடு ( Community of Interest Theory )” ஆகும். இதன்படி, ஆற்று வடிகால் பகுதி முழுவதும் நாடுகளின் எல்லைகள் எவ்வாறிருப்பினும், ஒரே பொருளாதாரப் பிரிவாகக் கருதப்படுகிறது. ஆற்றுநீர், கூட்டுக் கரையோர அரசுகளின் சமுதாயத்திற்குச் சொந்தமாக்கப்படுகிறது. அந்த நீர் ஒருங்கிணைந்த முறையில் பெருமளவு நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். தர்க்க முறையில் இது ஒரு கவர்ச்சியான கோட்பாடு. ஆனால், நடைமுறையில் நாட்டு எல்லைக் கோடுகள் இருக்கும் வரையில், ஆறுகளைத் தனியொரு பொருளாதாரப் பிரிவாகக் கருதுவதன் மூலம் நாடுகளிடையே எழும் பூசல்களைத் தவிர்த்துவிட முடியாது என்ற உண்மையை இது கவனத்தில் கொள்ளவில்லை.

எனினும், அடிப்படைப் பூசல்களுக்குத் தீர்வு கண்டவுடன், வடிநில நாடுகள் தங்கள் பொதுச் சொத்துக்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்காக ஒத்துழைக்கலாம் - ஒத்துழைக்க இயலும்.

இந்தியாவுக்கு ஏற்ற கோட்பாடு

இந்தக் கோட்பாடு, மாநிலங்களிடையிலான நீர்ப் பூசல்களைத் தடுப்பதற்கு அல்லது தீர்ப்பதற்கு ஆறுகளை நாட்டுடைமையாக்க வேண்டுமென்று இந்தியாவில் அடிக்கடித் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்கு அரண் அமைத்துக் கொடுக்கிறது. எனவே, சமுதாய நலக் கோட்பாட்டின்படியுங்கூட ஆறுகள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும். இதுதான் முக்கியமான அம்சமாகும். வடிநிலப் பகுதி முழுவதையும் தனியொரு பிரிவாக எடுத்துக் கொள்ளும்போது, அனைத்து ஆறுகளிலும், அனைத்து முனைகளிலும் நீர் கிடைக்கும்படி செய்வதற்காக நாடு முழுவதையும் தனியொரு பிரிவாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

வெள்ளப் பெருக்குகள் ஏற்படும் சில பகுதிகளில் மக்கள் அடித்துச் செல்லப்படுகிறார்கள் - கொல்லப்படுகிறார்கள். அதேசமயம், வேறு சில பகுதிகளில் வறட்சி காரணமாக மக்கள் சொல்லொணா அவதிக்குள்ளாகிறார்கள். கால்நடைகள் செத்து மடிகின்றன. இந்நாட்டின் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கினால் பேரழிவு ஏற்படுகிறது. பிற பகுதிகளில் கடும் வறட்சி மக்களைத் தாக்குகிறது. ஆகவே, ஆறுகள் நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கருத்தினை சமுதாய நலக் கோட்பாடு வலியுறுத்திக் கூறுகிறது. இதனை எச்.எம்.சீர்வை சுட்டிக் காட்டுகிறார்.

இறுதியாக, மாநிலங்களிடையிலான ஆறுகளின் நீரை, நியாயமாகப் பங்கீடு செய்தல் நியாயமாகப் பயன்படுத்துதல் தொடர்பான கோட்பாடுகளும் உள்ளன.

ஹெல்சிங்கி விதிகள்

இவற்றில் பெரிதும் குறிப்பிடப்படுவது “ஹெல்சிங்கி விதிகள்( Helsinki Rules )” ஆகும். மாநிலங்களுக்கிடையிலான ஆறுகள் குறித்த பூசல்களைத் தீர்ப்பது பற்றிப் பேசுபவர் யாராக இருந்தாலும், அவர்கள் “ஹெல்சிங்கி விதிகள்” பற்றிக் குறிப்பிடுகிறார்கள். இந்த முயற்சிகளில் மிகவும் முழுமையானதும், நன்கறியப்பட்டுள்ளதும் ஹெல்சிங்கி விதிகளில் அடங்கியுள்து. ஃபின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கி நகரில் 1966இல் நடந்த பன்னாட்டுச் சட்டச் சங்கத்தின் ( International Law Association ) 52ஆவது மாநாட்டில், பல ஆண்டுகள் விவாதத்திற்குப் பிறகு, இந்த விதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் பல ஆண்டுகள் கூடி ஆலோசித்து, விரிவாக விவாதங்கள் நடத்தி, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தனர். அதுதான் “ஹெல்சிங்கி விதிகள்” என்ற கோட்பாடாக உருப்பெற்றது.

ஹெல்சிங்கி விதிகளுக்குப் பன்னாட்டுச் சட்டம் என்ற தகுதி கிடைக்கவில்லை. என்றாலும், இவை பன்னாட்டுச் சட்டத்திற்கான ஓர் ஆதாரம் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. ஏனென்றால், பன்னாட்டு நதிகள் சட்டத்தில் ஈடிணையற்ற வல்லுநர்கள் எனக் கருதப்படும் வித்தகர்களின் பத்தாண்டுகளுக்கும் அதிகமான அரும்பெரும் முயற்சியினால் இவை உருவானவையாகும். புகழ்பெற்ற வல்லுநர்களின் குழு ஒன்று பல ஆண்டுகள் கூடி விவாதித்தது. இறுதியில் பன்னாட்டுச் சட்டத் துறையில் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்தத் துறையில் உயர்ந்த தகுதி வாய்ந்த, உலகப் புகழ்பெற்ற நீதி இயலறிஞர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரின் கருத்துகளை உள்ளடக்கிய ஒரு வடிவமாக இது அமைந்தது.

ஹெல்சிங்கி விதிகள் 37 பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இவற்றில், 4, 5 ஆகிய பிரிவுகள், பன்னாட்டு வடி நில நீரை நியாயமாகப் பயன்படுத்துதல் என்ற தலைப்பைக் கொண்ட இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன. ஹெல்சிங்கி விதிகளின் அணுகுமுறையானது, “பூசல்களுக்கான அமைதித்தீர்வு ( Pacific Settlement of Disputes )” பற்றிய ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் 33ஆம் பிரிவினைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவிலுள்ள, 18 பெரிய ஆற்று வடிநிலப் பகுதிகளில் 16 பகுதிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை உள்ளடக்கியதாக உள்ளன. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள இரு சிறிய வடிநிலங்கள் மட்டுமே விதிவிலக்கு.

தரப்பினர்களுக்கிடையில் தீர்க்கப்படாமல், மாநிலங்களிடை நீர்ப்பூசல்கள் சட்டத்தின் கீழ் தீர்ப்பாயங்களின் தீர்ப்புக்கு அனுப்பப்பட்ட பூசல்கள் நர்மதா, கிருக்ஷ்ணா, கோதாவரி, ரவி, பியாஸ், காவிரி ஆகியவை தொடர்பானவை. அரசமைப்பு வகைமுறைகள் பல உள்ளன. மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்) வரும்வரையில், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் நீங்கலாக, நீர்ப்பாசனப் பணிமானங்கள் அனைத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இவை இங்கிலாந்திலுள்ள இந்திய அமைச்சரின் ஒப்பளிப்புக்கு உட்பட்டவையாக இருந்தன.

1919ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி நீர்ப்பாசனம் மாகாண அரசுக்குட்பட்டதாக, ஆனால் ஒதுக்கப்பட்ட பொருளாக ஆக்கப்பட்டது. இதன்படி, ஒரு மாகாணத்திற்கும் இன்னொரு ஆட்சிப் பகுதிக்கும் இடையிலான தொடர்புகளைப் பாதிக்கும் மாகாணங்களிடையேயான பொருள்கள் மத்தியச் சட்டமன்றத்தின் சட்டமியற்றுதற்கு உட்பட்டவையாகும். 1919இல் இந்த நிலை இருந்தது. மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளின் பள்ளத்தாக்குகளின் நீரைப் பயன்படுத்துதல் தொடர்பான பூசல்களை நடுவர் மன்றத் தீர்ப்புக்கு அனுப்ப நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் வகை செய்தது. இரண்டாவது சட்டம், அரசமைப்பின் 262ஆம் பிரிவின்படி இயற்றப்பட்டது. இதுதான் முன்னர் குறிப்பிடப்பட்ட 1956ஆம் ஆண்டு மாநிலங்களிடை நீர்ப்பூசல்கள் சட்டமாகும்.

துணை அவைத் தலைவர்:திரு. வைகோ நீங்கள் ஏற்கனவே 46 நிமிடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் மசோதா. இதுபற்றிப் பேச ஏராளமான உறுப்பினர்கள் விரும்புகிறார்கள்.

வைகோ: இன்னும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வேன். அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன்.
(தொடரும்)

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -2

தீபகற்ப ஆறுகள் மேம்பாடு


இத்திட்டத்தின் பூர்வாங்க அறிக்கைகளின்படி, தீபகற்பப் பகுதி ஆற்று மேம்பாட்டுத் திட்டத்தினால், ஆந்திரப் பிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் 50 இலட்சம் ஹெக்டேர் பரப்பு கூடுதல் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும். இத்திட்டத்தை நிறைவேற்ற, 1994-95 விலை நிலவரப்படி ரூ 30,000 கோடி செலவாகும். இத்திட்டத்தை நிறைவேற்றப் பல பத்தாண்டுகள் பிடிக்கும் என்பதால், இந்தச் செலவுத் தொகையைப் பார்த்து மத்திய - மாநில அரசுகள் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் இருந்துவிடக் கூடாது.

காவிரி வடிநிலப் பகுதி உழவர் பெருமக்கள் நெருக்கடி நேரத்தில் வானத்தையும், கர்நாடக மாநிலத்தையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நீங்க வேண்டுமானால், ஆற்று வடிநிலப் பகுதிகளிடையே நீர் மாற்றத்திற்கான திட்டத்தைத் தொடர்புடைய ஒவ்வொருவரும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இதில் தொடக்க முயற்சி மத்திய அரசிடமிருந்து வரவேண்டும். ஆற்று வடிநிலங்களிடையே ஆற்று நீர் மாற்றத்திற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் முதலிடம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதனை ஒரு கடமைப் பொறுப்பாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். ஆயினும், இதுபற்றிய அவர்களின் தகவல்கள் இன்னும் நாளது தேதிவரை புதுப்பிக்கப்படவில்லை; அவர்கள் இன்னும் கங்கை - காவிரி இணைப்புப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு திருத்தப்பட வேண்டும்.

ஒருங்கியல் பட்டியலில் நீர்

இறுதியாக, இன்று நீர் மாநிலப் பட்டியலில் ( State List ) இடம்பெற்ற ஒரு பொருளாக இருந்து வருகிறது. இதனை மாற்றி, நீரை ஒருங்கியல் பட்டியலில் ( Concurrent List ) சேர்ப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் ஒருமித்த கருத்தினை எட்ட வேண்டும். இரு நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எனது நண்பர்கள், இத்தகைய கருத்துகளையும் கண்ணோட்டத்தையும் என்னிடமிருந்து தாங்கள் எதிர்பார்க்கவில்லையென்று வியப்புத் தெரிவித்தார்கள். சிலர் இதற்காக என்னைப் பாராட்டினார்கள்.

நான் மாநில சுயாட்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவன். நான் வலியுறுத்த விரும்புவதெல்லாம் இதுதான். நீரை மாநிலப் பட்டியலிலிருந்து மாற்றி அதனை ஒருங்கியல் பட்டியலில் சேர்க்கவேண்டும். அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருப்பதுபோல் எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் ( Residual Powers )மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் உண்மையான கூட்டாட்சி அமைய வேண்டும்.

ஆனால், நீரைப் பொறுத்தவரையில் இது மாநிலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, ஒருங்கியல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். அது மிகவும் முக்கியமானதாகும். சாதாரணமாக எந்த ஒரு பொருளையும் மாநிலங்களின் அதிகார வரம்புக்குட்பட்ட பொருள்களின் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டு ஒருங்கியல் பட்டியலில் சேர்ப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் நீர் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அதனை ஒருங்கியல் பட்டியலில் சேர்த்தாக வேண்டும். புதிய நூற்றாண்டில் நிறைவேற்றப்படவிருக்கும் திட்டங்களில் நீர்வளத் திட்டங்களுக்குத் தலையாய முன்னுரிமையளிக்க வேண்டும்.

காவிரி வடிநிலம்

தென்னிந்தியாவில், கோதாவரி, கிருக்ஷ்ணா, மகாநதி ஆகிய நதிகளுக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய நதியாக விளங்குவது காவிரி. இது மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தோன்றி, 802 கி.மீ. தூரம் ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பிரதான ஆறு கர்நாடகத்தில் 381 கி.மீ. தூரமும் தமிழ்நாட்டில் 357 கி.மீ தொலைவும் ஓடுகிறது. காவிரி நதிநீர் தொடர்பான 1924ஆம் ஆண்டு உடன்படிக்கையில் சில குறிப்பிட்ட பிரிவுகளில் வகுத்துரைக்கப்பட்டுள்ள வரம்புகளும், ஏற்பாடுகளும் அது நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து 50 ஆண்டுகள் முடிவடைந்ததும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்த மறுபரிசீலனை எதிர்கொள்ளும் அனுபவத்தின் அடிப்படையிலும், அந்தந்த அரசுகளின் ஆட்சிப் பரப்புகளுக்குள் பாசன வசதியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தறிவதன் அடிப்படையிலும், ஒருவருக்கொருவர் ஒப்புக் கொள்ளக்கூடிய மாற்றங்கள், சேர்ப்புகளின் அடிப்படையில் நடைபெற வேண்டும்.

நதிநீர்ப் பூசல்கள்

பல்வேறு நாடுகளிடையே ஓடும் ஆறுகள் தொடர்பாக பன்னாட்டு ஆற்று நீர்த் தகராறுகள் எழுந்துள்ளன. இந்த ஆறுகள் பற்றிய பூசல்களைத் தீர்ப்பதற்கு எத்தனையோ கோட்பாடுகளும், கொள்கை அணுகுமுறைகளும் உண்டு. இக்காலத்தில், ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் பல நாடுகளுக்கிடையே இத்தகைய பூசல்கள் எழுந்துள்ளன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா போன்ற பெரிய கூட்டாட்சி நாடுகளிலும் இத்தகைய பூசல்கள் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பாவில் 17ஆம் நூற்றாண்டிலேயே ஆற்று நீர்த் தகராறுகள் எழுந்திருக்கின்றன. ஆஸ்திரியாவுக்கும், துருக்கிக்கும் இடையில் டான்யூப் நதியிலும், ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில் ரைன் நதியிலும், கப்பல் போக்குவரத்து நடத்துகின்ற உரிமைகள் குறித்துப் பூசல்கள் ஏற்பட்டன.

நதிநீர்ப் பூசல்களினால் போர்கள் கூட நடந்திருக்கின்றன. சோழப் பேரரசின் மன்னர்கள் ஆற்று நீர்ப் பூசல்களைத் தீர்க்க படையெடுத்துச் சென்றதை நினைவுகூர விரும்புகிறேன். ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. அதுபற்றியெல்லாம் பேச நான் விரும்பவில்லை. புத்தர் காலத்தில் வட ரோகிணி ஆற்றின் நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாகச் சாக்கியர்களுக்கும், கோலியர்களுக்குமிடையில் சண்டைகள் நடந்திருக்கின்றன. ரோகிணி நதிநீர்ப் பங்கீடு குறித்து சாக்கியர்களும், கோலியர்களும் கடும் போரிடுவதையும், நீருடன் கலந்து இரத்த ஆறு ஓடுவதையும் பற்றி கவுதம புத்தர் அறிந்தபோது அவர், இருதரப்பினருடனும் பேச்சு நடத்தினார். சுமூகமான உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. அவர் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். அவர் தேவையான ஒரு காரியத்தைச் செய்தார். நீண்டகாலப் பூசலை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினருக்குமிடையில் இணக்கம் ஏற்படுத்துவதில் கவுதம புத்தர் வெற்றி கண்டார்.

வட அமெரிக்காவில் அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் ரியோ கிராண்ட் - கொலராடோ ஆறுகள் குறித்தும், தென் அமெரிக்காவில் அமேசான் மற்றும் டெல் பிளாட்டா வடிநிலம் குறித்தும் பல தகராறுகள் எழுந்தன. ஆப்பிரிக்காவில் நைல் நதி நீர்ப் பங்கீடு குறித்து முக்கியமாக சூடானுக்கும், எகிப்துக்கும் இடையில் பூசல் எழுந்தது. இந்தத் தகராறில் ஏழு பிற நாடுகளும் தொடர்பு கொண்டிருந்தன. மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜர், செனிகால் ஆறுகள் பற்றிய தகராறுகள் எழுந்தன.

தென் கிழக்கு ஆசியாவில் கீழ் மேக் லிங் வடிநிலத்தில் கூட்டு ஏற்பாடுகளுக்கு லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகள் தரப்பினர்களாக உள்ளன. அமெரிக்காவில் டெலாவர், லூராமி ஆறுகள் தொடர்பான நிலங்களிடையிலான பூசல்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் முர்ரே ஆற்று வடிநிலம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களுக்கிடையே எழுந்த பூசல்களுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கின்றது. கனடாவில் மானிட்டோயா, ஆல்மெட்டா, சாஸ்ஜெட்சிவான் ஆகிய மாநிலங்களுக்கிடையே சாஸ்ஜெட்சிவான் நதி குறித்து எழுந்த தகராறு தீர்க்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளிடையே ஓடும் நதிகள் தொடர்பாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஒரு நாட்டிற்குள் ஓடும் ஆறுகள் பற்றிய பூசல்களைத் தீர்ப்பதில் என்ன சிரமம் இருக்க முடியும்? நைல் நதி நீர் தொடர்பாக எகிப்துக்கும் சூடானுக்கும், இடையிலான தகராறு தீர்க்கப்பட்டுவிட்டது. அதேபோன்று, இந்தியாவில் ஓடும் ஆறுகள் தொடர்பான தகராறுகளுக்கு இணக்கமான இறுதித் தீர்வு காண்பதற்கு ஆறுகளின் நீர் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்துடன்தான், கடந்த காலத்தில் உலகெங்கும் நதிநீர்ச் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்பட்டன என்பதை இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.
(தொடரும்)

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -1

(5 மே 2000 அன்று நாடாளுமன்றத்தில் மசோதாவைத்



தாக்கல் செய்தபோது வைகோ ஆற்றிய உரை )

தீர்வு என்ன?

உலகெங்கும் பல்வேறு நாடுகளிடையே ஓடும் நதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்போது ஒரே நாட்டுக்குள் ஓடும் ஆறுகள் பற்றிய பூசல்கள் தீர்ப்பதில் என்ன சிரமம் இருக்க முடியும் ?

வைகோ

மாநிலங்களிடையே ஒடுகின்ற நதிகளை நாட்டுடைமையாக்கக்கோரி நாடாளுமன்றத்தில் தாம் கொண்டு வந்த தனிநபர் மசோதா மீது தொடர்ச்சியாக நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று மறுமலர்ச்சி தி.மு.கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 11.08.2000 அன்று ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-

அவைத் தலைவர் அவர்களே, மாநிலங்களிடையே ஒடுகின்ற நதிகளை நாட்டுடைமையாக்குவது பற்றி இந்த மசோதா மீதான விவாதத்தை நான் தொடங்கி வைத்த அன்று மாநிலங்களுக்கிடையேயான ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்டேன். அதில் இரண்டு பிரச்சினைகள் மிக முக்கியமானவை. ஒன்று பஞ்சாப், ஹரியாணா,இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கிடையிலான ரவி-பியாஸ் ஆற்றுநீர்த் தகராறு. மற்றொன்று தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், மத்திய ஆட்சிப்பகுதியான பாண்டிச்சேரி ஆகியவற்றுக்கு இடையிலான காவிரி நதிநீர்ப் பிரச்சினை.

இவற்றில் ரவி-பியாஸ் ஆற்றுநீர்ப் பூசல், மாநிலங்களிடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டத்தின் வரைமுறைகளின்படி 1986 ஏப்ரல் மாதம் நடுவர் தீர்ப்புக்காகத் தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது. காவிரிப் பிரச்சனை 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு விடப்பட்டது. ரவி-பியாஸ் ஆற்றுநீர்ப் பூசல் தீர்ப்பாயம் தனது தீர்ப்பு அறிக்கையை 1987 ஜனவரி 30 அன்று அளித்தது. அந்தத் தீர்ப்பின் மீது இருதரப்பு மாநிலங்களும், மத்திய அரசும் 1956 ஆம் ஆண்டு மாநிலங்களிடை ஆற்றுநீர்ப் பிரச்சினைகள் சட்டத்தின் 3 ஆம் பகுதியின் 5ஆம் பிரிவின்படி விளக்கமும், வழிகாட்டும் நெறியும் கோரியுள்ளன.

தீராத பிரச்சினை

காவிரி நடுவர் மன்றம் 1991 ஜூன் 25 அன்று ஓர் இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. ஆனால், முதன்முறையாகக் கர்நாடக மாநிலம், ஆளுநர் வாயிலாக இந்த இடைக்கால ஆணையின் நோக்கத்திற்கு எதிராக இரு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும், இது மத்திய-மாநில அரசுகளிடையே இன்னும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இந்த நாட்டின் உணர்வுபூர்வமான ஒருமைப்பாடு, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் நாம் பேசுகிறோம். அப்படி உண்மையான, உணர்வுபூர்வமான தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே இந்த மசோதாவை நான் முன்மொழிந்திருக்கிறேன்.

ஆறுகளின் பலன் நாடு முழுவதற்கும், அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்களிடையே ஓடுகின்ற ஆறுகளை நாட்டுடைமையாகக் வேண்டுமென்று இந்த மசோதா வலியுறுத்துகிறது. இந்தப் பிரச்சனை மீது, இந்த அவையின் உறுப்பினர்கள், கட்சி பேதமின்றித் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

விலை மதிப்பில்லாத சொத்து

நீர் என்பது விலைமதிப்பிடற்கரிய ஒரு தேசியச் சொத்து. நீர்வளங்களைப் பயன்படுத்துவது குறித்துத் திட்டமிடுவதும், மேம்படுத்துவதும் தேசியக் கண்ணோட்டத்துடன் நடைபெற வேண்டும் என்ற குறிக்கோளை தேசிய நீர்க் கொள்கை உள்ளடக்கியிருக்கிறது. இந்தத் தேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை? முதலாவதாக, நீரானது விலைமதிப்பிட முடியாத ஒரு தேசிய வள ஆதாரம். இதனை மேம்படுத்துவது தேசியக் கண்ணோட்டத்துடனேயே நடைபெற வேண்டும்.

கிடைக்கின்ற நீர்வளங்கள் மேல்மட்ட நீராயினும், நிலத்தடி நீராயினும் அவற்றை எத்துணை அதிக அளவு பயன்படுத்த முடியுமோ அத்துணை அதிக அளவு பயன்படுத்த வேண்டும். நீர் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்குப் பிற பகுதிகளிலிருந்து உபரி நீரைக் கொண்டு செல்ல வகை செய்ய வேண்டும். இதில், ஒரு ஆற்று வடிநிலப் பகுதியிலிருந்து அந்த வடிநிலத்தின் தேவைகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட பின்னர் உபரி நீரை மற்றொரு வடிநிலத்துக்கு மாற்றுவதும் உள்ளடங்கும்.

நீர் ஒதுக்கீட்டில் பொதுவாகக் குடிநீருக்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும். அடுத்து நீர்ப் பாசனம், புனல் மின்விசை, பிற பயன்பாடுகள் இதே வரிசையில் இடம்பெறுதல் வேண்டும். இதில் நீர்வழிப் போக்குவரத்தும் முக்கியப் பங்குப் பணியாற்ற முடியும். அனைத்து ஆறுகளையும் நாட்டுடைமையாக்கிவிட்டால் -அந்த நோக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுமானால் - போக்குவரத்துச் செலவு மிகவும் மலிவாக அமையும்.

ஆறுகளை இணைத்தல்

புகழ்பெற்ற பொறியியல் வல்லுநரும், மத்திய அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக விளங்கியவருமான டாக்டர் கே.எல். ராவ் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே ஆறுகளை இணைப்பதற்கான ஓர் ஆலோசனையைக் கூறினார். அப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சகமாக இருந்தது, இப்போது ‘நீர்வளத்துறை அமைச்சகம்’ என அழைக்கப்படுகிறது. ஆறுகளை இணைப்பது குறித்து அவர் 1960 களில் ஓர் அறிக்கை அளித்தார்.

பாட்னாவுக்குச் சற்று மேற்கே தொடங்கிப் பல தொடர் கால்வாய்களை வெட்டி, பருவ காலங்களில் கங்கை ஆற்றிலிருந்து வடிந்தோடும் உபரி நீரின் ஒரு பகுதியைக் காவிரிக்குக் கொண்டு செல்லலாம் என்று 1960 களின் இறுதியில் அவர் ஒரு திட்டத்தைத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தில் ஓர் உணர்வுபூர்வமான அம்சமும் அடங்கியிருக்கிறது. கங்கை - காவிரி இணைப்பு குறித்து வெகுவாகப் பேசப்பட்டதை நான் நினைவு கூர்கிறேன்.

கங்கை நதிப்புறத்து மக்களைக் காவிரி வடிகால் பகுதி மக்களுடன் பிணைப்பதால் நாடு வளங்கொழிக்கும் என்னும் கருத்து நெடுநாட்களாக நிலவி வருகிறது. அமரகவி சுப்பிரமணிய பாரதியார் இவ்வாறு கனவு கண்டார். ஆனால், என்ன நேர்ந்தது? டாக்டர் ராவ் அமைச்சர் பதவியிலிருந்து நீங்கிய சிறிது காலத்திற்குப் பிறகு அவருடைய திட்டத்திற்கான செலவு குறைத்து மதிப்பிடப்பட்டு விட்டதாக நினைத்தார்கள்.

அதனால், அவர்கள் கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் குறித்து மற்றொரு ஆய்வு நடத்தினார்கள். கங்கை நீரை இந்தியாவெங்கும் கொண்டு செல்வது நடைமுறையில் இயலாத காரியம் என்றும், அதற்கு அபரிமிதமாகச் செலவாகும் என்றும், ஏராளமான அளவு மின்விசை தேவைப்படும் என்றும் இந்த ஆய்வுக்குழுவினர் முடிவுக்கு வந்தனர். எனவே, இத்திட்டம் இறுதியாகக் கைவிடப்பட்டது.

தென்னிந்திய ஆறுகளை இணைத்தல்

இதற்குப் பதிலாக, நீர்வளங்களை மேம்படுத்துவதற்கான தேசியக் கண்ணோட்டத்துடன் ஒரு திட்டத்தை வகுத்தார்கள். இது இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. ஒன்று, ‘இமாலய ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம்’ ( Himalayan Rivers Development ) என்றும், இரண்டாவது ‘தீபகற்ப ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம்’ ( Peninsular Rivers Development ) என்றும் அழைக்கப்பட்டன. தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை என்னும் பெயரில் ஒரு தன்னாட்சி அமைவனம் 1981 இல் நிறுவப்பட்டது. இந்த அமைவனம் முதலில் தீபகற்ப ஆறுகளுக்கான திட்டத்தை வகுத்தது. இது, வடக்கிலுள்ள மகாநதி, நர்மதா,கோதாவரி ஆகிய ஆறுகளை தெற்கிலுள்ள காவிரி, வைப்பாறு, தாமிரபரணி வரையிலான ஆறுகளுடன் இணைக்க வகை செய்தது. நீர்வளம் உபரியாக உள்ள பகுதிகளிலிருந்து நீர்ப் பற்றாக்குறையாகவுள்ள பகுதிகளுக்கு உபரி நீரைக் கொண்டு செல்வதற்கு ஏராளமான இணைப்புக் கால்வாய்களை அமைக்கலாம் என்று தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை ஆலோசனை கூறியது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பஸ்தார் வட்டாரத்தில் உற்பத்தியாகும் மகாநதி, சம்பல்பூர் அருகே ஒரிசாவுக்குள் நுழைகிறது. இந்த சம்பல்பூர் அருகில்தான் ஹிராகுட் அணை கட்டப்பட்டுள்ளது. பாசனத்துக்காகவும், புனல்மின் உற்பத்திக்காகவும், வெள்ளக் கட்டுப்பாட்டுக்காகவும் நீரைத் தேக்கி வைப்பதற்காக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையைக் கட்டியபிறகும், இந்த ஆற்றில் போதிய நீர் உள்ளது. குறிப்பாக, பருவ காலங்களில் நீர் மிகையாக இருக்கிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும்போது, கட்டாக் நகருக்கு அடிக்கடி மகாநதியினால் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் எற்படுகிறது.

தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மையின் திட்டப்படி, முதலில் மகாநதியின் குறுக்கே மணிபந்திரா என்னுமிடத்தில் ஓர் அணை கட்டவேண்டும். அங்கிருந்து மகாநதியின் உபரி நீராகிய 1,11,500 மில்லியன் கனமீட்டர் நீரில், 8,000 மில்லியன் கனமீட்டரை ஒரு புவியீர்ப்புக் கால்வாய் மூலம் கோதாவரி ஆற்றுக்குத் திருப்பிவிடலாம். இதற்கு வழியில் நீர் இறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நீரைத் தவுலேஸ்வரம் அணை அருகே கொண்டுபோய் விடலாம்.

இப்போதுள்ள தவுலேஸ்வரம் அணையின் மேற்பகுதியில் கோதாவரி, போலாவரம் குறுக்கே மற்றொரு அணையைக் கட்டி, 21,550 மில்லியன் கனமீட்டர் நீரைக் கிருக்ஷ்ணா நதிக்குக் கொண்டு செல்லலாம். இதில், கோதாவரியின் உபரிநீராக மதிப்பிடப்பட்டுள்ள 15,000 மில்லியன் கனமீட்டர் நீரும், மகாநதியிலிந்து தவுலேஸ்வரத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படும். 6,500 மில்லியன் கனமீட்டர் நீரும், வழியில் ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீ காகுளம், விசாகப்பட்டினம் மாவட்டங்களில் பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் 1,500 மில்லியன் கன மீட்டர் நீரும் உள்ளடங்கும்.

இதன்பின், அடுத்த இணைப்புகள் வருகின்றன. இதன்படி, கோதாவரியிலிருந்து உபரிநீரை கிருக்ஷ்ணா நதிக்குத் திருப்பி விடுவதற்கான மூன்று இணைப்புகள் அமைக்கத் திட்டம் வகை செய்கிறது. முதலாவதாக, பிரகாசம் அணை அருகே 1,200 மில்லியன் கன மீட்டர் நீரைக் கொண்டு சேர்ப்பதற்காக, போலாவரம்-விஜயவாடா இணைப்பு அமைத்தல்;இரண்டாவதாக, 4,370 மில்லியன் கன மீட்டர் நீரைக் கொண்டு செல்ல இச்சம்பள்ளி - புளிச்சிந்தலா இணைப்பை ஏற்படுத்துதல்; கிருக்ஷ்ணா ஆற்றின் குறுக்கேயுள்ள நாகார்ஜூனசாகர் அணைக்குக் கிழக்கே புளிச்சிந்தலா உள்ளது. கோதாவரியின் குறுக்கே இச்சம்பள்ளி அணைகட்டும் திட்டம் பல பத்தாண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டது. மூன்றாவதாக, இச்சம்பள்ளி - நாகார்ஜூனசாகர் இணைப்பு. இது, சுமார் 14,000 மில்லியன் கன மீட்டர் நீரை நாகர்ஜூன சாகர் அணைக்குக் கொண்டு செல்லும்.

நாகார்ஜூனசாகர் அணையிலிருந்து பெண்ணாற்றின் குறுக்கே இப்போதுள்ள சோமசீலா அணைக்கு 12,000 மில்லியன் கன மீட்டர் நீரை மாற்றலாம். அதில் 9,800 மில்லியன் கன மீட்டர் நீரைக் காவிரிக்குக் கொண்டு செல்லலாம். எனவே, மகாநதியிலிருந்து நீரைக் காவிரிக்குக் கொண்டு சென்று, இந்த ஆற்றிலுள்ள பேரணையில் (கல்லணை) சேர்த்துவிட முடியும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப் பேரரசன் கரிகால் வளவன் இந்த அணையைக் கட்டினான். இன்று இந்தப் புத்தாயிரமாண்டின் நுழைவாயிலில் இதுபற்றிப் பேசுகிறோம். ஏனென்றால், நாம் அடுத்த தலைமுறைக்காக - அடுத்த நூற்றாண்டுக்காகத் திட்டமிட வேண்டியிருக்கிறது.

வழியில், பாசனத் தேவைகளையும், சென்னை நகருக்குக் குடிநீர் வழங்குவதையும் கவனத்தில் கொள்ளுமிடத்து, கடைசியாகச் சென்றடையும் நீரின் அளவு 5,000 மில்லியன் கன அடிதான் இருக்கும். இதில் 3,000 மில்லியன் கன அடி நீர் காவிரி வடிகால் பகுதியில் பயன்படுத்திக் கொள்ளப்படும். 200 மில்லியன் கன அடி நீரை இன்னும் தெற்கே, புனித நகரம் அமைந்துள்ள வைகை ஆற்றுக்குக் கொண்டு செல்லலாம்.
(தொடரும்)

நதி நீர் இணைப்பு - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -2

கங்கை - காவிரி இணைப்பு!


இந்த அவையிலுள்ள மாண்புமிகு உறுப்பினர்கள் - குறிப்பாக திரு. சிவராஜ் பாட்டீல் போன்ற மூத்த உறுப்பினர்கள் - கங்கை - காவிரி இணைப்பு பற்றிய செய்தி, பத்திரிகைகளில் பெரிதும் அடிபட்டுவந்ததை நினைவிற் கொள்வர் என்று நம்புகிறேன். இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடந்தன; அரசியல் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

“கங்கை - காவிரி இணைப்பு மூலம் உணர்வு பூர்வமான ஒருமைப்பாடு உருவாகும்” என்று 1960களில் ஏறத்தாழ பத்தாண்டுக் காலம் இந்திய அரசின் அமைச்சராகத் திகழ்ந்தவரும், தலைசிறந்த பொறியியல் வல்லுநருமான டாக்டர் கே.எல். ராவ் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது. கங்கை - காவிரி கால்வாய் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் தந்தை என்று அவர் போற்றப்பட்டார். அவர் இதுபற்றி தீர்க்கமாக ஆய்வு செய்து தனது திட்டத்தை அளித்தார்.

இந்தத் திட்டத்தில், கங்கை நீரை இந்நாட்டின் தென்கோடி முனைவரைக் கொண்டு செல்ல முடியும் என்றும், அனைத்து ஆறுகளையும் இணைக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் என்ன நடந்தது? அந்தத் திட்டத்தை நிபுணர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டனர். இத்திட்டத்தை நிறைவேற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

விந்தியமலைகளுக்கு அப்பால் நதிநீரைக் கொண்டு செல்லவேண்டும் என்றும், இதற்கு ஏராளமான மின்விசை தேவைப்படும் என்றும், இதற்கு ஏராளமான பணம் செலவாகும் என்றும் அவர்கள் காரணம் கூறினர். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடுவதைத் தாங்கமுடியாது என்றும் கூறினர். அவர்களது கருத்தையே அரசும் ஏற்றுக் கொண்டது. எனவே, இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், நீர்ப்பாசனத் துறை அமைச்சகம் - தற்போது நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் இரண்டும் இணைந்து இப்போது டாக்டர் கே.எல். ராவ் வகுத்தளித்த அறிக்கையின் அடிப்படையில், நீர்வள ஆதாரங்கள் மேம்பாட்டுக்கான ஒரு தேசிய முன்னோக்குத் திட்டத்தை வகுத்துள்ளன.

நீர்வள ஆதாரங்களை உகந்த அளவில் பயன்படுத்திக் கொள்வதற்காக, உபரி வடிநிலங்களிலிருந்து நீர்ப்பற்றாக்குறையாகவுள்ள வடி நிலங்களுக்கு உபரி நீரை மாற்றுகிற வகையில் பல்வேறு தீபகற்ப நதிகளையும், இமாலய ஆறுகளையும் ஒன்றோடொன்று இணைக்கலாம் என்று இந்தத் திட்டம் கூறுகிறது. நீர்ச்சம நிலையை நிலைநாட்டுவதற்காகவும், பிற தேசியக் கண்ணோட்டத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காகவும் 1982 ஜூலையில் ‘தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை’ ( National Water Development Agency ) என்னும் ஒரு தன்னாட்சிக் கழகத்தை இந்திய அரசு நிறுவியது.

அவைத்தலைவர் அவர்களே! முந்தைய நீர்ப்பாசனத் துறை அமைச்சகமும் - தற்போது நீர்வளத்துறை அமைச்சகமும் - மத்திய நீர்வள ஆணையமும், நீர்வள ஆதாரங்கள் மேம்பாட்டுக்கான தேசிய முன்னோக்குத் திட்டத்தை வகுத்தபோது, அத்திட்டத்தில் இரு முக்கிய பகுதிகள் அடங்கியிருந்தன. இதில் முதலாவது, இமாலய நதிகள் மேம்பாடு; இரண்டாவது தீபகற்ப ஆறுகள் மேம்பாடு; அது இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தீபகற்ப நதிகளையும், இமாலய நதிகளையும் இணைப்பதற்கான திட்டத்தை வகுப்பதற்காக இந்திய அரசு, ஒரு தேசிய நீர்மேம்பாட்டு முகவாண்மையையும், தீபகற்ப மேம்பாட்டு முகவாண்மையையும் நிறுவியது.

இது மிக முக்கியமானதாகும். முதலில், இமாலய ஆறுகளின் மேம்பாடும், இரண்டாவதாக, தீபகற்ப நதிகள் மேம்பாடும், பின்னர் இந்த இமாலய ஆறுகளையும், தீபகற்ப ஆறுகளையும் இணைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும். 1982இல் தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மையை இந்திய அரசு அமைத்தது.

தீபகற்ப ஆறுகள் திட்டம்!

ஐயா! இப்போதைய ஆணைக் கட்டளையின்படி, இந்த இணைப்புகள் பற்றிய செயலாக்கச் சாத்திய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். இதற்கென, ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உரிய வகைமுறை செய்யப்பட்டுள்ளது. நான், ‘தீபகற்ப ஆறுகள் திட்டம், இமாலய ஆறுகள் திட்டம்’ஆகிய இரு திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். தீபகற்ப ஆறுகள் திட்டத்தில்தான் நான் முக்கியமாக அக்கறை கொண்டிருக்கிறேன். ஏனென்றால், இது மகாநதி, கோதாவரி போன்ற அனைத்து ஆறுகளையும் காவிரியுடன் இணைப்பதற்கு வழி செய்கிறது.

மாநிலங்களிடையிலான நதிநீர்ப் பூசல்கள் - அதாவது, பஞ்சாப், அரியாணா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கிடையிலான ரவி - பியாஸ் நீர்ப் பூசல்; தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கிடையிலான காவிரி நீர்ப்பூசல் - 1956ஆம் ஆண்டு மாநிலங்களிடை நீர்ப்பூசல்கள் சட்டத்தின் கீழ் நடுவர் தீர்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளன.

தலைவர் : இப்போது, அரைமணிநேர விவாதத்தை எடுத்துக் கொள்வோம்.

திரு. வைகோ அவர்களே! உங்கள் உரையை அடுத்த முறை தொடரலாம்.

திரு. வைகோ : அவைத்தலைவரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

நதி நீர் இணைப்பு - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -1

நதி நீர் இணைப்பு - வைகோ

நம்நாட்டில் ஏராளமான நதிகள் பல மாநிலங்களிடையே ஓடுகின்றன .அதிக அளவிலான நீர் பயன்படுத்தப்படாமலேயே ,கடலில் கலந்து வீணாகின்றது .இந்த ஆறுகளின் நீர்வளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் ஒரு முன்னோக்குத் திட்டத்தை வகுத்தோமானால் நம்நாட்டின் வளமான வேளாண்மைச் செல்வத்துடன் உலகிலேயே நாம் தலையாய பொருளாதார வல்லரசாகத் திகழ முடியும் . வைகோ .


அவைத் தலைவர்: இப்போது, மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளை நாட்டுடைமையாக்குதல் மசோதாவை (1999) எடுத்துக் கொள்வோம். திரு. வைகோ அவர்களைப் பேச அழைக்கிறேன்.

திரு. வைகோ (சிவகாசி): நதிநீரை மாநிலங்களிடையே சரிசமமாகப் பகிர்ந்தளிப்பதற்கான நோக்கத்துக்கும், அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கும் மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளை நாட்டுடைமையாக்குவதற்கு வகை செய்வதற்கான இந்த மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென முன்மொழிகின்றேன்.

தலைவர் அவர்களே! நான் பல மாதங்களாக ஏங்கிக் கொண்டிருந்த இந்த வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பன்னிரண்டாவது மக்களவையில் இந்த மசோதா முன்மொழியப்பட்டது. ஆனால், எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏனென்றால், அப்போது இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் ரகுவன்க்ஷ் பிரசாத் சிங் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். அது மிகவும் முக்கியமான, கவனத்துக்குரிய ஒரு மசோதாவாகும். எனினும் அவர் என்னுடைய இந்த மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வழிவிட்டுத் தன் உரையைச் சுருக்கிக் கொண்டார். அதற்காக அவருக்கு என் நன்றி!

வளங்கொழிக்கும் நாடு!

ஐயா! நம் நாடு எழில் மிகுந்த நாடு; உலகிலேயே இணையற்ற வளங்கள் நிறைந்த நாடு. பனிமூடிய மலைச் சிகரங்கள் - அழகிய வற்றாத நதிகள் - முக்கடல்கள் - குறிப்பாகத் தென்கோடியைச் சூழ்ந்த தீபகற்பம் - பரந்து விரிந்த இயற்கை நிலப்பரப்பு- பெரும் மக்கள் தொகை - இத்தனையும் கொண்டது இந்திய நாடு. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இன்னும் ஐந்தாண்டுகளுக்குள், மக்கள் தொகையில் நாம் சீனாவை விஞ்சிவிடுவோம்.

ஆனால், தலைவர் அவர்களே! அழகிய இயற்கை நிலக்காட்சிகள், பனிமூடிய மலைச் சிகரங்கள், அளவற்ற கடல் செல்வம் ஆகியவற்றை நான் வருணித்த அதே சமயத்தில், இலட்சக்கணக்கான மக்கள் தாங்கவொண்ணா வறட்சியினால் - அவலத்துக்குள்ளாவதையும் என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக, அண்மைக் காலமாக, குஜராத், இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் நிகழ்கிற காட்சிகளை தூர்தர்ஷனிலும், பிற சம்பவங்களை தொலைக்காட்சிகளிலும் பார்த்தபோது நாம் பெரிதும் அதிர்ச்சியடைந்தோம். உழவர்களின் கண் முன்னாலேயே கால்நடைகள் செத்து விழுகின்றன. உழவர்கள் இந்தக் கால்நடைகளைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போல் எவ்வாறு பேணி வளர்க்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

வறட்சி பாதித்த இந்த மாநிலங்களில் பல இடங்களில் ஏராளமான கால்நடைகளின் சடலங்கள் கிடப்பதைக் காண்கிறோம். குடிநீர் இல்லாமல் இவை செத்திருக்கின்றன. குடிநீர்ப் பற்றாக்குறை காரணமாக மக்களும் அவதிப்படுகிறார்கள்.

பல்லாண்டுகளுக்கு முன்பு, பி.எல்.-480 திட்டத்தின் கீழ் அயல்நாடுகளிலிருந்து உணவு தானியங்களுடன் பெரிய கப்பல்கள் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இன்று, உணவு தானியங்களில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதியும் செய்து வருகிறோம். இதற்கான பெருமை நமது உழவர் பெருமக்களையே சாரும்.

இப்போது, இந்தப் புத்தாயிரமாவது ஆண்டில், உலகில் ஒரு பொருளாதார வல்லரசாக நாமும் உருவாக வேண்டும் என்ற குறிக்கோளுடன், மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு வருகிறோம். நம் நாட்டில் அளவற்ற வளவசதிகள் உள்ளன. “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?” என்பது முக்காலும் உண்மை. இலட்சோப இலட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உண்டு. ஆனால், இவற்றின் பாசனத்துக்கு நீர் தேவை.

வீணாகும் நதிநீர்!

அவைத்தலைவர் அவர்களே, நம்நாட்டில் ஏராளமான நதிகள் பல மாநிலங்களிடையே ஓடுகின்றன; பிறகு கடலோடு கலந்துவிடுகின்றன. பெரும்பாலான நீர் பயன்படுத்தப்படாமலேயே, கடலில் கலந்து வீணாகின்றது. இந்த ஆறுகளின் நீர்வளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் ஒரு முன்னோக்குத் திட்டத்தை வகுத்தோமானால், நம் நாட்டின் வளமான வேளாண்மைச் செல்வத்துடன் உலகிலேயே நாம் தலையாய பொருளாதார வல்லரசாகத் திகழ முடியும்.

நதிகளை நாம் மிகுந்த பயபக்தியுடன் சமயப்பற்றுடன் - ஆராதிக்கின்றோம். நம் நாட்டு ஆறுகளைப் பெண்களின் பெயர்களால் அழைக்கிறோம். நதிகளை பெண் தெய்வங்களாகவே போற்றுகிறோம். இராமாயண இதிகாசத்தில் கூட, இராமபிரான் கங்கைச் சமவெளிகள் வழியே சென்றதாகவும், கோதாவரி முதலிய ஆறுகளைக் கடந்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆறுகளின் பெருவாரியான நீர் வீணாக்கப்படுகிறது. மாநிலங்களிடையே பாயும் சில ஆறுகளின் நீரினைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாகப் பூசல்களும் எழுந்துள்ளன.

பல நாடுகளிடையே ஓடும் ஆறுகளும் உண்டு. மெக்சிகோ-அமெரிக்கா; ஃபிரான்ஸ்-ஜெர்மனி; சூடான்-எகிப்து; பாகிஸ்தான்-இந்தியா முதலிய நாடுகளின் வழியே பாயும் நதிகள் சில உள்ளன. ரவி, பியாஸ் நதிகளின் நீரைப் பங்கிட்டுக் கொள்வதற்காக ஒரு நதிநீர் உடன்படிக்கையும் உள்ளது. இந்த உடன்படிக்கையில் காலஞ்சென்ற ஜவகர்லால் நேருவும், தளபதி அயூப்கானும் கையெழுத்திட்டுள்ளனர். மாநிலங்களிடையிலான நதிநீர்ப் பூசல்களைத் தீர்ப்பதற்கு, நம் நாட்டில் மாநிலங்களிடையே ஓடும் ஆறுகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்க வேண்டும் என்று எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம்.

ஐக்கிய இந்திய நாடுகள் ( United State of India )

ஐயா! இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. அது ஒரு கூட்டாட்சி நாடாகவே இருக்க வேண்டும். இந்நாட்டை “இந்தியா, அதாவது, மாநிலங்களின் ஒன்றியம்” என்பதற்குப் பதிலாக “இந்திய ஐக்கிய நாடுகள்” ( United States of India ) என்று அழைத்தால் நான் மகிழ்ச்சியடைவேன். அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். மாநிலங்களிடையே ஓடும் ஆறுகள் அனைத்தின் மீதும் மத்திய அரசே உரிமையும், கட்டுப்பாடும் கொண்டிருக்க வேண்டும் என்றும், நதிநீர் ஒதுக்கீடு தொடர்பாக முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஓர் ஒழுங்குமுறைக்கிணங்க நதிநீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு செய்வதால், தொடர்புடைய மாநிலங்களின் நலன்களுக்குக் குந்தகமின்றி, பல்வேறு மாநிலங்களிடையே நதிகளின் நீரைப் பகிர்மானம் செய்வதற்கு உதவும். அது மட்டுமின்றி, நம் கைவசமுள்ள நீர்வள ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும் இது உதவும்.

பொருளாதார இழப்பு!

வட மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு எதுவும் ஏற்படாத காரணத்தால், 8000 மெகாவாட் புனல் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பினை இழந்து வருகிறோம்; அத்துடன் மிகப் பெருமளவில் பாசன வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கலாம். இந்தக் காரணங்களால், நமது பொருளாதாரம் ஆண்டுதோறும் ரூ. 12,000 கோடி முதல் ரூ. 14,000 கோடி வரை நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது.

இந்த நாட்டில், காவிரி நதிநீர்ப் பூசல், கிருக்ஷ்ணா நதிநீர்ப்பூசல், சர்தார் சரோவர் அணைப் பூசல் போன்ற முக்கியமான நதிநீர்ப் பூசல்கள் நிலவிவருகின்றன. பஞ்சாப், அரியாணா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிடையே மேலும் ஆறு நதிநீர்ப் பூசல்களும் இருந்து வருகின்றன; இப்பூசல்கள் தற்போது தீர்வு முறையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. இந்தப் பூசல்கள் ஒவ்வொன்றும், உரியகாலத்தில் முறையாகத் தீர்க்கப்படாவிட்டால், உணர்ச்சியைத் தூண்டிவிடும் கடும்பிரச்சினையாக மாறிவிடக்கூடும்.

கடந்த 18 ஆண்டுகளில், மாநிலங்களிடையிலான நதிநீர்ப் பூசல்கள், எண்ணிக்கையளவிலும், உணர்ச்சியைத் தூண்டும் அளவிலும் அதிகரித்து வந்திருக்கின்றன. 2025ஆம் ஆண்டுவாக்கில், நம் நாட்டில் தனிநபர் ஒருவருக்குக் கிடைக்கும் நீரின் அளவு மிகக் குறைவாக ஆண்டுக்கு 1,500 கன அடியாக இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால், இனிவரும் ஆண்டுகளில் மாநிலங்களிடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளை இன்னும் ஏராளமாக நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்தப் பொருள்பற்றி ஒரு தலைச் சார்பின்றி - அரசியல் கட்சி நோக்கமின்றி - நடுநிலைக் கண்ணோட்டத்துடன் நான் பேசுகிறேன். எந்த அரசாங்கத்தையும் - எந்த அரசியல் கட்சியையும் - எந்த மாநிலத்தையும் தாக்கிப் பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. ஏனென்றால், காவிரி நதிநீர்ப் பூசலினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரில் நானும் ஒருவன். இந்தப் பூசலினால் எனது மாநிலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த ஒரு மாநிலத்தையும் கண்டிப்பதற்கு இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ளப் போவதில்லை.

தேசிய நதிநீர்க் கொள்கை தேவை!

தற்போது மாநிலங்களிடையே ஓடும் நதிகளின் நீர்பற்றி நிலவிவரும் பூசல்களிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இப்போதுள்ள நதிநீர்ப்பூசல் தீர்வு செயல்முறையும், 1956ஆம் ஆண்டு மாநிலங்களிடையே நதிநீர்ப் பூசல்கள் சட்டமும் போதியனவாக இல்லை; அவை பயனளிக்கவில்லை; திறம்படச் செயற்படவில்லை. 1987ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய நீர்க் கொள்கையும் அவ்வாறே பயன்படவில்லை.

எனவே, மாநிலங்களிடையே நதிநீர்ப் பூசல்கள் சட்டத்தை, அது மாநிலங்களிடையிலான நதிநீர்ப் பூசல்களை உடனடியாகத் தீர்ப்பதற்கான ஒரு திறன் வாய்ந்த சட்டமுறை ஆவணமாக விளங்கும் வகையில் திருத்துவது அவசரமும் அவசியமும் ஆகும்.

அதேபோன்று, வடிநில மாநிலங்களிடையே நதிநீரைப் பகிர்ந்தளிப்பதற்கான வழிமுறைகளை உள்ளடக்கும் வகையில் தேசிய நதிநீர்க் கொள்கையையும் மேம்படுத்த வேண்டும். மேலும், நாட்டின் அரிதான நீர்வள ஆதாரங்களை உகந்த அளவில் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஒரு கொள்கைக் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.

(தொடரும்)

திருநீறு

எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. (24.6.1928 குடிஅரசு)


விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-

நீறு புனைவார் வினையை

நீறு செய்தலாலே

வீறுதனி நாமமது

நீறென விளம்பும்

சீறு நரகத்துயிர்

செலாவகை மருந்தாய்க்

கூறுடைய தேவிகையில்

முன்னிறை கொடுத்தார்.



இதன்பொருள்:- திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒருமருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.



சிவபுராண புளுகு



கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது. அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவபுராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.



பாவத்திற்குப் பரிகாரம்



தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேசவாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத்துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே. இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன்றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ!



அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும்போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?